Published : 23 Dec 2019 07:00 AM
Last Updated : 23 Dec 2019 07:00 AM

செல்லாத வாக்குச்சீட்டுகள்: மடிப்பதில் கவனம் தேவை!

இரா.கார்த்திகேயன்

எளிய மனிதர்கள் அரசியல் அதிகாரம் பெற்று, கிராமப்புற மக்களுக்குச் சேவை செய்வதை அடிநாதமாகக் கொண்டதுதான் உள்ளாட்சித் தேர்தல். இவை கிராமங்களின் உண்மையான ஜனநாயகத் திருவிழா. இரண்டு கட்டமாக நடக்கவிருக்கும் இந்தத் தேர்தலில் 2 லட்சத்து 3 ஆயிரத்து 190 பேர் தேர்தல் களத்தில் உள்ளனர். 27 மற்றும் 30 ஆகிய இரு நாட்கள் தேர்தல் நடைபெறுகிறது.

2011-ல் நடந்த உள்ளாட்சித் தேர்தலுக்கு பிறகு, 8 ஆண்டுகள் கழித்து மீண்டும் இப்போது நடைபெறுகிறது. அதிலும் இரண்டு கட்டத் தேர்தல், கிராம ஊராட்சிகளுக்கு மட்டுமேயான தேர்தல் என்னும் சில கட்டுப்பாடுகளோடு தமிழகத்தின் 27 மாவட்டங்களில் 314 ஊராட்சி ஒன்றியங்களில் மட்டும் தேர்தல் நடைபெறவுள்ளது. புதிதாகப் பிறந்தும், தன் எல்லைகளைக் குறைத்தும் கொண்டிருக்கும் 9 மாவட்டங்கள் இந்தத் தேர்தலில் வெறுமனே பார்வையாளராகத்தான் இருக்கப்போகின்றன.

சட்டமன்றம், நாடாளுமன்றத் தேர்தல்களைப் போல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இதில் இல்லை. மாறாக, வாக்குச்சீட்டுகள் பயன்படுத்தப்பட உள்ளன. 40 வயதைக் கடந்த பலரும் இதற்கு முன்பு வாக்குச்சீட்டில் வாக்களித்திருப்பார்கள். ஆனால், உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்க உள்ள மூன்றில் ஒரு பகுதியினர் புதிய வாக்காளர்கள். இளைய தலைமுறையினர். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் மட்டுமே வாக்களித்திருக்கும் இணைய தலைமுறையினர். வாக்குச்சீட்டை எப்படிக் கையாண்டு, வாக்களிப்பது என்பது பலருக்குத் தெரியாது. செய்தியாளர் சந்திப்பின்போது ஒரு மாவட்ட ஆட்சியர், “இதுவரை நானே வாக்குச்சீட்டில் வாக்களித்தது இல்லை” என்று சொன்னதை ஒரு சோற்றுக்கான பதமாக எடுத்துக்கொள்ளலாம்.

விழிப்புணர்வு இல்லை

உள்ளாட்சியில் சோதனை முயற்சியாக குமரி மாவட்டத்தின், மேல்புறம் ஒன்றியத்தில் மட்டுமே மிண்ணணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தவிருக்கிறது. மற்ற அனைத்துப் பகுதிகளிலும் வாக்குச்சீட்டு முறைதான். “தேர்தலை வேகமாக அறிவித்த கையோடு, மாநிலம் முழுவதும் இது தொடர்பான விழிப்புணர்வைத் தேர்தல் ஆணையமும் அரசும் ஏற்படுத்தவில்லை. இது நிச்சயம் தேர்தலில் எதிரொலிக்கும்” என எச்சரிக்கிறார் தேர்தல் பிரிவில் பணியாற்றும் மூத்த அலுவலர் ஒருவர்.

கிராம ஊராட்சி உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடுபவர்களுக்கு வெள்ளை, நீல நிறம். ஊராட்சித் தலைவர் பதவிக்கு இளஞ்சிவப்பு. ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பதவிக்குப் பச்சை. மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு மஞ்சள் ஆகிய நிறங்களில் வாக்குச்சீட்டுகள் அச்சடிக்கப்பட்டுள்ளன. இதில்தான் நாம் வாக்களிக்க உள்ளோம். வார்டு உறுப்பினர் பதவியும், ஊராட்சித் தலைவர் பதவியும் கட்சிச் சார்பற்றவை. அவற்றில் அரசியல் கட்சிகளின் சின்னங்கள் இருக்காது. அனைவருக்கும் வேறு வேறு சின்னங்கள். போட்டியிடுபவர்கள் அனைவரும் சுயேச்சையாகக் கருதப்படுகிறார்கள். ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பதவிக்கும், மாவட்ட கவுன்சிலர் உறுப்பினர் பதவிக்கும் கட்சி சின்னம் இருக்கும்.

ஒவ்வொரு வாக்கும் முக்கியம்

ஒரு வாக்காளர் குறைந்தபட்சம் 4 வாக்குகள் செலுத்த வேண்டும். வாக்குச்சாவடியில் உள்ள முத்திரையை, நாம் விரும்பும் சின்னத்தில் குத்திவிட்டு அதைச் சரியாக மடிக்க வேண்டும். தவறாக மடித்துவிட்டால் அருகில் உள்ள சின்னத்திலும் அந்த மை படிந்து செல்லாத வாக்காக மாறும். தேர்தலில் அதிகம் பேர் போட்டியிடும் பகுதியில் வாக்குச்சீட்டு நீளமாக இருக்கும். எனவே, வாக்கைச் செலுத்திவிட்டு அதை எப்படி மடிப்பது என்பதில் மிகுந்த கவனம் தேவை.

உள்ளாட்சித் தேர்தல்களில் ஒரு வாக்கால் முடிவுகள் மாறுவதற்கான வாய்ப்புகள் எப்போதுமே உண்டு. கடந்த உள்ளாட்சித் தேர்தலின்போது ஏற்பட்ட சட்டம் - ஒழுங்கு பிரச்சினைகளுக்கு சொற்ப அளவிலான வாக்கு வித்தியாசங்கள் காரணமாக இருந்திருக்கின்றன. எனவே, செல்லாத வாக்குகளைக் களைய வேண்டிய பொறுப்பு தேர்தல் ஆணையத்துக்கு இருக்கிறது. இருக்கிற குறைந்த கால அவகாசத்திலாவது அதற்கான முயற்சிகளைத் தேர்தல் ஆணையம் எடுத்தாக வேண்டும்.

- இரா.கார்த்திகேயன்,

தொடர்புக்கு: karthikeyan.r@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x