Last Updated : 11 Aug, 2015 08:05 AM

 

Published : 11 Aug 2015 08:05 AM
Last Updated : 11 Aug 2015 08:05 AM

யார் அந்தத் தலைவர்?

2014 மக்களவைப் பொதுத் தேர்தலுக்குப் பிறகு முதல் முறையாக டெல்லி சென்றேன். ஜூலை மாதக் கடைசி வாரத்தை அந்நகரில் கழித்தேன். மோடி தலைமையிலான அரசு பதவிக்கு வந்து ஓராண்டும் இரண்டு மாதங்களும் முடிந்திருக்கின்றன. அரசு மீது அதிருப்திக்கான சமிக்ஞைகள் தோன்றத் தொடங்கிவிட்டன. அறிஞர்கள், தலைமை நிர்வாகிகள், ஹோட்டல் வெயிட்டர்கள், பாதுகாப்பு அதிகாரிகள் என்று யாரைப் பார்த்தாலும் பிரதமரைப் பற்றியும் அவருடைய அரசைப் பற்றியும் கேலியாகப் பேசத் தொடங்கிவிட்டனர். சிலர் அவருடைய வெளிநாட்டுப் பயண மோகத்தைக் கண்டித்தனர், அவருடைய வாக்குறுதிகளுக்கும் செயல்பாடுகளுக்கும் இடையே காணப்படும் இடைவெளியைச் சிலர் சுட்டிக்காட்டினர். பாஜகவை நீண்ட காலமாக ஆதரித்து வருகிறவர்கள்கூட சில மத்திய அமைச்சர்களின் திறமைக் குறைவு குறித்து வெளிப்படையாகப் பேசத் தொடங்கிவிட்டனர்.

இவையெல்லாம் எதிர்பார்க்கப்படாதவை அல்ல. சமூகவியலாளரான ஆசிஷ் நந்தி, ‘இந்திய அரசியலின் இரும்பு விதி’ என்ற புதிய கருத்தியலை சில ஆண்டுகளுக்கு முன் வெளியிட்டார். மக்களுடைய அமோக ஆதரவுடன் ஆட்சிக்கு வரும் எந்த அரசும், ஒன்றரை ஆண்டுகளில் அந்த ஆதரவையும், கவர்ச்சியையும் இழந்துவிடும் என்பதையே ‘இரும்பு விதி’யாகக் குறிப்பிட்டிருந்தார். 1986-ல் ராஜீவ் காந்திக்கு (ஷா பானு வழக்கு), 1990-ல் வி.பி. சிங்குக்கு (மண்டல் கமிஷன் பரிந்துரை ஏற்பு), 1992-ல் பி.வி. நரசிம்ம ராவுக்கு (பாபர் மசூதி இடிப்புக்குப் பிறகு) இதேதான் நேரிட்டது. குஜராத்தின் ‘இரும்பு மனிதர்’ என்று அழைக்கப்பட்ட மோடி விஷயத்திலும் இதேதான் நடந்துகொண்டிருக்கிறது. ஏதோ ஒரு தவறான நடவடிக்கைக்காக அல்ல பல்வேறு துறைகளிலும் அடுத்தடுத்து செய்துவரும் தவறுகள் சேர்ந்துகொண்டே வருவதற்காக!

நான் எழுதுவதைத் தொடர்ந்து படிக்கிறவர்கள், நான் ஏற்கெனவே எழுதியபடிதான் அதிருப்தி அதிகரித்து வருகிறது என்பதை உணர்ந்துகொள்வார்கள். குஜராத்தின் முதலமைச்சராக இருந்தபோது மக்களுடைய துயரங்களைப் புரிந்துகொள்ளாமல் கொள்கைகளை வகுத்ததையும், முதலமைச்சராகவும் பிரதமராகவும் அதிகாரப் பசி கொண்டு செயல்படுவதையும் கடுமையாக விமர்சித்துள்ளேன். நாம் சொன்னபடிதான் நடக்கிறது என்ற உணர்வை, இன்னொரு விஷயம் புரட்டிப்போட்டுவிட்டது; “பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கு செல்வாக்கு சரிந்துவருவதால் ராகுல் தலைமையில் காங்கிரஸ் மீண்டும் வலுப்பெற வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது” என்று சில நண்பர்கள் கூறியதே அதற்குக் காரணம்.

