Published : 09 Dec 2019 07:57 am

Updated : 09 Dec 2019 07:57 am

 

Published : 09 Dec 2019 07:57 AM
Last Updated : 09 Dec 2019 07:57 AM

சோமு நீ சமானம் எவரு! 

somu

அறுபதுகளின் பிற்பகுதி சென்னை ஜார்ஜ் டவுனில் ஒரு கோயில் கச்சேரி. அன்றெல்லாம் சபா கச்சேரிகளைவிட கோயில் கச்சேரிகளே அதிகம். செலவில்லாமல் சங்கீதப் பிரவாகத்தில் விடாய் தீர்ந்த பொற்காலம்! அன்று கோயிலில் (கச்சாலேஸ்வரர் கோயில் என்று நினைவு) மகாவித்வான் சோமுவின் தர்பார்.

கேட்க வேண்டுமா? கோயில் சுற்றுப்பகுதி எல்லாம் நிரம்பி, வெளியே தெருவெல்லாம் நிரம்பி எங்கும் அலைமோதியது கூட்டம். கூட்டம் நெருக்கித் தள்ளியதில் நகர்ந்து நகர்ந்து ஒரு திறந்த சாக்கடையின் விளிம்புக்கே வந்துவிட்டேன்.

அந்தச் சாக்கடையை ஒட்டி ஒரு சுவர். சுவரின் அடியில் கால் ஊன்றத் தோதாக அரையடி அகல விளிம்பு. விளிம்பில் ஒரு கால் ஊன்றி ஒரு கையால் சுவரை வளைத்து அணைத்து, மறுகால் சாக்கடை மேல் ஊசலாட மூன்று நான்கு பேர் தொங்கிக்கொண்டிருக்கின்றனர்.

இப்போது அவர்களில் நானும் ஒருவன். எனக்கு முன்னால் பஞ்சகச்ச வேஷ்டியைத் தொடைக்கு மேலே வழித்துக்கொண்டு தொங்கிக்கொண்டிருந்தவர் ஒரு புரோகிதர். மஞ்சள் ஏறிய பூணூலும், எண்ணெய் இறங்கிய சிகப்புக் கல் கடுக்கனும், வெற்றிலைச் சாறு வழிந்த கடைவாயுமாக அச்சுஅசலான தஞ்சை ஜில்லா முகம்.

அனல் வீசும் தீயிலும் உறை பனியிலும் நின்று தவம் செய்தார்கள் என்று புராணங்களில் படித்திருக்கிறேன். அன்று சாக்கடையில் தொங்கியபடி நாங்கள் செய்த சங்கீதத் தவத்தின் பயனாய் அமோகமாக அமைத்திருந்தது சோமு அண்ணாவின் கச்சேரி. கொட்டுகிற பனி, கொசுக்கடி, சாக்கடை நாற்றம், மரத்துப்போன கால்கள் ஒன்றும் எங்களுக்கு நினைவில்லை.

அதிலும் அன்று அவர் பாடிய கல்யாணி ஆலாபனையின்போது கல்யாணிக்கே உரித்தான ஜீவப்பிரயோகங்களையும் மூர்ச்சனைகளையும் தன் அசாதாரண சாரீரத்தில் செதுக்கிச் செதுக்கி அவர் படைத்தது ஒரு இணையற்ற படைப்பு. அந்த ராகத்தின் அத்தனை ஓட்டசாட்டங்களும் சங்கதிகளும் ஐம்பது வருஷத்துக்குப் பின் இன்றும் நினைவில் உறைந்துகிடக்கிறது.

அபூர்வப் பிரயோகம்

அன்று ஆலாபனையின்போது ஒரு கட்டத்தில் தார ஸ்தாயியில் ஊன்றி நின்று அவர் மின்னல்போல் சொடுக்கிய ஒரு அபூர்வப் பிரயோகத்தில் என் முன்னால் தொங்கிக்கொண்டிருந்த புரோகிதர் தன்னை மறந்து, ‘ஆஹா!’ என்றபடி சாக்கடைக்குள் காலை விட்டார்.

கணுக்காலுக்கு மேல் வரை சாக்கடைக் கும்பி கறுப்பாக வழிகிறது. அதையெல்லாம் யார் லட்சியம் செய்கிறார்கள்! கால் சாக்கடையில் கிடந்தாலும் ஆத்மாவோ சோமுவின் சங்கீத அமிர்தத்தில் அல்லவா ஊறிக்கிடக்கிறது! கச்சேரி முடிந்ததும் அந்தப் புரோகிதர் தெருவோரக் குழாயில் காலைக் கழுவியபடியே ‘ஆஹா... ஆஹா... என்ன சாரீரம்... என்ன பாட்டு...’ என்று கிறங்கியபடியே ஒரு தஞ்சைப் பகுதி வசவையும் சொல்லி ‘எவண்டா பாட முடியும் இவனைப் போல்’ என்று முத்தாய்ப்பு வைத்தார்.

