Published : 16 Dec 2019 07:52 AM
Last Updated : 16 Dec 2019 07:52 AM

ஏலம் விடப்படும் ஜனநாயக உரிமை 

செ.இளவேனில்

ராமநாதபுரத்தில், திருச்சி மண்ணச்சநல்லூரில், சிவகாசியில் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிகள் ஏலம் விடப்பட்டதாக வெளிவந்துள்ள செய்திகள் அதிர்ச்சியை அல்ல, அவமானத்தையே ஏற்படுத்துகிறது. இந்த நடைமுறையை எதிர்த்துக் கேள்வி எழுப்புபவர்களைப் படுகொலை செய்யும் அளவுக்கு நிலைமை சீரழிந்திருக்கிறது. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 73 மற்றும் 74 திருத்தச் சட்டங்களும், 11 மற்றும் 12 அட்டவணைகளும் இந்தியக் குடிமக்களுக்கு அளித்திருக்கிற உள்ளாட்சி அதிகாரங்களை ஊர்கூடி விலைபேசுவது சட்ட விரோதம் என்பதைத் தாண்டி, அரசியல் விழிப்புணர்வற்ற செயலும்கூட.

இதெல்லாம் எங்கோ ஒன்றிரண்டு இடங்களில் நடக்கிற விதிவிலக்கான சம்பவங்கள் என்று கண்டுகொள்ளாமல்போவது, காலப்போக்கில் உள்ளாட்சி அமைப்பின் நோக்கத்துக்கு எதிரானதாக மாறிவிடக்கூடும். இந்தியாவிலேயே ஊராட்சி நிர்வாகத்துக்கு முன்னோடியாகத் திகழ்ந்தது தமிழ்நாடு. பிற்காலச் சோழர்கள் பின்பற்றிய ஊராட்சி நிர்வாகத்தை அறிந்து, அன்றைய பிரதமர் இந்திரா காந்தியே வியந்து போற்றியதாய் தனது ‘வரலாறும் கருத்தியலும்’ புத்தகத்தில் பதிவுசெய்திருக்கிறார் உலகப் புகழ்பெற்ற வரலாற்றாசிரியரான ரொமிலா தாப்பர்.

ஆதி காலத்துக்குப் போகிறோமா?

சோழர்கள் காலத்தில் அதிக வாக்குகள் பெற்றால்தான் வெற்றி என்கிற இன்றைய தேர்தல் முறைகள் பின்பற்றப்படவில்லை. தனது பெயரில் சொந்த நிலம் இருப்பவர்களுக்கு மட்டும்தான் தேர்தலில் கலந்துகொள்ளும் வாய்ப்பு வழங்கப்பட்டது என்று விமர்சிப்பவர்களும் இருக்கிறார்கள். ஆனாலும், அப்போதும்கூடப் போட்டியில் கலந்துகொண்ட அனைத்துப் பெயர்களையும் எழுதி, குடத்தில் போட்டு, அதில் ஒன்றைக் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்தார்களேயன்றி நிர்வாக உரிமையை ஒருவருக்கு மட்டுமே விட்டுக்கொடுத்துவிடவில்லை. ஆயிரம் ஆண்டு கால வரலாற்றில் நாம் அரசமைப்புப் பயணத்தில் முன்னோக்கி நகர்ந்திருந்தாலும், நடைமுறையில் ஆதி காலத்துக்கே திரும்பிப் போய்க்கொண்டிருக்கிறோம்.

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, ஐந்தாண்டுத் திட்டங்களின் கீழாக தேசிய அளவில் மேற்கொள்ளப்பட்ட சமூக வளர்ச்சித் திட்டங்கள் மக்களைச் சரியாகச் சென்று சேராததற்குக் காரணம், உள்ளாட்சி நிர்வாகத்தின் திறனின்மைதான் என்று கண்டறியப்பட்டது. பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளைப் பலப்படுத்துவதைப் பற்றி அதன் பிறகுதான் தீவிர கவனம் செலுத்தப்பட்டது. பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளை ஆய்வுசெய்வதற்காகத் தனி அமைப்புகள் அறுபதுகளின் தொடக்கத்தில் நிறுவப்பட்டன. காந்தியரான தரம்பால் அந்த அந்த ஆய்வுப் பணியில் தன்னைத் தீவிரமாக ஈடுபடுத்திக்கொண்டார். அப்போது அவர் தனது ஆய்வுக்குத் தேர்ந்தெடுத்துக்கொண்ட மாநிலம் தமிழ்நாடு என்பது சிறப்புக்குரியது. உள்ளாட்சி நிர்வாகத்தில் தேசிய அளவில் முன்மாதிரியாக இருந்த தமிழகம், இன்று வந்துசேர்ந்திருக்கும் இடம் பெருமைக்குரியது அல்ல.

