Published : 16 Dec 2019 07:45 am

Updated : 16 Dec 2019 07:45 am

 

Published : 16 Dec 2019 07:45 AM
Last Updated : 16 Dec 2019 07:45 AM

பிரிவினைக்கால விடுபடலைச்  சரிசெய்வதற்கே குடியுரிமைச் சட்டத் திருத்தம்!-  ராம் மாதவ் பேட்டி

ram-madhav-interview

நிஸ்துலா ஹெப்பர்

பாஜகவின் பொதுச் செயலாளரும் வடகிழக்கு மாநிலங்களுக்கான கட்சிப் பொறுப்பாளருமான ராம் மாதவ், ‘இந்தியப் பிரிவினையின்போது நிகழ்ந்த தவறுகளைச் சரிசெய்வோம் என்று தேர்தலின்போது பாஜக வாக்குறுதி அளித்தது. அதைக் குடியுரிமைச் சட்டத் திருத்தம் வழியாக நிறைவேற்றுகிறது’ என்கிறார். குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு எதிராக எதிர்க்கட்சியினர் முன்வைக்கும் வாதங்களுக்கு இந்தப் பேட்டியில் பதில் சொல்லியிருக்கிறார்.


நாடாளுமன்றத்தில் குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்ட பின்னர் வடகிழக்கில், குறிப்பாக அசாமில் பதற்றம் நிலவுகிறது. இதுபோல எதிர்வினை வரும் என்று எதிர்பார்க்கவில்லையா?

மாநிலங்களவையிலும் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டதன் மூலம், வரலாற்றுரீதியான வாக்குறுதியை எங்கள் அரசும் கட்சியும் நிறைவேற்றியுள்ளது. குடியுரிமையே இல்லாமல் அரச அங்கீகாரம் இல்லாத நிலையில், நம் நாட்டில் வாழ்ந்துகொண்டு பல ஆண்டுகளாகக் காத்திருப்பில் இருந்தவர்களுக்குக் கதவுகள் திறக்கப்படவுள்ளன. இந்தச் சட்டத் திருத்தம் மொத்த நாட்டுக்குமானது. வடகிழக்கில் பெரும்பாலான இடங்களில் நிலைமை இயல்பாகவும் அமைதியாகவுமே உள்ளது. அசாமில்தான் கொஞ்சம் போராட்டங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. மத்திய அரசும் அசாம் மாநில அரசும் அம்மாநிலத்தின் கலாச்சாரம், மொழியைப் பாதுகாப்பதற்கு உறுதிபூண்டுள்ளது என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறோம். அசாம் உடன்படிக்கையை அமல்படுத்துவதில், அசாமின் அடையாளத்தைப் பாதுகாக்கும் சட்டம் மற்றும் இதர செயல்முறைகளை வழங்கும் சட்டக்கூறு 6-ஐச் செயல்படுத்துவதில் உறுதியாக உள்ளோம்.

முஸ்லிம்களைப் பட்டியலில் சேர்க்கவில்லை என்பது மிகப் பெரிய விமர்சனமாக உள்ளதே?

குடியுரிமை கோருவதற்கான வாய்ப்பைக் கொடுத்து சிறுபான்மையினரை மேம்படுத்துவதற்கான திருத்தம். ஒரு குறிப்பிட்ட காரணத்துக்காக சிறுபான்மையினருக்கு மட்டுமேயான திருத்தம் இது. பிரிவினையின்போது, மதத்தின் அடிப்படையிலேயே மிகப் பெரிய இடப்பெயர்வு இரண்டு பக்கமும் நடந்தது. முதல் மூன்று ஆண்டுகளில் குடியுரிமை தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதில் கவனம் கொண்டோம். பாகிஸ்தானும் வங்க தேசமும் இஸ்லாமியக் குடியரசுகளான பின்னர், நிறையப் பேர் இடம்பெயர்ந்து இங்கே வந்துவிட்டனர். வங்கதேசத்திலிருந்து அப்படியான இடப்பெயர்வுகள் குறைந்துவிட்டன. ஆனால், பாகிஸ்தானிலிருந்து தொடர்ந்துகொண்டுதான் உள்ளது. பிரிவினை நடந்தவுடன் நாம் அவர்களை நம் நாட்டுக்குள் ஏற்றுக்கொண்டோம். வங்கதேசப் போருக்குப் பிறகும் அவர்களை ஏற்றுக்கொண்டோம். இந்திரா காந்தி – முஜீப் உடன்பாட்டின்படி, 15 லட்சம் சிறுபான்மையினர் இந்தியாவுக்கு வந்தனர். ஆனால், அவர்களுக்குக் குடியுரிமை மறுக்கப்பட்டது. அவர்கள் நம் மக்களைப் போலவே அதிகாரபூர்வக் குடியுரிமையின்றி வாழ்ந்துவந்தனர். இந்தச் சட்டத் திருத்தம் இவர்களைப் போன்றவர்களுக்குக் குடியுரிமை கோருவதற்கான வாய்ப்பைத் தருகிறது. நாங்கள் எவர் மீதும் இதைத் திணிக்கவும் இல்லை. யாருக்கும் குடியுரிமையை மறுக்கவும் இல்லை.

