Published : 11 Aug 2015 10:32 am

Updated : 11 Aug 2015 10:32 am

 

Published : 11 Aug 2015 10:32 AM
Last Updated : 11 Aug 2015 10:32 AM

தாமிரபரணி: ஆற்றை காத்த ஆங்கிலேய அதிகாரிகள்

திருநெல்வேலி நகரத்திலிருந்து ஆற்றுடன் பயணிக்கும் முன்பு கடந்த காலங்களில் ஆற்றுக்கு நேர்ந்த அபாயங்களையும் அவற்றிலிருந்து ஆற்றை மீட்ட வரலாற்றையும் பார்ப்போம். 1800-களில் திருநெல்வேலி சுற்றுவட்டார வனப்பகுதிகளில் தேவியாறு, கோட்டமலையாறு, குளிராடையாறு, விருசடைகிடையாறு, சிற்றாறு, ஜம்புநதி, ராமநதி, கல்லாறு, கருணையாறு, கோரையாறு, சேர்வலாறு, காரையாறு, மணிமுத்தாறு, தாமிரபரணி ஆகிய ஆறுகள் ஓடியதாக குறிப்பிடுகிறது வனத்துறை பதிவுகள். தாமிரபரணி மூலம் அப்போது 1,69,549 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்றன.(இன்று 86,107 ஏக்கர்).

1795 - 1800 காலகட்டத்தில்தான் தாமிரபரணி ஓடும் வனங்களில் ஜாதிக்காய், கிராம்பு, பட்டை பயிரிடப்பட்டன. அவை வணிக ரீதியாக லாபம் தராததால் காபி, தேயிலை, கோகோ பயிரிடப்பட்டன. காபி, தேயிலையை பயிரிட 730.63 ஏக்கர் காடுகள் தனியாரிடம் ரூ.9841-க்கு அளிக்கப்பட்டன. இதில் உருவானவைதான் ஊஞ்சல்கட்டி, ராமக்கல்தேரி, தெற்குமலை, குளிராட்டி உள்ளிட்ட தனியார் எஸ்டேட்கள். இப்படியாக தொடர்ந்து சோலைக்காடுகள் உள்ளிட்ட காடுகள் அழிக்கப்பட்டன. இதனால், சுமார் 40 ஆண்டுகளில் தாமிரபரணியின் நீர் வரத்து பாதியாக குறைந்தது.

இந்த நிலையில்தான், முதன்முதலில் 1842-ம் ஆண்டு அன்றைய திருநெல்வேலி ஆட்சியர் ஹெச். மாண்ட்கோமெரி (H.Montgomery) மரங்களை வெட்ட தடை விதித்தார். அடிப்படை தேவைகளுக்காக மூங்கில் உள்ளிட்ட சிறு மரங்களை வெட்ட ஐந்து அணா உரிமை வரி விதிக்கப்பட்டது. தவிர, ஒரு கை வண்டி சுமைக்கு மூன்று பைசா, காளை வண்டி சுமைக்கு ஒரு அணா வரி விதிக்கப்பட்டது.

நதி மூலத்தை காத்த ‘மெக் கிரிகார்’

இதற்கிடையே மேற்குத் தொடர்ச்சி மலையில் தாமிரபரணி கரையோரம் விளைந்த காபி மற்றும் தேயிலை, அதன் சுவை காரணமாக உலகளவில் பிரசித்தி பெற்றது. நாட்டின் மற்ற பகுதிகளில் விளைந்த காபி, தேயிலையை விட இதற்கு கூடுதல் விலை கிடைத்தது. இதனால், ஒருகட்டத்தில் தாமிரபரணியின் நதிமூலத்துக்கே ஆபத்து ஏற்பட்டது. 1865-ல் பல்வேறு ஐரோப்பிய காபி நிறுவனங்கள் தாமிரபரணி நதி உற்பத்தியாகும் பூங்குளம், அதற்கு சுற்றியிருக்கும் கொடமாடி, கன்னிக்கட்டி, களக்காடு வனப்பகுதிகளை விலைக்கு வாங்க முயன்றன. நிதி நெருக்கடியில் இருந்த அரசு, அதை தீவிரமாக பரிசீலித்த நிலையில், சேரன்மகாதேவியின் துணை ஆட்சியராக இருந்த மெக் கிரிகார் (Mac Gregor) இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அவரது உறுதியான நிலைப்பாடு காரணமாக அந்தத் திட்டம் நிறுத்தப்பட்டு, தாமிரபரணி நதிமூலம் காக்கப்பட்டது.

காட்டை காப்பாற்றிய பங்கிள்!

இதன்பின்பு கேப்டன் பெட்டோம் (Beddome) மேற்பார்வையில் எரிபொருள் தேவைகளுக்காக சமவெளிகளில் சமூகக் காடுகள் வளர்ப்புத் திட்டம் தொடங்கப்பட்டது. காடுகளைக் பாதுகாக்க வனத்துறையில் சிறப்பு பிரிவு தொடங்கப்பட்டது. 1866-ல் திருநெல்வேலி ஆட்சியர் ஆர்.கே.பக்கிள் (R.K.Puckle), மலையில் இருக்கும் அனைத்துக் காடுகளையும் வனத்துறையின் சிறப்பு பிரிவின் கீழ் கொண்டுவந்தார். முதல்முறையாக மாவட்ட வன அதிகாரி பதவி உருவாக்கப்பட்டு, கேப்டன் ஃபுல்லர்டன் (Fullerton) நியமனம் செய்யப்பட்டார். பக்கிளின் நடவடிக்கைகளுக்கு எதிராக தனியார் சிலர், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். தீர்ப்பு அவர்களுக்கு சாதகமாக வந்தது. இதனால் சிங்கம்பட்டி, சொக்கம்பட்டி, சிவகிரி, வைரவகுளம், புதுக்கோட்டை - திருமலைநாயக்கன் ஆகிய ஜமீன்களின் கட்டுப்பாட்டில் இருந்த காடுகளை மீட்க முடியவில்லை.

