Published : 24 Dec 2019 07:38 AM
Last Updated : 24 Dec 2019 07:38 AM

வறட்சியிலிருந்து இந்தியா பாடம் கற்றிருக்கிறதா?

நாடு முழுவதிலும் 2019 கோடைக் காலத்தில் ஏற்பட்ட கடுமையான தண்ணீர்ப் பற்றாக்குறையை அடுத்து, ‘ஜல் சக்தி அபியான்’ (ஜேஎஸ்ஏ) என்ற திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது. தண்ணீர்ப் பற்றாக்குறை மிகுதியாக உள்ள 255 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக அமல்படுத்தக்கூடிய, காலவரம்புள்ள திட்டத்தை அரசு அறிவித்தது. ‘மழை நீரைச் சேகரிப்போம்’ என்ற பிரச்சாரம் அதில் முக்கிய இடம்பெற்றது. இந்தப் பிரச்சாரத்துக்கு மத்திய, மாநில அரசுகள் பணம் ஒதுக்கும்படியாக இது வகுக்கப்படவில்லை. தண்ணீரைச் சேமிப்பதற்காகப் புதிய உத்தி எதையும் மத்திய அரசு வகுக்கவில்லை. ‘மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம்’போல இதை மக்களுடைய இயக்கமாக ஆக்குவது மட்டுமே அரசின் நோக்கமாக இருந்தது.

தருண் பாரத் சங்கம் என்ற தன்னார்வ அமைப்பு ராஜஸ்தான் மாநிலத்தின் ஆல்வார் மாவட்டப் பகுதிகளிலும், மகாராஷ்டிரத்தின் ராலேகான் சித்தி மாவட்டத்தில் அண்ணா ஹசாரே தலைமையிலான அமைப்புகளும் மழைநீரைச் சேமிப்பதிலும் தண்ணீரை வீடுகளுக்குப் பகிர்ந்தளிப்பதிலும் மேற்கொண்ட திட்டங்களைப் போல நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற அடிப்படையில்தான் ஜேஎஸ்ஏ கொண்டுவரப்பட்டது. கிராமங்களிலும் சிறு நகரங்களிலும் குட்டைகளையும் குளங்களையும் புதிதாக அமைப்பது, ஏற்கெனவே உள்ளவற்றை ஆழப்படுத்திக் கரைகளை உயர்த்திக் கட்டுவது, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த ஆங்காங்கே நிலத்தில் பள்ளங்களைத் தோண்டி அதில் சரளைக் கற்கள், செங்கல் கழிவுகள் போன்றவற்றை இட்டு நிரப்புவது ஆகியவை ஜேஎஸ்ஏ திட்டப் பணிகளில் முக்கியமானதாக இருக்கிறது. நீர்நிலை மேலாண்மைத் திட்டங்களுடனோ, நிலத்தடி நீர்மட்டம் தொடர்பான நீரியியல் வரைபடத்துடனோ ஜேஎஸ்ஏ இணைக்கப்பட்டதைப் போலத் தெரியவில்லை.

மாவட்டங்களால் நிர்வகிக்க முடியுமா?

தண்ணீர் வளம் தொடர்பான எதுவும் ஆற்றுப்படுகைகள் போன்ற நீர்வள அமைப்பை அடிப்படையாகக் கொண்டே திட்டமிடப்பட வேண்டும். மாவட்டங்களை மையமிட்டதாக இத்திட்ட வரையறை அமைக்கப்பட்டது இதன் பெரும் பலவீனம். மாவட்டங்களின் அரசியல், நிர்வாக எல்லைகள் ஆறுகள், ஏரிகள் போன்றவற்றின் நீர்ப்பிடிப்பு, நீர்த்தேக்க எல்லைகளுடன் பொருந்திவராது. அந்த மாவட்ட எல்லைக்குள் அனைத்தையும் ஒரே அதிகாரி கண்காணிப்பார். ஒன்றுக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் ஏரியோ ஆறோ பரந்துபட்டதாக இருக்கும்போது இந்த நிர்வாகத்தில் ஒருங்கிணைப்பும் ஒத்திசைவும் அமைவதில்லை. இதனால், ஒரே ஆற்றுப்படுகை பல நீர்த் துறைப் பிரிவுகளாகப் பிரிக்கப்படும். ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு விதமாக நீர்மேலாண்மை மேற்கொள்ளப்படும்.

ஆற்றுப்படுகையில் மழைப்பொழிவு எவ்வளவு, தரையில் வழிந்தோடும் நீரின் அளவு எவ்வளவு, ஆற்றில் கலப்பவை எவ்வளவு, நிலத்தடியில் ஊறுவது எவ்வளவு என்ற புள்ளிவிவரங்கள் மாவட்டங்களில் கிடையாது. அத்துடன் மழையளவு, மழை பெய்யும் நாள்கள், மழைக்காலப் பருவம் போன்ற தகவல்களும் எல்லா மாவட்டங்களிலும் பராமரிக்கப்படுவது கிடையாது. எனவே, சராசரியாகப் பெய்யும் மழையில் எவ்வளவு சேமிக்கப்பட முடியும், எவ்வளவு நீர்நிலைகளுக்குச் செல்கிறது, எவ்வளவு வீணாகிறது என்பதில் தெளிவு இருப்பதில்லை. நிலத்தடி நீர்மட்டம் தொடர்பான வரைபடங்களும் மாவட்டங்களில் கிடையாது. எனவே, பிற மாவட்டங்களுக்குப் போக வேண்டிய தண்ணீர் ஒரே மாவட்டத்தின் ஏரியிலோ குளத்திலோ சேமிக்கப்படுவதும் நடக்கிறது. இவையெல்லாம் நம் மாவட்ட நிர்வாகங்கள் எதிர்கொள்ளும் போதாமைகள்.

