Published : 05 Dec 2019 10:44 AM
Last Updated : 05 Dec 2019 10:44 AM

கட்டுமானத்தில் நீராற்று எவ்வளவு முக்கியம்?

இன்றைய தேதியில் ஒவ்வொரு வீட்டையும் கட்டி எழுப்புவது சவாலாகத்தான் இருக்கிறது. ஒப்பந்த அடிப்படையில் கட்டப்படும் வீடுகளுக்கு ஆயுள் குறைவு என்ற பேச்சுகூட வழக்கில் உண்டு. ஒப்பந்த அடிப்படையில் இல்லாமல் கட்டுபவர்களும்கூடப் பல்வேறு கட்டுமான நடைமுறைகளை அக்கறையோடு செயல்படுத்துவதில்லை. அவற்றுள் மிக முக்கியமானது, கட்டி முடித்த சுவர்கள், கான்கிரீட் தளங்களின் மீது தண்ணீர் சொரிவது. இது ஒரு அவசியமான நடவடிக்கை. அதை முறையாகச் செய்வதன் மூலம் கட்டிடம் பாதுகாப்பானதாக ஆவதோடு ஆயுளும் கூடுகிறது.

இப்படி தண்ணீர் சொரிவதற்கு ஆங்கிலத்தில் ‘கியூரிங்’ என்று பெயர். இதைத் தமிழில் குணப்படுத்துதல் என்று மொழிபெயர்க்கலாம். ஆனால், அப்படி யாரும் தமிழில் சொல்வதில்லை. இது எதைக் குணப்படுத்துகிறது? நோயிருந்தால்தானே குணப்படுத்த வேண்டும்? கட்டி முடித்த சுவரும் கான்கிரீட் தளங்களும் தூண்களும் உத்திரங்களும் நோய்வாய்ப்பட்டிருக்கின்றனவா? அந்த நோயை கியூரிங் குணமாக்குகிறதா?

கட்டுமானத்துள் வேதியியல் வினை

செங்கற்களை இணைத்துச் சுவராக்குவதற்கும், சுவரின் மீது பூசுவதற்கும் சாந்து வேண்டும். இந்தச் சாந்து, சிமென்ட்டும் மணலும் கலந்து உருவாகிறது. சிமென்ட்டும் மணலும் கருங்கல் ஜல்லியும் கலந்து உருவாகும் கான்கிரீட்டால் தளங்களும் தூண்களும் உருவாகின்றன. சாந்திலும் கான்கிரீட்டிலும் உள்ள இன்னொரு முக்கியமான இடுபொருள் தண்ணீர். இந்தத் தண்ணீர் ஆவியானதும் ஏற்கெனவே நீர் இருந்த இடங்களில் வெற்றிடம் உருவாகும். கான்கிரீட் தளங்களின் மீதும் சுவரின் மீதும் புறத்தில் தொடர்ந்து நீரைச் சொரிவதன் மூலம் அகத்தில் ஒரு வேதியியல் வினை நடக்கும்.

சாந்துக்குள்ளும் கான்கிரீட்டுக்குள்ளும் புகும் நீரானது சிமென்ட்டில் உள்ள கால்சியம் சிலிகேட் எனும் வேதிப் பொருளுடன் சேரும். விளைவாக கரிப்பொருள், கந்தகம், ஹைட்ரஜன் ஆகிய தனிமங்களின் கூட்டில் ஒரு பசை உருவாகும். இந்தப் பசை ஏற்கெனவே ஆவியான நீர் ஏற்படுத்தியிருக்கும் வெற்றிடங்களை நிரப்பும். இந்தப் பசை நாளடைவில் கட்டியாகும். இது கான்கிரீட்டையும் சாந்தையும் வலுவாக்கும். அதற்கு நீடித்த ஆயுளையும் வழங்கும். இந்த வினை முறையாக நடக்காவிட்டால் வெற்றிடங்கள் முழுமையாக நிரம்பாது.