தொடர்ந்து பக்கிள் காடுகளை ஆய்வு செய்து, அவற்றை சோலை காடுகள், புல்வெளிக்காடுகள் உள்ளிட்டவற்றை பாதுகாக்கப்பட்ட காப்புக் காடுகளாக (Reserve forests) வரையறுத்தார். திருநெல்வேலி மாவட்டத்தின் 559.19 சதுர மைல் காடுகளில் 286.81 சதுர மைல் காடுகளை பாதுகாக்கப்பட்ட காப்புக் காடுகளாக அறிவித்தார். அவற்றில் நுழைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. ஆற்றில் மணல் அள்ளுவது, ஆக்கிரமிப்பு செய்வது, அசுத்தம் செய்வது ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்பட்டது.

ஆனாலும், இன்னொரு பக்கம் மெட்ராஸ் மகாண அரசின் ஆதரவுடன் வருவாயைப் பெருக்குவதற்காக காடுகள் அழிக்கப்பட்டு, காபி, தேயிலை தோட்டங்கள் பெருகின. தேக்கு உள்ளிட்ட பெரும் மரங்கள் வெட்டப்பட்டு வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யப்பட்டன. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார் பக்கிள். தனது அதிகாரத்துக்கு உட்பட்ட வனத்தில் மரங்களை வெட்ட அரசுக்கே அனுமதி கிடையாது என்று உத்தரவிட்டார். 1867-ம் தேதி செப்டம்பர் 30-ம் தேதி அரசுக்கு அவர் எழுதிய கடிதத்தில், “காடுகளை அழிப்பது தொடர்ந்தால் இன்னும் சில ஆண்டுகளில் தாமிரபரணியில் ஒரு சொட்டுத் தண்ணீரைக் கூட பார்க்க முடியாது” என்று கண்டிப்புடன் எழுதினார். பங்கிளைப் பின்பற்றி மெட்ராஸ் மாகாணத்தின் பல மாவட்டங்களின் காடுகள் பாதுகாக்கப்பட்ட காடுகளாக அறிவிக்கப்பட்டு, பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டன. மக்கள், பக்கிளை போற்றிப் புகழ்ந்தனர். தங்கள் குழந்தைகளுக்கு ‘பக்கிள்துரை’ என்று பெயரிட்டார்கள். இதனால், இன்றைக்கும் திருநெல்வேலி, தூத்துகுடி ஊர்களில் ‘பக்கிள்துரை’ பெயர் கொண்ட பெரியவர்களை பார்க்கலாம்.

1882-ல் மெட்ராஸ் காடுகள் சட்டம் இயற்றப்பட்டது. அப்போது தாமிரபரணியை பார்வையிட்ட வனத்துறை ஐ.ஜி. பிராண்டிஸ் (Brandis), ‘தாமிரபரணி நதியின் பாதுகாப்பே லட்சக்கணக்கான விவசாயிகளின் பாதுகாப்பு’ என்று குறிப்பு எழுதினார். 1887-ல் மாவட்ட வன அதிகாரி பிரேசியர் என்பவர் தாமிரபரணியைச் சார்ந்த ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகளை பாதுகாக்க திட்டங்களை வகுத்தார். பக்கிளுக்கு பின் வந்த ஆட்சியர்களும் மாவட்ட வன அதிகாரிகளும் நதியை பாதுகாக்க தொடர் முயற்சிகளை எடுத்தார்கள். 1928-ல் அரசாங்கம் தனது வருவாய்க்காக ஒரு ஏக்கர் காட்டில் மூன்று மரங்களுக்கு மேல் வெட்டக் கூடாது என்று புதிய விதிமுறை விதிக்கப்பட்டது.

நாடு சுதந்திரம் அடைந்த பின்பு ஆங்கிலேய அதிகாரிகள் வழியிலேயே இந்திய அதிகாரிகளும் காட்டையும் நதியையும் காக்கும் நடவடிக்கைகளை தொடர்ந்தனர். 1948-ல் மெட்ராஸ் எஸ்டேட்ஸ் சட்டம் கொண்டு வரப்பட்டு, 1951-52-ல் ஜமீன்களின் கட்டுப்பாட்டிலிருந்த காடுகள் அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டன. காடும், தாமிரபரணி நதியும் காப்பாற்றப்பட்டது. ஆனால், அடுத்த 30 ஆண்டுகளில் நதிக்கு மீண்டும் ஒரு சோதனை ஏற்பட்டது.

(தவழ்வாள் தாமிரபரணி)

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!

    தாமிரபரணி ஆறுஆங்கிலேய அதிகாரிகள்கவுதலை ஆறு

    Sign up to receive our newsletter in your inbox every day!

    You May Like

    More From This Category

    More From this Author