Published : 16 Dec 2019 07:49 AM
Last Updated : 16 Dec 2019 07:49 AM

360: மருத்துவக் கழிவுகள் என்னவாகின்றன?

மருத்துவக் கழிவுகள் என்னவாகின்றன?

நம்மைச் சுற்றிலும் ஏராளமான மருத்துவமனைகள் இருக்கின்றன. அங்கு நாள்தோறும் ஏராளமான நோயாளிகள் வந்துசெல்கிறார்கள். ஒரு நாளைக்கு எவ்வளவு ஊசிகள் போடப்படும்? எவ்வளவு பேருக்கு அறுவைசிகிச்சை நடக்கும்? எத்தனை பேருக்குக் கால், கைகள் போன்ற உறுப்புகள் நீக்கப்படும்? இந்த மருத்துவக் கழிவுகளையெல்லாம் என்ன செய்கிறார்கள் என்று கேள்வி கேட்டால், பலரும் திகைத்துப்போவார்கள். சென்னை முழுவதும் சுமார் ஆயிரம் மருத்துவமனைகள் இருக்கின்றன. இந்த மருத்துவமனைகளின் கழிவுகளைச் சுத்தப்படுத்துவதற்கு இரண்டே இரண்டு நிலையங்கள்தான் - அதுவும் மதுராந்தகத்தில் - இருக்கின்றன. இத்தனை மருத்துவமனைகளின் கழிவுகளையும் இரண்டு நிலையங்கள்தான் சுத்திகரிக்கின்றனவா என்று கேட்டால் இல்லை என்பதுதான் பதில். பல மருத்துவமனைகள் சென்னை மாநகரின் ஒதுக்குப்புறத்திலும் ஏரிகள் போன்ற நீர்நிலைகளிலும் கொண்டுபோய்க் கொட்டிவிடுவதுண்டு. மருந்து நிறுவனங்கள் காலாவதியான மருந்துகளையும் கொண்டுபோய் நீர்நிலைகளில் கொட்டிவிடுவதுண்டு. இந்த நீர்நிலைகளில் பலவும் குடிநீர் ஆதாரங்களாக இருப்பதால், மக்களுக்குக் கடுமையான பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. சென்னையைத் தவிர, ஏனைய தமிழ்நாட்டின் ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவமனைகளுக்கு ஒன்பது சுத்திகரிப்பு நிலையங்கள் மட்டுமே இருக்கின்றன. மருத்துவக் கட்டமைப்பில் இந்தியாவிலேயே சிறப்பான இடத்தை தமிழ்நாடு பெற்றிருந்தாலும், மருத்துவக் கழிவு மேலாண்மையைப் பொறுத்தவரை நாம் செல்ல வேண்டியதோ வெகுதொலைவு!

தமிழக அரசு பள்ளிக்கூடங்களில் செயற்கை நுண்ணறிவுப் பாடம்

அரசுப் பள்ளிக்கூடங்களின் மீதான அபிப்ராயம் மாறிவரும் சமகாலச் சூழலில், மேலும் ஒரு நற்செய்தி. தகவல் தொழில்நுட்பப் புரட்சியின் அடுத்த கட்டமாகிவரும் செயற்கை நுண்ணறிவை (ஆர்டிபிஷியல் இன்டெலிஜன்ஸ்) அரசுப் பள்ளிக்கூடங்களில் ஆறாவது வகுப்பு முதல் ஒன்பதாவது வகுப்பு வரையிலான மாணவர்களுக்குக் கற்றுத்தர பாடத்திட்டம் உருவாகிறது. இதற்காக மைக்ரோசாஃப்ட், கூகுள் நிறுவனங்களுடன் அரசு பேசிக்கொண்டிருக்கிறது. இந்தப் பாடத்துக்கான அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளைச் செய்துதரவும் புதிய ஆசிரியர்களைப் பணிக்கு நியமிக்கவும் திட்டமிட்டுவருகிறது. 6,000 அரசுப் பள்ளிக்கூடங்களில் ‘ஸ்மார்ட்’ வகுப்பறைகள் கட்டப்படும், உயர் தொழில்நுட்ப ஆய்வுக்கூடங்களும் அமைக்கப்படும். இதற்காக ரூ.462.62 கோடி செலவிட அரசு முடிவுசெய்திருக்கிறது. பெரும்பாலான அரசுப் பள்ளிக்கூடங்களில் கணினி, இணையதள இணைப்பு ஆகிய அடிப்படை வசதிகள்கூட இல்லை என்பதால், அவற்றை வழங்க அரசு முன்னுரிமை அளித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x