Published : 06 Dec 2019 08:19 AM
Last Updated : 06 Dec 2019 08:19 AM

பட்டியல் இனத்தவருக்கும் பழங்குடியினருக்கும் ‘கிரீமி லேயர்’ கூடாது

பட்டியல் இனத்தவரில் உயர் வருவாய்ப் பிரிவினருக்கு (கிரீமி லேயர்) இடஒதுக்கீடு வழங்குவதில் உச்ச நீதிமன்றம் உறுதியான ஒரு முடிவு எடுக்க வேண்டிய நேரம் இது. 2018-ல் தொடரப்பட்ட ஜர்னைல் சிங் வழக்கில், உயர் வருவாய்ப் பிரிவினரை இடஒதுக்கீட்டு உரிமையிலிருந்து விலக்கி வைக்கும் நடைமுறையானது பட்டியல் இனத்தவருக்கும் பழங்குடிகளுக்கும் பொருந்தும் என்று உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது. இதையடுத்து, முன்னதாக எம்.நாகராஜ் எதிர் இந்திய அரசு (2006) வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய ஏழு உறுப்பினர்கள் கொண்ட அமர்வை ஏற்படுத்துமாறு மத்திய அரசு கேட்டுக்கொண்டிருக்கிறது.

எம்.நாகராஜ் வழக்கில், பட்டியல் இனத்தவருக்கும் பழங்குடிகளுக்கும் நியமனத்தில் மட்டுமின்றி பதவி உயர்விலும் பணிமூப்பிலும் இடஒதுக்கீட்டு உரிமையை வழங்கிய சட்டத் திருத்தங்கள் சரியே என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. ஒரு சமூகத்தின் பின்தங்கிய நிலைமை, அரசுப் பணியில் அப்பிரிவினருக்குப் போதிய பிரதிநிதித்துவம் இல்லாத நிலை, இப்படி இடஒதுக்கீடு மூலம் நியமிப்பதால் அந்தத் துறையின் ஒட்டுமொத்தச் செயல்பாட்டுத் திறமையில் ஏற்படக்கூடிய விளைவு ஆகியவற்றையும் கவனத்தில் கொள்ளுமாறும் அத்தீர்ப்பு கூறியிருந்தது.

மத்திய அரசுப் பணிகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டில் உயர் வருவாய்ப் பிரிவினர் என்ற வரம்பானது இந்திரா சஹானி வழக்கில் (1992) அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், பட்டியல் இனத்தவர், பழங்குடிகளைப் பொறுத்தவரையில் அவர்களுடைய பின்தங்கிய நிலைமை எந்த அளவுக்கு இருக்கிறது என்ற ஆராய்ச்சிக்கெல்லாம் அவசியமே இல்லை என்று ஒன்பது நீதிபதிகளைக் கொண்ட அமர்வு அவ்வழக்கில் திட்டவட்டமாகக் கூறிவிட்டது.

பட்டியல் இனத்தவர், பழங்குடிகளைப் பொறுத்தவரையில் அவர்களுடைய பின்தங்கிய நிலைமை தொடர்பான அனுமானத்தைச் சமீபத்திய ஜர்னைல் சிங் வழக்கிலும் உச்ச நீதிமன்றம் அப்படியே ஏற்றுக்கொண்டுள்ளது. எனினும், அவர்களில் ஓரளவுக்குப் பொருளாதார வளர்ச்சி பெற்றவர்களை இடஒதுக்கீட்டிலிருந்து விலக்க வேண்டும் என்ற கேள்வி வந்தால், அது குறித்துப் பரிசீலிக்க வேண்டும் என்று கூறியிருப்பது வினோதமாக இருக்கிறது.

இடஒதுக்கீட்டைப் பொறுத்தவரையில் கிரீமி லேயர் என்ற பார்வை சரியே என்று ஏற்றுக்கொண்டிருக்கும் மத்திய அரசு, பட்டியல் இனத்தவர், பழங்குடிகளின் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதால், அந்த விதியை அவர்களுக்குப் பொருத்திப் பார்ப்பதே கூடாது என்கிறது. பட்டியல் இனத்தவர், பழங்குடிகள் பிரிவில் பதவி உயர்விலும் உயர் வருவாய்ப் பிரிவினரை ஒதுக்குவது என்பது சாத்தியமா, விரும்பத்தக்கதா என்ற கேள்வியும் எழுகிறது.

எனவே, பட்டியல் இனத்தவருக்கும் பழங்குடியினருக்குமான இடஒதுக்கீட்டில் கிரீமி லேயர் கொள்கையைப் புகுத்தினால், அது சமூக சமத்துவத்துக்காக அரசமைப்புச் சட்டத்தைத் திருத்தி இடஒதுக்கீட்டைக் கொண்டுவந்த நோக்கத்தையே தோற்கடித்துவிடும். எனவே, இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதில் அளிக்கும் வகையில், சமூக நீதிக்கு வலு சேர்க்க இந்திய நீதித் துறை வரலாற்றில், ஆக்கபூர்வமான தீர்ப்பு வழங்கப்பட வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x