Published : 12 Dec 2019 07:40 AM
Last Updated : 12 Dec 2019 07:40 AM

குடியுரிமைத் திருத்தம் ஏன் எதிர்க்கப்படுகிறது?

ஷாதன் ஃபராசத்

யார் குடிமக்கள் ஆக முடியும் என்று ஒரு நாடு எப்படி வரையறுக்கிறதோ அதுதான் அந்த நாட்டின் பண்பையும் வரையறுக்கிறது. ஏனெனில், குடியுரிமைதான் உரிமைகளைப் பெறுவதற்கான உரிமையைத் தருகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை, 1950-ல் அரசமைப்புச் சட்டம் ஏற்கப்பட்டபோது, குடியுரிமை பற்றிய அரசமைப்புச் சட்டத்தின் இரண்டாவது பாகத்தின்படி இந்திய நிலப்பரப்புக்குள் தங்கள் இருப்பிடத்தைக் கொண்டவருக்குக் குடியுரிமை வழங்கப்பட்டது. அரசமைப்புச் சட்டக் கூறு 6-ன்படி, பாகிஸ்தான் பகுதியிலிருந்து இந்தியப் பகுதிக்குப் புலம்பெயர்ந்தோருக்கும் குடியுரிமை அந்தஸ்து வழங்கப்பட்டது. இப்படியான அரசமைப்பு முறையில் மதத்துக்குத் திட்டவட்டமாக இடமில்லாத நிலை இருந்தது. ‘குடியுரிமையைக் கையகப்படுத்தல் மற்றும் துண்டித்தல்’ - தொடர்பிலான வழிமுறைகளை உருவாக்குவதற்கான நாடாளுமன்றத்தின் அதிகாரத்தையும் நமது அரசமைப்புச் சட்டம் அங்கீகரிக்கிறது. இந்த ரீதியில்தான், நாடாளுமன்றம் குடியுரிமைச் சட்டம், 1955-ஐ இயற்றியது. இந்தச் சட்டத்தின் அடிப்படையிலும் மதம் என்பது தேவைப்படும் அம்சமாக இல்லை.

1955-ல் அமல்படுத்தப்பட்ட சட்டத்தின் குறிப்பிட்ட அம்சங்களைத் திருத்துவதற்காகத் தற்போது பரிந்துரைக்கப்பட்டுள்ள குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதா மதம் சார்ந்த அம்சத்தில் மாற்றம் செய்ய முனைந்துள்ளது.

மதச்சார்பற்ற அரசமைப்புச் சட்டத்தைக் கொண்ட இந்தியா போன்ற நாட்டில் குறிப்பிட்ட மதப்பிரிவினரின் குடியுரிமையைக் கையகப்படுத்த முடியுமா என்ற வெளிப்படையான புள்ளியில்தான் பெரும்பாலான விவாதங்கள் மையம் கொண்டிருக்கின்றன. குறிப்பாக, அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை அம்சம் மதச்சார்பின்மை என்று அடுக்கடுக்காக நீதிமன்றத் தீர்ப்புகள் அறிவித்திருக்கும் வேளை இது. ஆனால், இந்த அடிப்படைக் கேள்வியுடன், மத்திய அரசு பரிந்துரைத்திருக்கும் குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதாவைப் பார்க்கும்போது, அரசமைப்புக்கு விரோதமான அம்சங்கள் அதில் தூவப்பட்டிருக்கின்றன. இந்த மசோதாவில் நாடுகள், சமூகங்களை வகைப்படுத்திருக்கும் பட்டியல் அரசமைப்புரீதியாக சந்தேகத்துக்குரியது.

நாடுரீதியான வகைப்பாடு

முதலில் நாடுகளைப் பார்ப்போம். ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசத்தை ஒன்றாகச் சேர்த்து இதர அண்டை நாடுகளைச் சேர்க்காமல் இருப்பது ஏன் என்று தெரியவில்லை. பொதுவான வரலாறு என்பது காரணமாக இருக்க முடியாது. ஏனெனில், ஆப்கானிஸ்தான் எப்போதும் பிரிட்டிஷ் இந்தியாவின் அங்கமாக இருந்ததே இல்லை. இந்தியாவின் எல்லையில் இல்லாததால், நிலவியல்ரீதியாகவும் அண்டை நாடென ஆப்கானிஸ்தானைக் கோருவதற்கும் வாய்ப்பு கிடையாது. முக்கியமாக, இந்தியாவுடன் எல்லைப் பகுதியைப் பகிரும் நேபாளம், பூடான், மியான்மர் போன்ற தேசங்கள் ஏன் இந்தப் பட்டியலிலிருந்து விடுபட்டன?

குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதாவில் ‘நோக்கங்கள் மற்றும் காரணங்களுக்கான அறிக்கையிடுதல்’ பகுதியில் இதற்கான காரணம் சொல்லப்பட்டுள்ளது. இந்த மூன்று நாடுகளும் அரசமைப்புரீதியாக தங்கள் அரசு சார்ந்துள்ள மதம் என்னவென்பதை அறிவிக்கிறது. அதனால், சமயச்சார்பான ஆட்சி நடக்கும் நாடுகளில் ‘மதச் சிறுபான்மையின’ரைப் பாதுகாப்பதற்குத்தான் இந்த விடுபடுதல் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், இந்தக் காரணம் வலுவானதல்ல. இந்தியாவின் அண்டை நாடும், சமயச்சார்பான அரசுமான பூடானின் அதிகாரபூர்வ மதமாக வஜ்ராயன பௌத்தம் ஏன் இந்தப் பட்டியலிலிருந்து விடுபட்டது? பூடானைப் பொறுத்தவரை கிறிஸ்தவர்கள் வீட்டுக்குள் தனிப்பட்ட அளவிலேயே பிரார்த்தனை செய்ய முடியும். எல்லைப் பிராந்தியங்களில் உள்ள பல பூட்டானிய கிறிஸ்தவர்கள் தேவாலயங்களில் வழிபடுவதற்காக இந்தியாவுக்குப் பயணிக்கும் நிலை உள்ளது. ஆனால், குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதாவில் அவர்கள் பலனாளிகளாக இல்லை. அண்டை நாடுகளில் ‘மதச் சிறுபான்மையின’ருக்கு அச்சுறுத்தல் நிலவுவதைத் தடுப்பதுதான் நோக்கம் என்றால், பெரும்பான்மை பௌத்தர்களால் தமிழ் இந்துக்கள் மோசமாக நடத்தப்பட்ட வரலாறுள்ள நிலையில் அவர்கள் ஏன் இந்தப் பட்டியலிலிருந்து விடுபட்டனர்? மியான்மரில் ரோகிங்கியா முஸ்லிம் மக்கள் மீது இனப்படுகொலை ஏவப்பட்டு, நிறைய பேர் இந்தியாவுக்கு அகதிகளாக வந்த நிலையில் அவர்கள் ஏன் இந்தப் பட்டியலில் சேர்க்கப்படவில்லை? இந்த மூன்று நாடுகளை மட்டுமே சேர்த்திருக்கும் குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதாவின் தேர்வு சிலருக்கு மட்டும் சலுகை காட்டுவதாக உள்ளது.

குறிப்பிட்ட குழுக்களின் மீதான கவனம்

தனிப்பட்ட நபர்களை வகைப்படுத்துவதில், மதரீதியான கொடுமைக்கு உட்பட்டவர் என்ற ஒரு அம்சத்துக்கு மட்டுமே இந்த மசோதா சலுகைகளை அளிக்கிறது. இதுவே சந்தேகத்துக்குரிய வகைமைதான். மதரீதியாகத் துன்புறுத்தல் இந்த உலகில் அதிகமுள்ளதைப் போன்றே அரசியல்ரீதியான துன்புறுத்தல்களும் இருக்கவே செய்கின்றன. துன்புறுத்தலுக்கு உள்ளான பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாப்பதுதான் நோக்கம் எனில், மதரீதியான துன்புறுத்தலோடு மட்டுறுத்துவதில் எந்தவிதமான தர்க்கமும் இல்லை. மதரீதியான துன்புறுத்தல் என்பது சக மதத்தவரைப் பாதிக்காது என்ற ஊகமும் தவறானதே. வங்கதேசத்தில் தஸ்லிமா நஸ்ரினுக்கு நடந்தது ஒரு உதாரணம். அவரோ, அவரைப் போன்று அச்சுறுத்தப்படும் நபர்களோ இந்த மசோதாவால் பயனடைய முடியாது. வங்கதேசத்து இந்துக்களைவிடக் கூடுதலாக மதரீதியான கொடுமைகளை தஸ்லிமா அனுபவித்திருக்கக்கூடும். அதைப் போலவே பாகிஸ்தானில் ஷியா பிரிவினர் தீவிரமான கொடுமைகளுக்கு உள்ளாகியுள்ளனர். பயனாளிகள் பட்டியலில் நாத்திகர்கள் விடுபட்டிருப்பது அதிர்ச்சி தருவது.

