Published : 18 Dec 2019 07:22 AM
Last Updated : 18 Dec 2019 07:22 AM

அமெரிக்கா – சீனா: நண்பனும் இல்லை... பகைவனும் இல்லை!

தாமஸ் எல். ஃப்ரீட்மன்

அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவி வகிப்பதால் ஏற்பட்டிருக்கும் எதிர்மறையான பெரிய தீய விளைவு, நாம் அவரைப் பற்றியே பேசிக்கொண்டிருக்கிறோம். நான் சொல்வதைத் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்; ஜனநாயகத்தைத் தாங்கிப் பிடிக்கும் இரண்டு பெரிய தூண்களான வாய்மை, நம்பிக்கை இரண்டையுமே தினமும் அலட்சியப்படுத்தும் அதிபரை மையமாக வைக்காமல் நாம் எப்படி உரையாட முடியும்?

இரைச்சல் இயந்திரமான ட்ரம்பைத் தவிர தேசிய அளவில் நாம் விவாதிக்க வேண்டிய அளவுக்குக் கண்டத் திட்டுகள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டிருக்கின்றன, அமெரிக்க – சீன உறவு போன்ற பல பிரச்சினைகள் உள்ளன. அவற்றை நாம் விவாதிக்காமல் இருப்பதற்குக் காரணம் - டொனால்ட் டரம்ப்.

கடந்த நவம்பர் 9 அன்று அனைத்து ஐரோப்பியத் தலைவர்களும் பெர்லின் சுவர் இடிக்கப்பட்ட முப்பதாவது ஆண்டு நிகழ்வைக் கொண்டாட அந்த நகரில் கூடினர். அது கொண்டாடப்பட வேண்டிய நாள்தான்; ஆனால், பெர்லின் சுவர் இடிந்த 30-வது ஆண்டில் சீனாவும் அமெரிக்காவும் சேர்ந்து அதைப் போன்ற ‘டிஜிட்டல் சுவரை’ எழுப்பிக்கொண்டிருப்பதை யாருமே கவனித்ததைப் போல தெரியவில்லை. ‘இந்தச் சுவர் எவ்வளவு உயரமாக இருக்க வேண்டும், இந்தச் சுவருக்கு எந்தப் பக்கத்தில் எந்த நாடு இருக்க வேண்டும் என்றுதான் இனி தீர்மானிக்க வேண்டும்போல் இருக்கிறது’ என்று சீனத் தொழில் நிர்வாகி என்னிடம் தெரிவித்தார். அமெரிக்கா தலைமையிலான தொழில்நுட்ப, வர்த்தக மண்டலத்தையும், சீனா தலைமையிலான தொழில்நுட்ப, வர்த்தக மண்டலத்தையும் பெர்லின் சுவரைப் போல இந்தச் சுவரும் பிரிக்கிறது.

முறையற்ற வர்த்தக நடவடிக்கை

கடந்த நாற்பதாண்டுகளாக சமாதானம், பொருளாதார வளமை, தொழில்நுட்ப வளர்ச்சியில் வேகம், உலகமயம் ஆகியவை உலக நாடுகளுக்குப் பலன் தந்துகொண்டிருக்கின்றன; அது மட்டுமல்லாமல் அமெரிக்க, சீனப் பொருளாதாரங்களின் சேர்க்கையும் பலன் தந்துவருகின்றன. இரு நாடுகளின் தவறான கணிப்புகளால் - குழம்பிய நிலையில், உடனடி இடைக்கால நடவடிக்கையாக இரு நாடுகளின் பொருளாதாரங்களும் பிணைப்பிலிருந்து பிரிக்கப்படுகின்றன. இவை பொருளாதார மீட்சிக்கான போக்கைத் தடுக்கிறது, இதற்கு நாடுகள் தரப்போகும் விலை அதிகம். இதைப் பற்றிப் பேசவே நாம் விரும்புவோம்.

“கடந்த நாற்பது ஆண்டுகளாக அமெரிக்க-சீன உறவு நான்கு அம்சங்களை ஒருங்கிணைப்பதில் கவனம் செலுத்தியது: சரக்கு, மூலதனம், தொழில்நுட்பம், மக்கள். இதனால், ராணுவரீதியிலான போட்டி தணிந்திருக்க வேண்டும். அப்படி நடக்கவில்லை, அதற்கு நேர்மாறாகத்தான் நடக்கிறது என்று நேர்மையான அலசல் தெரிவித்துவிடும்” என்று முன்னாள் அமெரிக்க நிதித் துறை அமைச்சர் ஹாங்க் பால்சன் ஓராண்டுக்கு முன்னால் தெரிவித்தார்.

