Published : 10 Dec 2019 07:18 AM
Last Updated : 10 Dec 2019 07:18 AM

360: ஒப்பனையில் ஒளிந்திருக்கும் ஆபத்து

ஒப்பனைப் பிரியையா நீங்கள்? அப்படியெனில், நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனெனில், நீங்கள் பயன்படுத்தும் ஒப்பனைப் பஞ்சு (beauty blender), மை, உதட்டுப் பளபளப்பாக்கிகள் (lip gloss) போன்றவற்றில் ஈ.கோலை, ஸ்டாபிலோகோச்சி உள்ளிட்ட உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் சூரக்கிருமிகள் (superbugs) அதிக அளவில் இருப்பதாக சமீபத்திய ஆய்வொன்று தெரிவிக்கிறது.

இதில் முக்கியமாக, ஒப்பனைப் பஞ்சை முகத்தில் தடவிவிட்டு சுத்தம் செய்யாமல் வைப்பதால் இந்தக் கிருமிகள் கும்மாளமிட்டுக்கொண்டு பெருகுகின்றன. இந்த ஆய்வானது ‘ஜர்னல் ஆஃப் அப்ளைடு மைக்ரோபயாலஜி’ என்ற இதழில் வெளியாகியிருக்கிறது.

இதன்படி, 93% ஒப்பனைப் பஞ்சு பயன்பாட்டுக்குப் பிறகு சுத்தம் செய்யாமல் விடப்படுகின்றன. பலரும் இந்த ஒப்பனைப் பொருட்களின் காலாவதி நாட்களையும் பார்ப்பதில்லை. பிரபலங்களைக் கொண்டு விளம்பரப்படுத்தப்பட்டு உலகெங்கும் சுமார் 70 லட்சம் என்ற எண்ணிக்கையில் இந்த ஒப்பனைப் பஞ்சுகள் விற்பனையாகியிருக்கின்றன. ஒப்பனையில் காட்டும் ஆர்வத்தைக் கொஞ்சம் உடல் நலத்திலும் காட்டலாம்தானே?

கொசுக்களின் ரகசிய வாழ்வு

கொசு என்றாலே எரிச்சலும் கோபமும் ஏற்படுவது இயல்பு. இந்த நூற்றாண்டில் அங்கிங்கெனாதபடி எங்கும் வியாபித்திருப்பது கொசுக்கள்தான். உங்களுக்குத் தெரியுமா? கொசுக்களில் மொத்தம் 3,500 வகைகள் உள்ளனவாம்! கொசுக்களைப் பற்றிய ஆராய்ச்சிகள் அரைகுறையாகவும் மேலோட்டமாகவும்தான் உள்ளன. ஒரு ஆய்வு புதியதொரு தகவலைச் சொல்கிறது. தேனீக்களைப் போல கொசுக்களும் அயல்மகரந்தச் சேர்க்கைக்கு உதவுகின்றன என்பதுதான் அது. பூக்களில் உள்ள தேனைக் குடிப்பதற்காக தேனீக்களைப் போல கொசுக்களும் வருகின்றன.

ஆனால், அவை தேன்கூடுகளைக் கட்டுவதில்லை. தேனை உண்ணும் எறும்பு போன்ற சிறு பூச்சிகளின் வாயில்கூடத் தங்களுடைய குழலை வைத்து தேனை உறிஞ்சிவிடும் வல்லமை கொசுக்களுக்கு உண்டு. மனிதர்களின் உடலிலிருந்து வரும் வாடையை மோப்பம் பிடித்துத்தான் கொசுக்கள் நம் ரத்தம் குடிக்கின்றன. சில பூக்களிலும் மனிதர்களின் வாடை இருப்பதாக நினைத்துக்கொள்வதால் அயல்மகரந்தச் சேர்க்கைக்குக் கொசுக்கள் பயன்படுகின்றன. அடுத்த முறை கொசுவைச் சந்திக்கும்போது கேளுங்கள்: நீங்கள் நல்லவரா, கெட்டவரா?

சிங்கப்பூர் தமிழருக்கு எத்தனை வயது?

தென்கிழக்கு ஆசிய நாடுகளில், குறிப்பாக சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் தமிழர்கள் குடியேறியது பத்து நூற்றாண்டுகளுக்கு முன்பு என்று இப்போது ஆவணபூர்வமாகவே நிரூபணமாகியிருக்கிறது. சிங்கப்பூரைக் கைப்பற்றிய பிரிட்டிஷார் 1843-ல் சிங்கபுர ஆற்றின் முகத்துவாரத்தை வெடிகுண்டுகள் வைத்து வெடித்து அகலப்படுத்தினர். அங்கே கிடந்த சில கல்வெட்டுகளைப் பிறகு சேகரித்து அருங்காட்சியகத்தில் பாதுகாத்து வைத்தனர். கிபி 10-ம் நூற்றாண்டு காலத்துக் கல்வெட்டில் ‘கேசரிவா’ என்ற சொற்றொடர் காணப்படுகிறது.

அது சோழ மன்னரும் சிங்கபுரத்தைக் கைப்பற்றியவருமான பர கேசரிவர்மன் பற்றிய சொல்லாகும். தமிழ்நாட்டின் சோழமண்டலக் கடற்கரையிலிருந்து புறப்பட்ட சோழப் படைகள், தென்கிழக்கு ஆசியாவில் அன்றைக்கிருந்த பல நாடுகளைக் கைப்பற்றியதுடன், அந்த நாடுகளுடன் வர்த்தக உறவுகளையும் ஆன்மிக, கலாச்சார உறவுகளையும் ஏற்படுத்திக்கொண்டன. புதிய நாடுகளில் மேற்பார்வை, நிர்வாகத்துக்காக ஏராளமான தமிழர்கள் குடியேற்றப்பட்டனர்.

அவர்களுக்காக அந்நாடுகளில் கல்விக்கூடங்களும் ஆலயங்களும் கட்டப்பட்டன. இவ்வாறு தமிழ்க் கலாச்சாரம் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் வேரூன்றியது. இது தொடர்பாகப் பல சான்றுகளைத் திரட்டியிருக்கிறார் ஆய்வாளர் ஐயின் சின்கிளேர். சிங்கப்பூரில் இப்போதுள்ள இந்திய வம்சாவழியினரில் தமிழர்கள்தான் பெரும்பான்மையினர். தமிழர்கள் சிங்கப்பூரின் எல்லாத் துறைகளிலும் முக்கிய பொறுப்புகளை வகிக்கின்றனர். அவர்களுடைய அறிவும் உழைப்பும் சிங்கப்பூரை முன்னேற்றியிருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x