‘மதரீதியான சிறுபான்மையினர்’ என்ற சலுகையில் ஆறு மதக் குழுக்களை (இந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், சமணர்கள், பார்சிகள், கிறிஸ்தவர்கள்) மட்டுமே மட்டுறுத்தியிருப்பதும் கேள்விக்குரியதே. பாகிஸ்தானில் அகமதியாக்கள் முஸ்லிம்களாக அங்கீகரிக்கப்படாமல் வேற்று மதத்தினராகவே நடத்தப்படுகின்றனர். இஸ்லாமின் அர்த்தத்தை மாற்ற நினைத்த மதத்தவர்களாக அவர்கள் கருதப்படுவதால், கிறிஸ்தவர்கள் அல்லது இந்துக்களை விடவும் மோசமாகத் தண்டிக்கப்படும் மக்கள் குழுவினராக உள்ளனர். தாங்கள் பிறந்த நாட்டில் மதரீதியாக அச்சுறுத்தப்பட்ட நிலையில் புலம்பெயரும் மக்களுக்குக் குடியுரிமை வழங்குவதுதான் குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதாவின் நோக்கம் என்றால், அதன் பட்டியலில் அகமதியாக்கள் இல்லாதது அதன் நோக்கத்தை மேலும் தெளிவாக்குகிறது.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 14-வது பிரிவு சொல்வதுபோல், இந்திய நிலப்பரப்புக்குள் எந்த நபருக்கும், எந்தக் குடிமகனுக்கும் ‘சட்டரீதியான சமத்துவம்’, ‘அனைவருக்கும் சட்டரீதியான பாதுகாப்பு’ ஆகிய அம்சங்களை அரசு மறுக்க முடியாது. குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதாவில் இருக்கும் பொருந்தாத அம்சங்களின் அடிப்படையில் பார்க்கும்போது, ஒரே மாதிரியாகப் பாதிக்கப்பட்டவர்கள் இந்தியாவுக்கு ‘சட்டவிரோத’மாகப் புலம்பெயர்ந்து வந்தவர்கள் எனில், அவர்களுக்கு சட்டரீதியான சமமான பாதுகாப்பை இந்த மசோதாவால் கொடுக்க முடியாமல்போவது மட்டுமல்ல; கூடுதலாகத் தகுதி கொண்டவரைப் புறக்கணித்து, குறைவான தகுதி கொண்டவருக்கே குடியுரிமை அளிக்கும் அம்சத்தையும் இந்த மசோதா கொண்டுள்ளது.

எதன் தொடக்கம் இது?

மியான்மரில் தனது உயிரைக் காப்பாற்றுவதற்காக இந்தியாவுக்குள் வரும் ஒரு ரோகிங்கியா முஸ்லிம் இந்தியக் குடியுரிமைக்குப் பரிசீலிக்கப்பட முடியாத நிலையில், மதரீதியாக உயிருக்கு அச்சுறுத்தப்படாத நிலையில் வங்கதேசத்திலிருந்து பொருள் தேடலுக்காக வரும் ஒரு இந்துவை மதரீதியான அச்சுறுத்தல் என்று எந்த அடிப்படையில் குடியுரிமைக்குப் பரிசீலிப்பதை ஒருவர் விளக்க முடியும்? கொடுமைகளிலிருந்து தப்பிப்பதற்காக ஒரு படகில் யாழ்ப்பாணத்திலிருந்து வரும் தமிழர் எப்படி ‘சட்டவிரோதக் குடியேறி’யாகவா இருக்க முடியும்? தொடர்ந்து இங்கே வாழ்வதன் இயல்பில் அவர் ஏன் குடியுரிமைக்கு விண்ணப்பிக்க இயலாது? இதைப் போன்ற பல்வேறு உதாரணங்களை வைத்து குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதாவின் வலுக்கட்டாய இயல்பை வெளிப்படுத்துவது அத்தனை சிரமமான காரியமல்ல. குடியுரிமையைப் பெறுவதற்கு நாட்டில் வசிக்க வேண்டிய காலம் 11 ஆண்டுகளிலிருந்து ஐந்து ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டுள்ளது. தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள சட்டத்திருத்த மசோதாவானது சட்ட விதிகளின்படி அனைவருக்கும் பொதுவானதாக அன்றி சிலருக்கு மட்டுமே சலுகை காட்டுவதாக அமைந்துள்ளது.

மேலே சொல்லப்பட்டதுபோல, அரசமைப்புரீதியான எந்தத் தர்க்கத்துக்குள்ளும் குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதா வரவில்லை. ஆனால், குதர்க்கமான அரசியல் தர்க்கம் அதில் இருக்கவே செய்கிறது. சட்டத்தின்படி இந்தியாவை இந்து ராஷ்டிரமாக்குவதற்கான முதல் முயற்சி இது. இது அரசமைப்புக்கு ஒவ்வாத சட்டம் என்று நீதித் துறை வலியுறுத்திக் கூற வேண்டும். அப்படிச் செய்யாமல்போனால், இது முடிவாக அல்ல; இதுபோன்ற சட்டரீதியான நகர்வுகளுக்கு இது தொடக்கமாகவே அமையும். காலப்போக்கில் நாம் அறிந்த அரசமைப்பையும் முடிவுக்குக் கொண்டுவந்துவிடும்.

© தி இந்து, தமிழில்: ஷங்கர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x