ராகுல் காந்தியின் புது அவதாரம்

ஒரு வழக்கறிஞரும் ஒரு அறிஞரும் என்னிடம் தனித்தனியே பேசும்போது, “ராகுல் காந்தி இப்போது புதிய மனிதராக உருவெடுத்து வந்திருக்கிறார்; நடுவில் சிறிது காலம் ஓய்வெடுத்தது புதிய திசை வழியைக் காட்டி அவருக்கு உத்வேகத்தை அளித்திருக்கிறது” என்றார்கள். “காங்கிரஸ் கட்சிக்குத் தலைமைதாங்கி, வழிநடத்தி அடுத்து வரவுள்ள 2019 மக்களவைப் பொதுத் தேர்தலிலும் அதற்குப் பிறகும் வெற்றிப்பாதையில் கொண்டுசெல்ல விருப்பமும் சக்தியும் உள்ள தலைவராகிவிட்டார்” என்றார்கள். இப்படியொரு நம்பிக்கை அவர்களுக்கு எப்படி வந்தது என்று தெரியவில்லை. நம்பிக்கையிழப்புக்குப் பிறகு ஏற்படும் நம்பிக்கையா அல்லது டெல்லியிலேயே தொடர்ந்து வசிப்பதால் ஏற்பட்ட அரசியல் அனுபவமா, பாஜகவுக்கு எதிரான எல்லா எதிர்ப்புகளுமே காங்கிரஸுக்குத்தான் பலனைத் தரும் என்ற எண்ணமா, காங்கிரஸ் என்றாலே நேரு இந்திரா குடும்பத்தவர்தான் என்ற விசுவாசத்தாலா?

கடந்த கால வரலாற்றிலிருந்து ஆறுதல் பெறுவதாக சில காங்கிரஸ் தலைவர்கள் என்னிடம் கூறினார்கள். 1977 மக்களவைப் பொதுத் தேர்தலில் தோல்வி கண்ட இந்திரா காந்தி 1980 பொதுத் தேர்தலில் மீண்டும் வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்தார், ராஜீவ் காந்தி 1989-ல் ஆட்சியை இழந்தார்; 1991-ல் மீண்டும் ஆட்சிக்குத் திரும்புவதற்கான சூழல் ஏற்பட்டது. எனவே, கதவு எண் 10, ஜன்பத் சாலையில் உள்ளவர்கள், அடுத்த மக்களவைப் பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ராகுல் காந்தி வெற்றியைப் பெற்றுத்தந்துவிடுவார் என்றே நம்புகிறார்கள்.

யதார்த்த நிலை என்ன என்பதைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாமல், ‘வரலாறு மீண்டும் திரும்பிவிடும்’ என்று நம்பிக்கொண்டிருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சி இப்போது அமைப்புரீதியாகச் சீர்குலைந்திருக்கிறது. அதனால்தான் ஒவ்வொரு மாநிலமாக அது தோற்றுக்கொண்டிருக்கிறது. இந்திராவுக்கும் ராஜீவுக்கும் இருந்த கவர்ச்சி ராகுலுக்குக் கிடையாது. பரம்பரை அரசியல் ஏற்படுத்திவைத்த வாரிசுரிமைகளும் குடும்பக் கவர்ச்சிகளும் இப்போது வாக்காளர்களிடத்தில் எடுபடாது. இந்த நாட்டின் தலைவராக வர வேண்டும் என்றால், ‘அவர்’ அல்லது ‘அவள்’ என்ன செய்தார் என்றுதான் இப்போது கேட்கிறார்கள். யாருடைய மகன் அல்லது பேரன் என்று கேட்பதில்லை.

நம்பிக்கையின் அவசியம்

மக்களுடைய ‘நம்பிக்கைக்குரிய எதிர்க் கட்சி’ இந்திய ஜனநாயகத்துக்கு இப்போது அவசியம் தேவை. நம்பிக்கைக்குரிய தலைவரோ, தலைவியோ அதை வழிநடத்த வேண்டும். இந்திரா காந்தியின் மறைவுக்குப் பிறகு இந் நாட்டில் பதவிக்கு வந்துள்ள ‘அதிக அதிகாரம் மிக்க’ பிரதமர் நரேந்திர மோடி என்பதில் சந்தேகமே இல்லை. கட்சியிலும் ஆட்சியிலும் உள்ள செல்வாக்கு என்று எடுத்துக்கொண்டால் ஜவாஹர்லால் நேரு, இந்திரா காந்திக்கு இணையாக இப்போது மோடி இருக்கிறார். நேருவும் இந்திராவும் ‘ஈடு இணையற்ற’ எதிர்க் கட்சித் தலைவர்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது, இதுவரை மோடிக்கு அத்தகைய அவசியம் ஏற்படவில்லை.