இந்தியாவின் பெரும்பாலான வடிநிலங்கள், அதிலும் குறிப்பாகத் தென்னிந்திய தீபகற்பத்தில் உள்ள ஆற்று வடிநிலங்களில், தண்ணீர் கிடைக்கும் அளவைப் போல பல மடங்குக்கு நீருக்குத் தேவை நிலவுகிறது. இதனால், நிலத்தடிநீர் தொடர்ந்து உறிஞ்சப்படுவதால், நீர் வற்றி வறண்டுவருகிறது. ஜேஎஸ்ஏ இதைக் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. எனவே, தரையில் வழிந்தோடும் நீரை, நிலத்தடி நீராகச் சேமித்துள்ளனர். சில இடங்களில் நிலத்தடிக்கு நீரே செல்லாமல், வழிந்தோடும் நீராகவே கடந்துசெல்லவும் அனுமதிக்கப்பட்டிருக்கிறது. இதற்கெல்லாம் மூல காரணம், ஆற்றுப்படுகைகள் குறித்த தகவல்களும் தரவுகளும் இல்லாத நிலையும், இதில் சுயாதிகாரத்துடன் செயல்படும் சுதந்திரம் அரசுத் துறைகளுக்கு இல்லாமையும்தான்.

எளிமையான கற்பிதங்கள்

ஜேஎஸ்ஏவின் நோக்கமும் லட்சியமும் பாராட்டத்தக்கவை. ஆனால், அதன் கற்பிதங்கள் பிழையானவை. உதாரணமாக, கிராமப்புற மக்களுக்கு மழைநீர் சேகரிப்பு பற்றித் தெரியாது, அவர்கள் தண்ணீரை வீணாக்குவார்கள் என்றெல்லாம் ஜேஎஸ்ஏ நம்புவது வெளிப்படுகிறது. குடிப்பதற்கும் விவசாயத்துக்கும் கால்நடைகளுக்கும் தண்ணீர் இல்லாவிட்டால் படும் துயரம் பெரிது என்று முதலில் அறிந்து அச்சப்படுகிறவர்களே கிராம மக்கள்தான். கிராமப்புறங்களில் நபர்வாரியாக 55 லிட்டர் தண்ணீர் போதும் என்று கருதும் அரசு டெல்லி, பெங்களூரு போன்ற மாநகரங்களில் வசிப்போருக்கு நபர்வாரியாக 135 முதல் 150 லிட்டர் வரை தேவை என்கிறது.

ஆகவே, ஏழைகளையும் கிராமப்புற மக்களையும் அணுகி, மழை நீரைச் சேமியுங்கள் என்று சொல்வது பொருத்தமில்லாதது. பெருநகரங்களிலும் சிறு நகரங்களிலும் வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீரை சுத்திகரித்து மறுபயன்பாட்டுக்குக் கொண்டுவராமல் ஏரிகள், குளங்கள், குட்டைகள், கிணறுகளில் கலக்க விட்டுவிட்டு கிராம மக்களிடம் போய், நீரைச் சேமியுங்கள் என்று சொல்வது மிகையான பிரச்சாரமாகவே இருக்கும்.

மழைநீர் சேகரிப்புக்காகக் குளம், குட்டை, ஏரிகளைச் சுற்றி மண்ணால் எழுப்பியிருக்கும் கரை கிராம மக்கள், கால்நடைகள், கிராமப்புற வாகனங்கள் ஆகியவற்றால் இடியவும் சிறு மழைக்குக்கூடக் கரையவும் வாய்ப்பு இருக்கிறது. இந்தக் கட்டுமானங்களைப் பொறியாளர்கள் மேற்பார்வையிடுகின்றனரா என்பதும் சந்தேகமே. அத்துடன் தண்ணீர் சேகரிப்பு, நீர்நிலைப் பராமரிப்பு என்று பல்வேறு துறைகளிடையே இதில் ஒருங்கிணைப்பும் கிடையாது. இதைவிட, தண்ணீர் அதிகம் தேவைப்பபடும் நெல், கரும்பு, வாழை ஆகியவற்றைச் சாகுபடி செய்து நிலத்தடிநீரை மேலும் வற்றச் செய்ய வேண்டாம் என்று விவசாயிகளிடம் கூறலாம். மழைக்குப் பிறகு கிடைக்கும் புதிய தண்ணீரில் 80% விவசாயத்துக்குத்தான் பயன்படுத்தப்படுகிறது என்பதால் இந்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது மிகவும் அவசியம்.

2019 கோடைக் காலத்தில் ஏற்பட்ட தண்ணீர்ப் பற்றாக்குறை இப்போது மறக்கப்பட்டுவிட்டது. அரசின் கொள்கை வகுப்பாளர்கள் அதிலிருந்து பாடம் கற்றதைப் போலத் தெரியவில்லை. எல்லாம் சரியாகிவிட்டது என்ற பாவனையில் அரசும் மக்களும் தங்களுடைய பழைய வேலைகளுக்குத் திரும்பிவிட்டனர்.

- ஜே.ஹர்ஷா, மத்திய தண்ணீர் வாரியத்தின் உறுப்பினர்.

© தி இந்து, தமிழில்: சாரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x