Published : 16 Dec 2019 07:37 AM
Last Updated : 16 Dec 2019 07:37 AM

குடியுரிமைச் சட்டத் திருத்தம் கடுமையாக எதிர்க்கப்பட வேண்டியது!- ப.சிதம்பரம் பேட்டி

சந்தீப் புகான்

குடியுரிமைச் சட்டத் திருத்தத்தை மக்களவையில் கடுமையாக எதிர்த்தவர்களுள் ப.சிதம்பரமும் ஒருவர். ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கிலிருந்து பிணையில் விடுதலையான பின்னர், அவர் தரும் முதல் பிரத்யேகப் பேட்டி இது. குடியுரிமைச் சட்டத் திருத்தம் குறித்தும், இந்தியா எதிர்கொண்டிருக்கும் பொருளாதாரப் பிரச்சினைகள் குறித்தும் பேசுகிறார்.

நீங்கள் சிறையில் இருந்த 106 நாட்களைத் திரும்பிப் பார்க்கும்போது உங்கள் மனதில் தோன்றுவது என்ன?

நமது குற்றவியல் நீதி அமைப்புதான் கவனத்துக்கு வருகிறது. விசாரணைக்காகக் காத்திருப்பவர்கள் மட்டுமே 14 ஆயிரம் பேர் சிறையில் பிணை கிடைக்காமல் உள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் ஐந்து முதல் ஏழு ஆண்டுகள் சிறையில் கழித்திருப்பார்கள். குற்றவியல் நீதி அமைப்பின் நடைமுறைகள் மோசமாகச் சிதைந்துள்ளன என்பதை அடிக்கோடிட்டுக் காட்ட விரும்புகிறேன்.

நாட்டின் பொருளாதார விஷயத்தில் அரசு வழி தெரியாமல் தடுமாறிக்கொண்டிருப்பதாகக் குற்றம்சாட்டியுள்ளீர்கள். இந்தச் சூழ்நிலையில் நிதிப் பொறுப்பில் சிதம்பரம் இருந்தால் என்னவெல்லாம் செய்வார்?

முதலில் பிரதமரிடம் நாம் செய்த தவறுகளை ஒப்புக்கொள்ளச் சொல்வேன். பணமதிப்புநீக்கம், அடுத்து தவறாக வரைவுசெய்யப்பட்டு, மோசமாக அமல்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி, நாம் சந்திக்கும் பிரச்சினைகளின் இயல்புக்குத் தொடர்பே இல்லாத நிலையில் வரிவிதிக்கும் அமைப்பு களுக்கும் புலனாய்வு அமைப்புகளுக்கும் கொடுக்கப்பட்ட அதீத அதிகாரங்கள், வரி பயங்கரவாதம் ஆகிய தவறுகள் தலையாயவை. இன்று எந்த அதிகாரியும், எந்தத் துறையும் ஒரு அறிவிப்பாணையை அனுப்ப முடியும். அதனால், நமது தவறுகளை முதலில் ஒப்புக்கொள்ள வேண்டும். அடுத்தது, நோயறிதலிலேயே தவறு இருப்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். ரகுராம் ராஜன் உள்ளிட்ட பொருளாதார நிபுணர்கள் அமைப்புரீதியாகப் பிரச்சினைகள் இருக்கின்றன என்று சொன்ன பிறகு, சமீபத்தில்கூடத் தலைமைப் பொருளாதார ஆலோசகர் இந்தப் பிரச்சினைகள் காலச்சுழற்சியில் மீண்டும் மீண்டும் ஏற்படுபவை என்கிறார். முதல் இரண்டு ஆலோசனைகளையும் பிரதமர் ஏற்காவிட்டால், நிதி அமைச்சரைப் பதவி விலகுமாறு கூறுவேன். அதுதான் எனது மூன்றாவது அறிவுரை. இந்த அரசு கார்ப்பரேட் வர்க்கத்துக்கான நலன்களுக்காகச் செயல்படுகிறது. விநியோகத் தரப்பைக் கண்டுகொள்ளக்கூட இல்லை. நிதிப் பற்றாக்குறைக்கும் முதலீட்டுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைப்போம் என்று சொல்லி, ரிசர்வ் வங்கியிலிருந்து ரூ.1.75 லட்சம் கோடியை மத்திய அரசு எடுத்துக்கொண்டது. ஆனால், அதற்குப் பதிலாக ரூ.1.5 லட்சம் கோடியை 800 கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரித் தள்ளுபடியாகக் கொடுத்துவிட்டது. அதற்குப் பிறகு, இப்போது பற்றாக்குறையைச் சந்திக்கிறோம் என்றும், அதனால் ஜிஎஸ்டியை அதிகரித்து வரிவிதிப்பைக் கடுமையாக்கப்போகிறோம் என்றும் சொல்கிறீர்கள்.

குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறிவிட்டது. உங்கள் ட்வீட்டில் உச்ச நீதிமன்றத்துக்கு இது போகும் என்பதை ஊகமாகத் தெரிவித்திருந்தீர்கள்…

ஊகம் அல்ல. அதுதான் நடக்கும். குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு எதிராக ஏற்கெனவே நிறையப் பேர் வழக்கு தொடுப்பதற்காகத் தயாராகிவருகின்றனர். முறைப்படி, அரசியல் கட்சிகள் அதற்கு எதிராக மனு போடுமா என்பது தெரியாது. ஆனால், அக்கறை கொண்ட குடிமக்கள், குழுக்களால் இந்தச் சட்டத் திருத்தம் எதிர்க்கப்படும்.

