Published : 05 Dec 2019 10:52 AM
Last Updated : 05 Dec 2019 10:52 AM

பாலியல் வன்கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி எப்போது?

கால்நடை மருத்துவராக இருந்த பெண் ஒருவர் கடந்த வாரம் ஹைதராபாத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப் பட்டுப் படுகொலை செய்யப்பட்டது நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது நாடாளுமன்றத்திலும் பிரதிபலித்தது. பதின்ம வயதைக் காரணம் காட்டிப் பல குற்றவாளிகள் தப்பி விடுவதையும், மரண தண்டனை விதிக்கப்பட்ட சிலர் கருணை மனுவின் மூலம் தப்பிக்க முயல்வதையும் சுட்டிக்காட்டி, குற்றச் சட்டங்கள், நீதித் துறை ஆகியவற்றின் போதாமையைப் பல எம்.பி.க்கள் சுட்டிக்காட்டினார்கள். சட்டதிட்டங்களைக் கடுமையாக ஆக்குவதற்குத் தாங்கள் தயார் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

2012-ல் நிர்பயா சம்பவத்துக்குப் பிறகு, நீதிபதி ஜே.எஸ்.வர்மா குழுவின் பரிந்துரைகளை அடுத்து குற்றச் சட்டத்தின் திருத்தம் 2013-ல் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் இந்திய தண்டனைச் சட்டம், குற்ற நடவடிக்கைகளுக்கான நெறிமுறைகள்-1973, இந்திய சாட்சி சட்டம்-1872, பாலியல் வன்முறைகளிலிருந்து சிறாரைப் பாதுகாக்கும் சட்டம் 2012 ஆகியவற்றில் மாற்றங்கள் செய்யப்பட்டன.

பாலியல் பலாத்காரத்தால் ஒரு பெண்ணை மரணமடையச் செய்தல் அல்லது செயல்பாட்டை முடக்குதல் ஆகிய செயல்களுக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் முக்கியத் திருத்தங்கள் செய்யப்பட்டன. 12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளைக் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் வகையிலும், பாதிக்கப்பட்டவர் 16 வயதுக்கு உட்பட்டவராக இருந்தால் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கும் வகையிலும் 2018-ல் மேலும் சில திருத்தங்கள் செய்யப்பட்டன.

நிர்பயா வழக்கில் விரைவு நீதிமன்றம் 2013-ல் நான்கு பேருக்கு மரண தண்டனை விதித்தது. அந்தக் குற்றத்தை இழைத்தவர்களில் ஒருவனான 18 வயதுக்குட்பட்ட ஒரு சிறுவன், சிறார் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டுக் கொஞ்ச காலத்தில் விடுவிக்கப்பட்டான். நிர்பயா வழக்கின் குற்றவாளிகளின் மேல் முறையீட்டை உச்ச நீதிமன்றம் 2017-ல் தள்ளுபடி செய்த பிறகு, மேலும் சில முறையீடுகளைச் செய்திருக்கிறார்கள்.

ஒருவர் குடியரசுத் தலைவரிடம் கருணை மனுவும் செய்திருக்கிறார். பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்காரமும் வன்முறையும் இந்தியாவில் ஒரு தேசியப் பிரச்சினை என்றும், இதற்கு நாடு தழுவிய தீர்வுகள் தேவை என்றும் நிர்பயா சம்பவத்துக்குப் பிறகு, ஐநாவின் மனித உரிமை அமைப்பின் தலைவர் குறிப்பிட்டிருந்தார். தேசிய குற்ற ஆவணக் காப்பகம் 2017-க்கான தரவுகளின்படி, அந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 3.59 லட்சம் வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றிருக்கின்றன. 2016 ஆண்டுடன் ஒப்பிடும்போது இது 6% அதிகம். வெளியில் தெரியாமல் மறைக்கப்பட்ட பாலியல் பலாத்கார சம்பவங்கள் இன்னும் அதிகமாக இருக்கலாம்.

பள்ளிப் படிப்பிலிருந்தே பாடத்திட்டத்தில் பாலின விழிப்புணர்வும் உள்ளடக்கப்பட வேண்டும். ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் பரஸ்பர மரியாதை நிலவும் ஒரு கலாச்சாரத்தை சிறுவர், சிறுமியரிடம் வளர்த்தெடுக்க வேண்டும். காவல் துறையினர் திறம்படச் செயல்படுவது, விரைவு நீதிமன்றங்கள், விரைவான தீர்ப்பு போன்றவை இப்போது நமக்கு உடனடியாகத் தேவை. பொது இடங்கள் அனைவருக்கும் பாதுகாப்பானவையாக ஆக்கப்பட வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x