இரண்டு காரணங்களால் இது நடக்கிறது. முதலாவதாக, அமெரிக்காவிலிருந்து சரக்குகளை வாங்குவதைத் தவிர்க்க, முறையற்ற வர்த்தக நடவடிக்கைகளில் சீனா ஈடுபடுகிறது, அமெரிக்க நிறுவனங்களின் ‘அறிவுசார் சொத்துரிமை’ சட்டத்தை மதிக்காமல், அவர்களுடைய தொழில்நுட்பத்தைத் திருடுகிறது. உலகின் தொழில்நுட்பக் கேந்திரமாக சீனா வளரும் வரை நாமும் இதைச் சகித்துக்கொண்டிருந்தோம். இரண்டாவதாக, சீனா இப்போது தொழில்நுட்ப சக்தியாக வளர்ந்துவிட்டது. தொழில்நுட்பம் கொண்டு அது தயாரிக்கும் அனைத்தும் பொருளாதார, ராணுவப் பயன்பாடு உள்ளவை; முன்பைப் போல பொம்மைகள், டி-ஷர்ட்டுகள், டென்னிஸ் வீரர்களின் காலணிகள் போன்ற அற்பமான பொருள்களல்ல. இரு நாடுகளின் தேசியப் பாதுகாப்புக்கும் சேதம் இல்லாமல் பரஸ்பரம் என்ன வாங்கலாம், என்ன விற்கலாம் என்பதைத் தீர்மானிக்க முடியாமல் இரு நாடுகளும் திணறுகின்றன.

“நாற்பதாண்டுகளாக ஒருங்கிணைத்துவிட்டு, இப்போது அந்த நான்கு அம்சங்களிலும் விலகுமாறு இரு நாடுகளின் அரசியல் தலைவர்களும் சிந்தனாவாதிகளும் அரசுகளுக்கு ஆலோசனைகளைக் கூறுகின்றனர். இந்தப் போக்கு நீடித்தால், புதிய கண்டுபிடிப்புகளுக்கான சூழலே நொறுங்கிவிடும். இரு நாடுகளிலும் எழும் பொருளாதார இரும்புத் திரை உலகப் பொருளாதாரத்தையும் சேதப்படுத்தும்” என்று அந்த உரையில் எச்சரித்திருந்தார் பால்சன்.

சீனா எழுப்பிய தீச்சுவர்

முதலில் இப்படி தடுப்புச் சுவரை எழுப்பியது சீனாதான் என்று சிலர் வாதிடக்கூடும். சீன இணையதளத்துக்குப் பிற தளங்களிலிருந்து வரும் தகவல்களையும் செய்திகளையும் தணிக்கைசெய்ய தீச்சுவரை (ஃபயர்வால்) அது எழுப்பியது. கூகுள், ஃபேஸ்புக், ட்விட்டர் தணிக்கைக்குள்ளாயின. அத்துடன் தன்னுடைய தரவுத் தொகுப்புகளுக்கும் மென்பொருள்களுக்கும் சுற்றி ‘வட்ட வேலி’களை நிறுவியது. முக்கியத் தரவுகள் உள்நாட்டு ‘சர்வர்’களில் மட்டுமே சேமிக்கப்பட வேண்டும், வெளிநாடுகளிலிருந்து யாரும் அவற்றைப் பெறக் கூடாது என்றது.

கடந்த மே 17 அன்று சீனாவின் ஹுவாவே நிறுவனத்தை, ஏற்றுமதி நிர்வாகத்தின் உரிமம் பெறாமல் எதையும் பெறக் கூடாது என்று தடைப் பட்டியலில் வைத்தது அமெரிக்கா. 5ஜி தொலைத்தொடர்புக் கருவிகளைத் தயாரிப்பதில் உலகின் முன்னணி நிறுவனம் இது. அத்துடன் ஸ்மார்ட்போன்கள் தயாரிப்பில் உலகில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. இதனால் கூகுள், குவால்காம், இன்டெல், மைக்ரான், மைக்ரோசாஃப்ட் போன்ற அமெரிக்க நிறுவனங்களிடமிருந்து ஹுவாவே நிறுவனத்தால் எதையும் சிறப்பு உரிமம் பெறாமல் வாங்க முடியாது. சீன அரசுக்காக அந்நிறுவனம் உளவு பார்க்கிறது, இப்போது இல்லையென்றால் எதிர்காலத்தில் பார்க்கக்கூடும் என்று காரணம் கூறப்பட்டது. அத்துடன் மோசடி, தொழில்நுட்பத் திருட்டு, ஈரானுக்கு எதிராக அமெரிக்கா விதித்த தடையை மீறியது என்றும் அதன் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