சோமுவின் மீது அவருக்குள்ள அபரிமிதமான அபிமானம் இப்படி ஒரு வசைச் சொல்லாக வடிவெடுத்ததுபோலும். பிற்காலத்தில் சோமுவின் பல கச்சேரிகளில் அவரைப் பார்த்திருக்கிறேன். சோமுவின் தீவிர ரசிகர்கள் கூட்டத்தில் ஒருவர் அவர் என்று நினைத்துக்கொண்டேன். இப்படி எத்தனையோ ரசிக மணிகளைப் பெற்ற நாத மகா மண்டலேஸ்வரன் சோமு.

தென்னிந்திய பஜனை சம்ப்ரதாயம் எத்தனையோ சங்கீத ரத்தினங்களை நம் இசையுலகுக்கு அளித்துள்ளது. இதுபோன்ற பஜனை கோஷ்டிகளில் பாடும்போதுதான் கள்ளக்குரலில் முனகாமல் நன்கு வாய்விட்டு, குரல் திறந்து பூரண சுதந்திரத்துடன் பாடப் பயிற்சியும் வாய்ப்பும் ஏற்படுகிறது. பல்வேறு உருப்படிகளைப் பல்வேறு மொழிகளில் பாவபூர்வமாகப் பாடுவதற்கு பஜனைக்கூடம் நல்ல பயிற்சிக்களம். இப்படியாக, மதுரை பஜனை கோஷ்டிகளிலிருந்து அந்த நாளில் சோமுவும், பின்னாளில் டி.என்.சேஷகோபாலனும் இரண்டு மணிகளாக நம் இசையுலகுக்குக் கிடைத்தார்கள்.

இதிலும் நம் சோமு அண்ணாவுக்கு சரீரம், சாரீரம் இரண்டுமே நல்ல அமைச்சலானது. இரண்டுமே அவர் உழைத்து உருவாக்கியது என்பதுதான் அவரது கூடுதல் பெருமை. மதுரை செம்புக் கிணற்றுத் தெருவில் இருந்த கோயிலில் முத்து வஸ்தாது வைத்திருந்த உடற்பயிற்சிக் கூடத்தில் சரீரத்தை உறுதிசெய்தார் சோமு. அதே கோயிலில் இருந்த நாராயணக் கோனாரின் பஜனை கோஷ்டியில் சேர்ந்து பாடிப் பாடி சாரீரத்தைக் கட்டி எழுப்பத் தொடங்கினார். இந்த வரலாற்றை விரிக்கின் பெருகும்.

இனி அவர் குரல் விசேஷங்கள்...

சிலருக்குப் பிறவியிலேயே குரல் தேனாக இருக்கும். சோமுவுக்கு அப்படி ஒரு இயற்கையான சாரீர வசதி இல்லைதான். ஆனால், ஈடு இணையற்ற சாதகமும் உழைப்புமாக அவர் செய்த சங்கீதத் தவத்தினால் இனிமை, வலிமை என சர்வ உயர்ந்த அம்சங்களும் அவர் குரலில் சங்கமித்தன.

பரிபூரண ஸ்ருதிப் பிரக்ஞையும் இணையற்ற சாரீர பலமும் அதன் மீதான பூரண கட்டுப்பாடும் சோமுவின் சொத்து. ஒரு ரிங்மாஸ்டரைப் போல தான் நினைத்ததையெல்லாம் சாரீரத்தில் பேசவைத்தார். மூன்று ஸ்தாயிகளிலும் அவர் குரல் செய்த ஜாலங்கள் என் போன்ற ரசிகர்களுக்குக் கிட்டிய இணையற்ற நாத அனுபவங்கள். சாதாரண ரசிகர்களான எங்களை மட்டுமல்ல, பெரிய வித்வான்களையே பல்லைப் பிடித்துப் பார்க்கிற சுப்புடு போன்ற விமர்சகர்களையும் சோமுவின் குரல் கிறங்கவைத்தது.

1978-ல் மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் ஆதரவில் சோமு பாடியதைக் கேட்டுவிட்டு ‘ஆனந்த விகட’னில் சுப்புடு எழுதியது நினைவுக்கு வருகிறது. ‘விமர்சிக்க முடியாத விந்தைப் பிறவி சோமு; ஹி ஈஸ் எ ஃபினாமினன்’ என்று அன்று அவர் எழுதியிருந்தார். சோமுவின் கற்பனை பற்றியும், குரல் வளம் பற்றியும் அவர் எழுதியவற்றில் மறக்க முடியாத சில பகுதிகளை என் நினைவிலிருந்து இங்கு தருகிறேன்.