ஹரிஷ் சால்வே போன்றவர்களும் முன்னாள் நீதிபதிகளும் இந்தச் சட்டத் திருத்தம் அரசமைப்புச் சட்டத்தின் 14-வது கூறினை மீறாது என்று சொல்கின்றனரே?

இந்த விஷயத்தில் இரண்டு தரப்புகள் இருக்கவே செய்யும். ஆனால், இந்தச் சட்டத் திருத்தத்துக்கு ஆதரவாக வைக்கப்படும் காரணங்கள், அரசியல் சாசனத்துக்கு ஒவ்வாதது. அரை டஜன் அண்டை நாடுகள் நமக்கு இருக்கின்றன. அதில் மூன்று நாடுகள் மட்டும் ஏன் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்? ஒரு காரணத்தின் அடிப்படையிலோ அதற்கு மேம்பட்ட காரணத்தினாலோ பத்து சமூகங்கள் பாதிக்கப்படுகின்றதெனில், அதில் ஆறு சமூகங்களை மட்டுமே பொறுக்கி எடுப்பதற்கான காரணம் என்ன? அதனால், வகைப்பாட்டு அடிப்படையிலேயே கடுமையாக எதிர்க்கப்பட வேண்டியதென்று கருதுகிறேன்.அசாம் மாநிலம் மொத்தமாக இந்தச் சட்டத்தை எதிர்த்துக் கொந்தளிக்கிறது. வடகிழக்கில் பிற மாநிலங்களிலும் பதற்றம் வெளிப்படுகிறது. இந்தச் சமயத்தில், மத்திய அரசு ஏன் இந்தச் சட்டத் திருத்தத்தைக் கொண்டுவர வேண்டும்? தேசிய குடிமக்கள் இறுதிப் பதிவேட்டில் விடுபட்ட 19 லட்சம் பேரில் பெரும் பகுதியாக விடுபட்டிருப்பது வங்காள இந்துக்கள். அவர்கள் எல்லோரும் சட்ட விரோதமாகப் புலம்பெயர்ந்த மக்கள் என்று கூற முடியாது. இத்தனை வங்காள இந்துக்களை அவர்கள் என்ன செய்யப்போகிறார்கள்? அவர்களை வதைமுகாம்களில் அடைக்கப்போகிறார்களா?

பின்வாசல் வழியாக இந்து ராஷ்டிரத்தைக் கொண்டுவரும் முயற்சி என்று சில விமர்சகர்கள் கூறுகின்றனர். உங்களது கருத்து என்ன?

ஆம். இந்தியாவில் உள்ள முஸ்லிம் சமூகத்துக்கு விடுக்கப்படும் தெளிவான, அப்பட்டமான சமிக்ஞைதான் இது. ‘நன்றாகக் கேட்டுக்கொள்ளுங்கள். நீங்கள் இங்கே சமம் அல்ல. நீங்கள் இந்தியாவில் இருந்தாலும், நீங்கள் சமமானவர்கள் அல்ல’ என்று சொல்லப்படும் செய்தியே அது. ‘நீங்கள் இந்தியாவில் வாழலாம். இந்தியாவில் ஒரு வேலை பார்த்து பிழைப்பையும் நடத்தலாம். ஆனால், நீங்கள் ஒரு இந்தியக் குடிமகனுக்கான உரிமைகள், சலுகைகளுக்கு உரிமையற்றவர்’ என்று சொல்லும் கோல்வாகர் – சாவர்க்கரின் கோட்பாடுதான் இதில் வேலை செய்கிறது. தேசிய குடிமக்கள் பதிவேடும் குடியுரிமைச் சட்டத் திருத்தமும் ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தைகள்.

எதிர்க்கட்சிகளுக்கும் காங்கிரஸுக்கும் அரசியல்ரீதியாக மறுவாழ்வு இருக்குமென்று கருதுகிறீர்களா?

எதிர்க்கட்சிகள் ஊக்கம் பெறத் தொடங்கியுள்ளன. ஆனால், இன்னும் போக வேண்டிய தூரம் உள்ளது. காங்கிரஸ் தலைமையையாவது அவர்கள் ஏற்க வேண்டும். ஒரு குறைந்தபட்ச செயல்திட்டத்தின் கீழ் எல்லோரும் ஒருங்கிணைவது அவசியம்.

காங்கிரஸிலேயே தலைமைப் பிரச்சினை இப்போது உள்ளது. குழப்பம் நிலவுகிறதே?

காங்கிரஸில் பிரச்சினை உள்ளது. ஆனால், சோனியாவை இடைக்காலத் தலைவராக்கியிருப்பதன் மூலம், ஒரு தற்காலிகத் தீர்வைக் கண்டிருக்கிறோம். காங்கிரஸ் தலைவர்கள் சேர்ந்தமர்ந்து கட்சி இயந்திரத்தை யார் நடத்துவது என்று ஒருவழியாக முடிவெடுப்பார்கள் என்று நினைக்கிறேன்.

© ‘தி இந்து’ ஆங்கிலம்,
தமிழில்: ஷங்கர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x