சில தகவல்களை நினைவுபடுத்துவது அவசியம். 1947 முதல் 1950 வரையில் நேருவுக்கு அவருடைய கட்சிக்குள்ளும் அரசிலும் ‘போட்டி அதிகார மையம்’ ஒன்று வல்லபபாய் படேல் வடிவில் இருந்தது. காங்கிரஸ் கட்சிக்கு யார் தலைவராக வேண்டும், குடியரசுத் தலைவர் பதவிக்கு யாரை நியமிக்க வேண்டும் என்பவற்றில் நேரு சுதந்திரமாக முடிவெடுத்துவிட முடியாது, படேல் என்ன கருதுகிறார் என்று அறிவது அவசியம். 1950 டிசம்பரில் படேல் மறைந்த பிறகு கட்சிக்குள்ளும் ஆட்சியிலும் நேருவை எதிர்த்துப் பேச யாரும் இல்லை. ஆனால், நாடாளுமன்றத்தில் அந்த நிலைமை இல்லை. வலதுசாரித் தலைவரான சியாம பிரசாத் முகர்ஜியும் இடதுசாரித் தலைவர்களான ஹிரேன் முகர்ஜி, ஏ.கே. கோபாலன் ஆகியோருக்கும் அவர் பதில் சொல்ல வேண்டியிருந்தது.

1950-களில் ஜனசங்கத்திலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலும் மக்களிடம் செல்வாக்கும், விவாதத் திறமையும் மிகுந்த தலைவர்கள் இருந்தனர். ஆனால், நேருவுக்கு மிகவும் வலுவான எதிர்ப்பைத் தெரிவித்தவர்கள் ஒரு காலத்தில் காங்கிரஸ் கட்சியிலேயே இருந்து பிரிந்து சென்றவர்கள்தான். ஜே.பி. கிருபளானி, சோஷலிஸ்ட் தலைவர் ராம் மனோகர் லோகியா, சுதந்திரச் சந்தையை முதன் முதலில் வலியுறுத்திய சி. ராஜகோபாலாச்சாரி அவர்களில் குறிப்பிடத் தக்கவர்கள். நேரு இந்த மூன்று தலைவர்களின் கருத்துகளையும் வெகு கவனத்துடன் கேட்பார். நேருவைப் போலவே அவர்களும் அப்பழுக்கற்ற தியாகிகள். 1917-ல் சம்பரான் மாவட்டத்தில் காந்தியடிகள் சத்தியாகிரகத்தில் ஈடுபட்டபோதே அவருடன் சேர்ந்தவர் ஆசார்ய கிருபளானி. தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பியிருந்த காந்திஜி, இந்தியாவில் முதன் முதலில் மேற்கொண்ட போராட்டம் அதுதான். ராஜாஜியோ காந்திஜியின் ‘தென்னிந்திய தளபதி’ என்று அழைக்கப்பட்டவர். காந்திஜி அவரைத் தன்னுடைய ‘மனசாட்சியின் காவலர்’ என்றே அழைத்தார். ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தின் மிகப்பெரிய தளகர்த்தர் லோகியா. இந்த மூன்று தலைவர்களும் அறிவாளிகள், தங்களுடைய எண்ணங்களைச் சிறப்பாக வெளிப்படுத்தக்கூடியவர்கள், ஊழலை அண்டவிடாதவர்கள். அவர்களுடைய விமர்சனங்கள் நெருப்பாகச் சுடும் தன்மையன; நேருவுக்கு அகங்காரமோ, ஆசைகளோ ஏற்பட்டுவிடாமல் தடுக்கக்கூடியவை.

அதிகாரம் மிக்க இந்திரா

1969 முதல் 1975 வரை கட்சிக்குள் மிகுந்த செல்வாக்கும் அதிகாரங்களும் பெற்ற தலைவராகத் திகழ்ந்தார் இந்திரா காந்தி. ஆனாலும் எதிர்ப்புகள் இல்லாமல் அவரால் ஆட்சி நடத்திவிட முடியவில்லை. ஜன சங்கத்தின் அடல் பிகாரி வாஜ்பாயும் மார்க்சிஸ்ட் கட்சியின் பி.ராமமூர்த்தி, ஜோதிர்மய பாசுவும் சியாம பிரசாத் முகர்ஜி, ஏ.கே. கோபாலன் அளவுக்குச் சிறந்த எதிர்க் கட்சித் தலைவர்களாகப் பணியாற்றினர். நாடு முழுவதிலுமே மொரார்ஜி தேசாயும் காமராஜரும் அவர்களுடைய நிர்வாகத் திறமைக்காகவும் நேர்மைக்காகவும் மதிப்பும் மரியாதையும் பெற்றிருந்தனர். பிளவுபடாத காங்கிரஸ் கட்சி கொண்டிருந்த உயர்ந்த தேசிய லட்சியங்களில் அவர்கள் வைத்திருந்த நம்பிக்கைக்காக மதிக்கப்பட்டனர்.