போட்டியிடாமல் ஒருவரைத் தேர்ந்தெடுப்பதற்காக அவரிடம் ஒரு கிராமம் பத்து லட்சமோ இருபது லட்சமோ பணம் கேட்கலாம். அதைக் கொண்டு கோயிலோ பள்ளிக்கூடமோ கட்டிக்கொள்ளத் திட்டமிடலாம். ஆனால், தெருவிளக்கு எரியவில்லை என்றும், குடிநீர் வசதி செய்யப்படவில்லை என்றும் எந்தத் தார்மீக ஆவேசத்தோடு அவரை நோக்கி நாளைக்குக் கேள்வியெழுப்ப முடியும்? ஒரு கிராமமோ அல்லது சில கிராமங்களோ தற்காலிகமாகக் கிடைக்கும் சில சலுகைகளுக்காக அடுத்துவரும் ஐந்தாண்டு காலத்துக்குத் தங்களை ஒரு தனிநபரிடம் அடிமை சாசனம் எழுதிக்கொடுக்கிறது என்பதைத் தவிர்த்து இதில் வேறென்ன இருக்கிறது?

ஜனநாயக மீறல்

தேர்தல் செலவு சிக்கனமாகிறது, ஊரில் பதற்றமான சூழல் தவிர்க்கப்படுகிறது என்று இதையெல்லாம் நியாயப்படுத்துகிற தரப்பும் இருக்கிறது. ஆனால், அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுபவர்களில் யாரேனும் குறிப்பிட்ட அந்தக் கிராமத்தில் மிகவும் பிற்படுத்தப்படும் நிலையில் இருக்கும் ஒரு சமூகத்தில் இருந்தோ, ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்தோ தேர்ந்தெடுக்கப்படும் வாய்ப்பு இருக்கிறதா? ஏலம் விட்டாலும் எல்லோரும் அந்த ஏலத்தில் கலந்துகொண்டு தலைவராகிவிட முடியாது. அந்தந்தப் பகுதியில் நிலவுடைமையைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் குறிப்பிட்ட சாதியைச் சார்ந்தவராகவும் அவர் இருக்க வேண்டும். எனவே, ஏலம் போடுவது உள்ளாட்சிப் பதவிகளையும் வாக்குரிமையையும் மட்டுமல்ல, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் வாயிலாகக் கிடைத்திருக்கும் சமத்துவ உரிமைகளையும் சேர்த்துத்தான்.

போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்படுவதும் தேர்தல் அரசியலில் இயல்பான ஒன்றுதானே என்று மிக எளிதான பதில் ஒன்றைச் சொல்லிவிட முடியும். ஆனால், அவ்வாறு கடந்த காலத் தேர்தல்களில் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பெயர்களைக் கவனமாகப் பரிசீலித்தால் அரசியல் செல்வாக்கு என்பதையெல்லாம் தாண்டி, அவர்கள் ஆதிக்க சாதிகளின் பிரதிநிதிகளாக, பெரும் பணக்காரர்களாக, நிலவுடைமையின் குறியீடுகளாக இருப்பதைக் கண்டுகொள்ள முடியும். இதுவரை, எதிர்த்துப் போட்டியிட முடியாத அச்சுறுத்தலை ஏற்படுத்தித் தலைமுறை தலைமுறையாக அதிகாரத்தைத் தங்களது ஏகபோகமாக வைத்திருந்தவர்கள் இன்று அதை ஏலத்தின் வாயிலாகத் தொடர்கிறார்கள் என்பதுதான் இத்தகைய நிகழ்வுகள் உணர்த்தும் செய்தி.

