Published : 11 Dec 2019 08:15 AM
Last Updated : 11 Dec 2019 08:15 AM

சுட்டுக் கொல்லப்பட வேண்டியது பாலினப் பாகுபாடுதான்

ஹைதராபாத்தில் நடந்த கொடூரமான கூட்டுப் பாலியல் வல்லுறவும் கொலையும் மாபாதகச் செயல். அந்தச் சம்பவம் ஏற்படுத்திய தாக்கத்துக்குச் சற்றும் குறைவில்லாதது, அதைத் தொடர்ந்து காவல் துறை நிகழ்த்திய என்கவுன்ட்டரும் அதை மக்கள் கொண்டாடிய விதமும்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்துக்கு நியாயம் வழங்கப்பட வேண்டும், இனி இப்படியொரு கயமை நடக்காமல் தடுக்கப்பட வேண்டும், இத்தகைய குற்றங்களைச் செய்ய இனி யாரும் யோசிக்க வேண்டும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால், பிரச்சினையின் வேரைப் பிடுங்குவதற்குப் பதிலாகக் கண்ணுக்குக் கண் என்ற கற்கால வழிமுறையை நோக்கித் திரும்புவது ஒரு நாகரிக சமூகத்துக்கான இலக்கணம் அல்ல.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. படிப்பு, வேலை, தொழில் நிமித்தமாக வெளியே செல்லும் பெண்கள் பாதுகாப்பாக வீடு திரும்புவார்கள் என்பதற்கு உத்தரவாதம் இல்லை என்ற அச்சத்தை நாடு முழுவதும் நடந்துவரும் இதைப் போன்ற பல சம்பவங்கள் ஏற்படுத்திவருகின்றன.

ஆனால், இவை அத்தனையும் நம் சமூகத்தில் நிலவும் பாலினப் பாகுபாட்டில் பெண்களைத் துச்சமாக அணுகும் சமூக மனநிலையின் தொடர்ச்சி என்பதை மறந்துவிட இயலாது. பாலியல் வன்முறைகள் மட்டுமல்ல; பாலியல் சீண்டல்களும் நம் நாட்டில் அதிகம். ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்திருக்கும் இவை யாவும் நம் சமூகத்தில் புரையோடிப்போயிருக்கும் நோய்க்கூறு. பாலின சமத்துவம் நம் சமூகத்தில் என்னவாக இருக்கிறது என்பதை ஆழ்ந்து நோக்கும் நிர்ப்பந்தத்தையே இத்தகைய சம்பவங்கள் உருவாக்குகின்றன.

வெறுமனே நான்கு பேரைச் சுட்டுக் கொன்றுவிடுவதால், எல்லாவற்றுக்கும் முடிவுகட்டிவிட முடியாது. மேலும், பாலியல் வன்முறை வழக்குகள் இழுத்தடிக்கப்படுவதும், பாதிக்கப்பட்டோருக்கு உரிய நீதி கிடைக்காததும் சேர்ந்து மக்களிடம் உண்டாக்கும் மன அழுத்தம் நீதித் துறையின் சீர்திருத்தத்துக்கு வழிவகுக்க வேண்டும். மாறாக, காவல் துறையின் அத்துமீறலுக்கு அல்ல.

புதுடெல்லியில் ஓடும் பேருந்தில் 2012 டிசம்பரில் நடந்த கூட்டுப் பாலியல் வல்லுறவு சம்பவம் தேசத்தின் மனசாட்சியை உலுக்கியதைத் தொடர்ந்து, பெண்களின் பாதுகாப்புக்காக மத்திய அரசு நிதி ஒதுக்குகிறது. இப்படி ஒதுக்கப்படும் நிதியில் தமிழ்நாடு இதுவரை பெற்றிருக்கும் தொகை ரூ.190.68 கோடி. ஆனால், அதிலிருந்து வெறும் ரூ.6 கோடியை மட்டுமே தமிழக அரசு செலவழித்திருக்கிறது என்பது நம்முடைய அரசாங்கங்கள் இந்தப் பிரச்சினையை எவ்வளவு அலட்சியமாகக் கையாள்கின்றன என்பதற்கு ஓர் உதாரணம்.

சட்டங்கள் மேலும் கூர்மைப்படுத்தப்பட வேண்டும். வழக்கு விசாரணை துரிதமாக நடைபெற வேண்டும். சட்டப்படியான வழக்கு விசாரணையும், நீதித் துறை அளிக்கும் தண்டனையும்தான் ஒரு ஜனநாயக நாட்டின் நடைமுறையாக இருக்க முடியும். பெண் எனும் சக உயிரை எப்படி மரியாதையாக நடத்துவது என்பதை வீடுகளிலும் பள்ளிக்கூடங்களிலும் கற்பிப்பதன் முக்கியத்துவத்தை ஒவ்வொருவரும் உணர்வதே பாதிக்கப்பட்ட பெண்களிடம் கோரும் உண்மையான மன்னிப்பாக இருக்க முடியும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x