‘சோமுவின் கற்பனைகளுக்கு எல்லையே இல்லை. ஒரு அபூர்வப் பிரயோகத்தைக் குரலில் கொண்டுவர அவர் தன்னையே அர்ப்பணிப்பார். ஹிந்துஸ்தானி மகாவித்வான் காலஞ்சென்ற படேகுலாம் அலிகானின் எந்தப் பிரயோகத்தையும் சோமுவால் பாடிவிட முடியும். அன்று கச்சேரியில் அவர் பாடிய சந்திரகௌன்ஸைக் கேட்டு சொர்க்கத்தில் கான்சாகேப் நிச்சயம் மனம் குளிர்ந்திருப்பார். அன்று அநுமந்திர ஸ்தாயியிலிருந்து அதி தாரம் வரை அவர் குரல் செய்த மாயம் என்னை மெய்சிலிர்க்க வைத்தது’ என்று சுப்புடு எழுதியிருந்தார்.

நமது கர்னாடக சங்கீதச் சூழலில் பல வித்வான்களின் குரல் மற்றும் ஸ்ருதிப் பிரக்ஞை குறித்து ‘மோகமுள்’ நாவலில் வரும் பாபுவின் வழியாக தி.ஜானகிராமனின் ஆதங்கம் கூர்மையாக வெளிப்பட்டிருக்கும். சங்கீதப் பித்தனாகிய நான் ‘மோகமுள்’ளைப் பாராயணம் பண்ணிக் கொண்டிருந்த காலம் அது. ஹிந்துஸ்தானி சங்கீதத்தில் எனக்கு அன்று விஷய ஞானம் இல்லை என்றபோதிலும் அந்த வித்வான்களது ஸ்ருதிப் பிரக்ஞையும் குரல் வளமும் என்னைப் பிரமிக்க வைத்தன.

ஆகவே, குரல் வளத்திலும் ஸ்ருதிப் பிரக்ஞையிலும் அவர்களுக்குச் சற்றும் சளைக்காத சோமுவின் சங்கீதம் என்னைப் பெரிதும் கவர்ந்தது. இந்த விஷயத்தில் அன்று வழிகாட்டுதல்கள் ஏதுமின்றித் தன் உள்ளுணர்வே துணையாகத் தன் சொந்த வழியில் உழைத்துத் தன் சங்கீத ஆகிருதியை உருவாக்கிக்கொண்ட சுயம்பு என்றே நான் சோமுவைக் கருதுகிறேன்.

எத்தனை கச்சேரிகள்... எத்தனை கச்சேரிகள்...

இப்படி மேடையில் தன்னை முழுக்க முழுக்க அர்ப்பணித்துக்கொண்டு பாடியவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். எத்தனை கச்சேரிகள்... எத்தனை கச்சேரிகள். மற்றவர்களுடன் ஒப்பிடுகையில் நான் அதிகமாகக் கேட்ட கச்சேரிகள் இவருடையதுதான். ஆலாபனைகளின்போது அவரது அபூர்வ மனோதர்மத்தின் வண்ணங்கள், கற்பனைகள் நிறைந்த சிறிதும் பெரிதுமான பிரயோகங்கள் எல்லாம் இன்றும் என் நினைவின் செவியில் ஒலித்தபடியே உள்ளன.

ஒரு கச்சேரியில் அவரது விசேஷ ராகமான தோடி ஆலாபனையின்போது ஒருகட்டத்தில் வாயை முற்றிலும் மூடியபடி கன்னங்களும் தொண்டை நரம்புகளும் புடைக்க ஒரு ஊங்காரத் தொனியைச் சங்கொலிபோல் எழுப்பி நீண்ட கார்வையாக தோடியின் வண்ணத்தை அவர் காட்டியபோது கண்ணீர் சிந்தினேன்.

ஆனந்த போதையின் உன்மத்தமும் தன்னழிவும் பிறந்த அபூர்வ கணம் அது. இந்த அபூர்வ சங்கீத அனுபவத்தைப் பூரணமாகச் சொல்லில் வளைக்க இயலாத என் மொழி வறுமை குறித்து வருந்துகிறேன். சங்கீதத்தில் எனக்கு இப்படி ஒரு அநுபூதியை உருவாக்கி, பேரனுபவத்தைத் தந்து என்னை இறைமையின் அண்மைக்குக் கொண்டுசென்ற அந்த மகா கலைஞனுக்கு என் வந்தனம்.

- எஸ்.சிவகுமார், மூத்த பத்திரிகையாளர்,
இசை விமர்சகர்.
* ராமா நீ சமானம் எவரு என்பது தியாகையரின் தெலுங்கு கீர்த்தனை. இதற்கு ராமா
உனக்கு சமமானவர் யார் என்று அர்த்தம்.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

அபூர்வப் பிரயோகம்சோமுசமானம்குரல் விசேஷங்கள்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author