கிராம மக்கள் தேர்தல் முறையின் மீது நம்பிக்கை இழந்ததன் விளைவே இதுபோன்ற ஏலங்கள் என்றும் சில விமர்சனங்கள் எழுகின்றன. சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களிக்கும் அனைவரும் தேர்ந்தெடுக்கப்படப்போகும் பிரதிநிதியின் மீது நம்பிக்கை கொண்டே வாக்களிக்கிறார்களா என்ன? இந்த மாநிலத்திலும் நாட்டிலும் சட்டங்கள் இயற்றப்படுவதிலும், திட்டங்கள் தீட்டப்படுவதிலும் தனக்கும் பங்கு இருக்கிறது என்பதன் வெளிப்பாடு அல்லவா தேர்தல் வாக்குரிமை? அதுபோல, உள்ளாட்சித் தேர்தல் என்பதும் ஒரு ஊரகப் பகுதி தனது நிர்வாகத்தைத் தானே நடத்திக்கொள்வதற்கான மிகப் பெரிய ஜனநாயக உரிமையல்லவா?

ஒப்பீட்டளவில், சட்டமன்றத் தேர்தல்களைவிடவும் கிராம ஊராட்சித் தேர்தல்களுக்கு அதிகம் செலவாகிறது. அதுவும் இந்த முறை போட்டியிட முடிவெடுத்தவர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகச் செலவழித்துக்கொண்டுதான் இருக் கிறார்கள். ஆனால், ஒப்பீட்டளவில் எவ்வளவுதான் செலவுகள் செய்தாலும் ஊராட்சித் தேர்தல் முடிவுகளைத் தீர்மானிப்பதில் பணம் வகிக்கும் பங்கு குறைவானதுதான்.

ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நடக்க வேண்டிய ஊர்த் திருவிழா என்பதால், கொண்டாட்டங்கள் இருக்கும். ஆனால், அதையும் தாண்டி அந்த ஊரின் முகமாக ஒருவரைத் தேர்ந்தெடுக்கும் நிகழ்வு இது. பணபலம் நிறைந்த ஒருவரை, சாமானியர்களின் பிரதிநிதியாக ஒருவர் தோற்கடித்துவிடக்கூடிய வாய்ப்பும் அதில் உண்டு. அந்த வாய்ப்பு விற்பனைக்கானது அல்ல. அதுவே இன்று நம் கைகளில் வழங்கப்பட்டிருக்கும் மிகப் பெரும் ஜனநாயகப் பரிசு.

தேர்தல் ஆணையத்தின் பொறுப்பு

சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களின்போது பணத்துக்காக வாக்குகளை விற்பது அவமானத்துக்குரியது என்ற பிரச்சாரத்தை முன்னெடுத்த தேர்தல் ஆணையம், உள்ளாட்சித் தேர்தலுக்கும் அத்தகைய பிரச்சாரத்தைத் தீவிரமாக முன்னெடுக்க வேண்டும். அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று விழிப்புணர்வை மேற்கொள்வது போலவே, உள்ளாட்சி நிர்வாகத்தின் முக்கியத்துவம் என்ன என்பதையும் அதற்கான பிரதிநிதிகளின் அதிகாரங்கள் என்ன என்பதையும் மக்களுக்கு விளக்கிச்சொல்ல வேண்டும். இல்லையென்றால், இந்தியாவின் கிராமங்களில் நீண்ட காலமாக நீடித்துவந்த நிலவுடைமை, சாதிய ஆதிக்கங்களை நவீன அரசமைப்புக்கு ஏற்றவாறு உருமாற்றும் செயலாக உள்ளாட்சித் தேர்தல் அமைந்துவிடக்கூடும்.

இந்த ஜனநாயக மீறல்களைக் கட்டுப்படுத்துவதில், தேர்தல் ஆணையத்துக்கு மிகப் பெரும் பொறுப்பு இருக்கிறது. போட்டியின்றிப் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படும் அனைத்து ஊர்களிலும் எதிர்த்துப் போட்டியிடாததற்கான காரணங்கள் என்னவென்று விசாரணை நடத்த வேண்டும். ஏலம் விடப்பட்டிருப்பது உண்மையென்று தெரியவந்தால், அதற்குப் பொறுப்பானவர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, மறுதேர்தல் அறிவிக்கப்பட வேண்டும். ஜனநாயகத்தைக் கேலிக்கூத்தாக்கிவிடாமல் தேர்தல் ஆணையம் காப்பாற்ற வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x