இவர்களைத் தவிர, ‘தேசத்தின் மனசாட்சி’ என்று கருதப்பட்ட ஜெயபிரகாஷ் நாராயணும் இருந்தார். அவர் நினைத்திருந்தால் நேருவுக்குப் பிறகு இந்நாட்டின் பிரதமராகப் பதவியில் அமர்ந்திருக்க முடியும். ஆனால், அவரோ மோதல்களும் பூசல்களும் மிகுந்த காஷ்மீர், நாகாலாந்து மாநிலங்களிலும், கொள்ளைக்காரர்களால் தொல்லைக்குள்ளான மத்திய இந்தியாவிலும் தேச நிர்மாணப் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். 1974 75 காலகட்டத்தில் இந்திரா காந்திக்கு எதிரான மக்கள் போராட்டங்களுக்கு அவர் தளபதியாக விளங்கினார். நெருக்கடிநிலைப் பிரகடனத்தின்போது ஜெயப்பிரகாஷ் நாராயணையும் வேறு சில பிரமுகர்களையும் சிறையிலடைத்தார் இந்திரா. அப்படிச் செய்ததன் மூலம் தன் மீது மக்கள் கொண்டிருந்த நம்பிக்கையைச் சிதற வைத்துவிட்டார். 1977 மக்களவைப் பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்குப் படுதோல்வி கிட்டியது.

‘தான்தான் உயர்ந்தவர்’ என்ற நினைப்பில் காட்சி தருகிறார் நரேந்திர மோடி. பொது நிறுவனங்களின் சுயேச்சையான செயல்பாடுகளைச் சகித்துக்கொள்ள முடியாத போக்கில், இந்திரா காந்தியைப் போலவே இருக்கிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரிடம் இத்தகைய குணாம்சங்கள் இருப்பது ஆபத்தானது. இந்த உணர்வுகளைக் கட்டுப்படுத்தவும் அவரைக் கட்டுக்குள் வைக்கவும் நம்பிக்கைக்குரிய எதிர்க் கட்சி அவசியம். கிருபளானி, ராஜாஜி போன்றோரின் புத்திசாலித்தனத்துக்கு ஈடு கொடுக்க வேண்டிய அவசியம் நேருவுக்கு இருந்தது. இந்திரா காந்திக்கு எதிராக ஜெயபிரகாஷ் நாராயண் இருந்தார். மோடியை வலுவாக எதிர்க்கும் நிலையில் எந்த அரசியல் கட்சித் தலைவர் இப்போது இருக்கிறார்?

தன்னால் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளைக் கொடுத்ததற்காகவும், திறமையற்ற அமைச்சர்களை முக்கியத் துறைகளில் நியமித்ததற்காகவும், பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்களின் வெறுப்பு கலந்த மதவாதப் பேச்சுக்காகவும், நிர்வாகிகளாக நியமிக்கப்படுவதற்குத் திறமையைவிட விசுவாசமே முக்கியமானது என்று செயல்படுவதற்காகவும் தேசிய ஜனநாயகக் கூட்டணியை நியாயமாகவே நாம் விமர்சிக்கலாம். இவையெல்லாம் உண்மையிலேயே கவலை தரும் அம்சங்களாகும். இவற்றையெல்லாம்விட கவலைதரும் அம்சம் எதிர்க் கட்சிகளின் இன்றைய நிலையாகும். மாநிலக் கட்சிகள் மேலும் மேலும் ஊழலில் ஆழ்ந்துவருகின்றன. நம்பிக்கையை ஊட்டிய ஆம் ஆத்மி கட்சியின் வளர்ச்சி, அதன் தலைவரின் டாம்பீகத்தால் குன்றி நிற்கிறது. காங்கிரஸ் கட்சி தொடர்ந்து தேய்ந்துவருகிறது.

“நரேந்திர மோடி மிகவும் அதிர்ஷ்டசாலி, அவருடைய பதவிக்காலத்தின் முதலாவது ஆண்டில் சர்வதேசச் சந்தையில் கச்சா பெட்ரோலிய எண்ணெயின் விலை சரிந்துகொண்டே வந்திருக்கிறது” என்று பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். அரசியலில் அவருக்கு முக்கியப் போட்டியாளர் ராகுல் காந்திதான் என்ற வகையில், அதைவிட அதிர்ஷ்டம் செய்திருக்கிறார் மோடி!

- ராமச்சந்திர குஹா, வரலாற்றாசிரியர், எழுத்தாளர்.
தமிழில்: சாரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x