சீனத் தொழில்நுட்ப உலகில் அந்த நடவடிக்கை பெரிய பூகம்பத்தை ஏற்படுத்தியது. முக்கிய உறுப்புகளுக்காக அமெரிக்காவைச் சார்ந்திருக்கும் நிலை இனி நமக்குக் கூடாது என்று சீன நிறுவனங்கள் முடிவெடுத்தன. அடுத்த முறை சீனாவில் தொழிற்சாலையைத் திறக்கும்போது கவனமாக இருக்க வேண்டும், சீனாவிலிருந்து மட்டும் கிடைக்கும் பொருள்களைக் கொண்டு தயாரிக்கக் கூடாது என்று அமெரிக்க நிறுவனங்களும் தீர்மானித்தன. இவ்வாறு இரு பெரிய நாடுகளின் பொருளாதாரங்களும் தொடர்பைத் துண்டிக்கும் முடிவை அப்போது எடுத்துவிட்டன.

மக்களுக்கும் கட்டுப்பாடு

இப்போது மக்களிடையேயும் துண்டிப்பு தொடங்கியிருக்கிறது. விமான நிறுவனங்கள், ரொபாட்டுகள் தயாரிப்பு, உயர்நிலை தொழிலுற்பத்தி ஆகியவற்றில் சீனப் பட்டதாரி மாணவர்களை ஈடுபடுத்த அமெரிக்க வெளியுறவுத் துறை கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்துவிட்டது. இத்துறைகளில் சீன மாணவர்கள் முன்னர் ஐந்தாண்டுகள் படித்தனர், இப்போது ஓராண்டுக்கு மட்டுமே அனுமதி. அமெரிக்க அடித்தளக் கட்டமைப்பு நிறுவனங்களிலும் ராணுவம் தொடர்பான தொழிற்சாலைகளிலும் சீனா முதலீடு செய்யவும் கட்டுப்பாடுகள் வந்துவிட்டன.

பெங்களூரு நகரில் இளம் இந்தியத் தொழில்நுட்ப மாணவர்களுடன் சமீபத்தில் பேசிக்கொண்டிருந்தேன். படிப்பு முடித்ததும் இந்தியாவிலேயே தங்கி, உள்நாட்டு ‘ஸ்டார்ட்அப்’ நிறுவனங்களில் பணிபுரிவது என்ற முடிவை எடுப்போர் எண்ணிக்கை கடந்த இரண்டு ஆண்டுகளில் அதிகமாகிக்கொண்டிருக்கிறது. வெளிநாடு செல்ல விரும்புவோரும் கனடா, ஆஸ்திரேலியாவைத்தான் தேர்வுசெய்கின்றனர், அமெரிக்காவைத் தேர்வுசெய்வோர் எண்ணிக்கை குறைந்துவருகிறது. இதற்கான விலையை அமெரிக்கா தர நேரிடும்.

இவையெல்லாமே ட்ரம்பின் தவறு அல்ல. சீன அதிபர் ஜி ஜின்பிங்குக்கும் இதில் பங்கிருக்கிறது. தென் சீனக் கடல் தீவுகளைக் கையகப்படுத்தினார், 21-வது நூற்றாண்டில் முக்கியத் தொழில்நுட்பத் துறைகளில் சீன ஆதிக்கத்தை ஏற்படுத்த மிகப் பெரிய தொகையை முதலீடாக அறிவித்துள்ளார், ஹாங்காங்கில் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சியைத் திணிக்கிறார். மேற்கு சீனாவைச் சேர்ந்த முஸ்லிம்களை ‘மறு கல்வி’ முகாம்களுக்குப் பெரும் எண்ணிக்கையில் அனுப்பிவருகிறார். முறையற்ற வர்த்தக நடவடிக்கைகளைக் கைவிடுமாறு தரப்படும் நெருக்கடிகளையும் கடுமையாக எதிர்க்கிறார்.