ஆனால், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் சுட்டிக்காட்டியதைப் போலவே பலுசிஸ்தானியர்களும் ஹஜராக்களும் அகமதியாக்களும் மதரீதியாகத் துன்புறுத்தலுக்கு உள்ளாகுபவர்கள்தானே… அவர்கள் ஏன் இந்தப் பட்டியலில் வரவில்லை?

நமது குடியுரிமைச் சட்டங்களின் அடிப்படையில் அவர்கள் 12 ஆண்டுகள் வாழ்ந்த நிலையில், குடியுரிமை பெறுவதற்கு விரும்பினால் விண்ணப்பிக்கலாம். இயல்பாக்கம் என்று அதற்குப் பெயர். யாருக்கும் வேண்டாமென்று சொல்ல முடியாது. பிரிவினை தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையை இந்தக் குறிப்பிட்ட சட்டத் திருத்தம் தீர்க்க நினைக்கிறது. அந்த எண்ணிக்கை மிகவும் பெரிது.

வங்கதேசத்திலிருந்து மேற்கு வங்கத்துக்கு வந்த இந்துக்களின் வாக்குகளைக் குறிவைத்துதான், மத்திய அரசு இந்தச் சட்டத் திருத்தத்தைக் கொண்டுவருகிறது என்ற குற்றச்சாட்டு உள்ளதே?

இந்த முடிவைத் தேர்தல்களோடு தொடர்புபடுத்துவது சரியல்ல. வங்கத் தேர்தலுக்கு இன்னும் ஒன்று முதல் ஒன்றரை வருடம் வரை இருக்கிறது. அதுதான் நோக்கம் என்றால், தேர்தலுக்கு நெருக்கமாக நாங்கள் இந்தச் சட்டத் திருத்தத்தைக் கொண்டுவருவதை யாரால் தடுக்க முடியும்? நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னால் நாங்கள் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதுதான் இதன் முழுமையான நோக்கம்.

வங்கதேசத்தின் வெளியுறவு அமைச்சர் ஏ.கே.அப்துல் மாமின் டெல்லி வருகையை ரத்துசெய்திருக்கிறார். நாடாளுமன்றத்தில் இந்தத் திருத்தம் சம்பந்தப்பட்ட விவாதம் தொடர்பாக வங்கதேசத்திலும் ஆப்கானிஸ்தானிலும் காயப்படுத்தப்பட்ட உணர்வுகள் உள்ளதாகத் தெரிகின்றன. அரசு இந்த விவகாரத்தில் ராஜதந்திரரீதியாகத் தன் கையைச் சுட்டுக்கொண்டிருக்கிறதோ?

ராஜதந்திரரீதியாக மோசமான பின்விளைவுகள் ஏற்படுவதைத் தவிர்க்க எல்லா முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். பிரிவினைக் காலத்தில் முழுக்கத் தீர்க்கப்படாத சிக்கலை, விடுபடலைத் தீர்ப்பதற்கு எடுக்கப்படும் முயற்சிகளின் தொடர்ச்சியே இந்தத் திருத்தம். இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து இங்கேயே குடியிருப்பவர்கள் குடியுரிமையைக் கோருவதற்கான வாய்ப்பை அளிக்கப்போகிறோம். எந்த நாட்டுக்கு எதிராகவும் அச்சுறுத்தும் நிலைப்பாடு எதையும் நாங்கள் எடுக்கவில்லை. அதனால், இந்தச் சட்டத்தின் காரணமாக எந்த நாட்டின் நலனும் பாதிக்கப்படாது. தேசிய அளவில் குடிமக்கள் பதிவுமுறை வரப்போவதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்துள்ளார். சில சமூகங்களை ராஜதந்திரரீதியாகப் பலவீனப்படுத்துவதற்கான முயற்சி என்று சந்தேகம் உள்ளது. அந்த அச்சம் அடிப்படையற்றது. குடிமக்களின் உரிமைகளைக் குடிமக்கள் அல்லாதவருக்குத் தரும் எந்த நாடும் உலகத்தில் கிடையாது. அந்தந்த நாடுகள் குடியுரிமையை நிர்ணயிப்பதற்கு அதற்கேயுரிய வழிமுறைகளைக் கொண்டுள்ளன. அப்படியான ஒரு பணி இந்தியாவில் 1951-ல் நடந்தது. 1951-ல் செய்யப்பட்டதைத் தொடர்வதாகவே இது இருக்கும்.

© ‘தி இந்து’ ஆங்கிலம்,
தமிழில்: ஷங்கர்


பிரிவினைக்கால விடுபடல்குடியுரிமைச் சட்டத் திருத்தம்ராம் மாதவ் பேட்டி

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x