இரண்டாவது உலகப் போருக்குப் பிறகு உலகமயமாக்கலில் சீனாவும் அமெரிக்காவும் இணைந்து செயல்பட்டதால் உலகுக்குப் பெரும் நன்மைகள் கிட்டின. அதை அப்படியே பராமரிக்க சீனா விரும்பவில்லை. எந்தவிதத் தியாகத்துக்கும் அது தயாராக இல்லை. “அமெரிக்கா கடந்த இருபதாண்டுகளாக வெற்றியே இல்லாமல் போரிட்டுவருகிறது; சீனா போரிடாமலேயே வெற்றிகளைக் குவித்துவருகிறது” என்று இந்திய ராஜதந்திரி ஒருவர் வர்ணித்துள்ளார். இவையெல்லாம் அமெரிக்காவில் மிகப் பெரிய விளைவுகளை ஏற்படுத்திவருகின்றன. ஜனநாயகக் கட்சிகூட சீனாவுக்கு எதிராக ட்ரம்ப் கடுமையான நிலை எடுப்பதை ஆதரிக்கிறது.

இனி என்ன செய்வது?

உளவு பார்ப்பதற்கான தொழில்நுட்பத்தை சீனா விற்பதில் எனக்கும் உவப்பில்லை. ஆனால், இன்றைய உலகில் எல்லா நாடுகளும் பரஸ்பரம் உளவு பார்க்கின்றன, இனியும் இது தொடரும். சில சீன மாணவர்கள் உளவு வேலையில் ஈடுபட்டிருக்கலாம். அதற்காக அனைத்து சீன மாணவர்களுக்கும் தடை விதிப்பது, விசா கட்டுப்பாடுகளைக் கடுமையாக்குவது போன்றவற்றால் அமெரிக்காவுக்கு இழப்பே நேரும். உலக முதலீடுகளில் அமெரிக்காவுடைய பங்கு குறையும். உலக வாடிக்கையாளர்கள், அறிவியலாளர்கள், பொறியாளர்களுடனான தொடர்பும் குறைந்துவிடும்.

அமெரிக்காவுக்கு சீனா பொருளாதாரப் போட்டியாளர், பொருளாதாரக் கூட்டாளி, திறமையுள்ள நிபுணர்களையும் மூலதனங்களையும் வழங்கக்கூடிய நாடு, புவி அரசியலில் அமெரிக்காவுக்குப் பெரிய போட்டியாளர், விதிகளைத் தொடர்ந்து மீறும் நாடு என்பதெல்லாம் சரி; இன்றுவரை அது அமெரிக்காவுடைய நண்பனும் இல்லை, பகைவனும் இல்லை.

இந்த நிலையில் சீனாவுடன் அமெரிக்க அரசு, ஒருங்கிணைந்த அணுகுமுறையைக் கையாண்டு உறவைப் பராமரிக்க வேண்டும். நீதித் துறை ஒரு மாதிரியாகவும் ராணுவத் தலைமையகம் (பென்டகன்) மற்றொரு மாதிரியாகவும், நிதித் துறை வேறொரு மாதிரியாகவும் அணுகுவதால் பலன் இருக்காது, குழப்பமே மிஞ்சும். சீனாவுக்கு எதிரான நடவடிக்கை வலுவாக வேண்டும் என்றால் ஐரோப்பிய நாடுகள், பசிபிக் கடலோர நாடுகள் அனைத்தையும் அமெரிக்காவுடைய நட்பு வட்டத்தில் சேர்க்க வேண்டும்.

‘அமெரிக்காதான் முதலில்’ என்ற ட்ரம்பின் அணுகுமுறையால், ‘அமெரிக்கா மட்டுமே’ என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. பருவநிலை மாறுதல், பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றில் பிற நாடுகளுடன் இணைந்து பணியாற்றுவது அவசியம். சிங்கப்பூரைச் சேர்ந்த கல்வியாளர் என்னிடம் கூறியது முக்கியத்துவம் வாய்ந்தது; அவர் சொன்னார்: “அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இப்போது நடக்கும் போட்டியை எதிர்கால வரலாற்றாசிரியர்கள் படித்துவிட்டு, ‘காடு பற்றியெரியும்போது இரண்டு மனிதக் குரங்குகளின் குடும்பங்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக்கொண்டதுபோல’ என்று எழுதுவார்கள்!”

© ‘தி நியூயார்க் டைம்ஸ்’ தமிழில்: சாரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x