அந்தச் சாந்தும் கான்கிரீட்டும் குறைபட்டதாகவே இருக்கும். பிற்பாடு ஒருக்கிலும் குணப்படுத்த முடியாத நோய் அதன் மீது கவியும். பலம் குறையும். காற்று உட்புகும். விரிசல்கள் நேரும். ஊடுகம்பிகளில் துருவேற ஏதுவாகும். கட்டுமானத்தின் ஆயுளும் குறையும். ஆகவே, கியூரிங் முறையாக நடந்தால் மட்டுமே கட்டுமானத்துக்கு நோயற்ற வாழ்வு அமையும். இது முறையாக நடக்கச் செய்ய வேண்டுவது என்ன?

பூர்வாங்க நடவடிக்கையிலிருந்து தொடங்க வேண்டும். சுவர்களுக்குப் பயன்படுத்தப்போகும் செங்கற்களைக் குளிரக் குளிர நனைக்க வேண்டும். அப்படிச் செய்யாவிட்டால், செங்கற்களுக்கு இடையில் சாந்துக் கலவையைப் பரத்துகிறபோது, கலவையில் உள்ள நீரைச் கற்கள் கணிசமாக உறிஞ்சிவிடும். சாந்துக் கலவை முதற்கட்டமாக இறுகுவதற்கு அவகாசம் வேண்டும். அதற்குப் பிறகுதான் சுவரின் மீது நீரைச் சொரிய முடியும். உலர்ந்த செங்கற்கள் கலவையின் நீரை உறிஞ்சிவிட்டால், சாந்து இறுகுவதற்கு முன்னதாகவே கலவையில் வெற்றிடங்கள் தோன்றிவிடும். இது கலவையில் விரிசல் தோன்றக் காரணமாகிவிடும்.

குறைந்தாலும் குற்றம் கூடினாலும் குற்றம்

கான்கிரீட்டைப் பொறுத்தமட்டில் அதில் தண்ணீர் சரியான அளவில் சேர்க்கப்பட வேண்டும். தண்ணீர் குறைவாக இருந்தால் மேலே குறிப்பிட்ட வேதியியல் வினை நிகழும் சூழல் உருவாகாது. தண்ணீர் கூடுதலாகச் சேர்க்கப்பட்டால், அந்தத் தண்ணீரெல்லாம் ஆவியாகும்போது வெற்றிடங்கள் அதிகமாகும். கியூரிங் காலத்தில் உருவாகிற பசையால் எல்லா வெற்றிடங்களையும் நிரப்ப முடியாது. விளைவு, முறையான கியூரிங் நடந்தாலும், உள்ளுக்குள் வெற்றிடங்கள் நிரம்பிய, அதனால் பலமும் ஆயுளும் குறைந்த கான்கிரீட்தான் கிடைக்கும். ஆக, கான்கிரீட் கலவையில் தண்ணீர் குறைந்தாலும் குற்றம், கூடினாலும் குற்றம்.

அடுத்ததாகக் கலவையில் உள்ள நீர் ஆவியாவதைத் தாமதப்படுத்துவது பலன் தரும். தளங்களில் கான்கிரீட் வார்க்கப்பட்டதும் சில மணி நேரங்களில் இறுகிவிடும். இது முதற்கட்டம். உடனே, இந்தத் தளங்களின் மீது பிளாஸ்டிக் அல்லது பாலித்தீன் விரிப்புகளைப் பரப்பலாம். பொதுவாக, தூண்களின் ஷட்டரிங் பெட்டிகளை 24 மணி நேரத்துக்குப் பிறகு பிரிக்கலாம். 12 அடி வரை அகலமுள்ள அறைகளைக் கொண்ட ஒரு வீட்டின் சென்ட்ரிங்கை 7 நாட்களிலும், அதனினும் அகலம் கூடுதல் உள்ள அறைகளைக் கொண்ட தளங்களின் சென்ட்ரிங்கை 14 நாட்களிலும் பிரிக்கலாம். நீளம் குறைந்த உத்திரங்களின் ஷட்டரிங்கை 14 நாட்களில் பிரிக்கலாம். நீளம் கூடிய உத்திரங்களுக்கு 21 நாட்கள் வேண்டிவரும்.

கியூரிங்கின் வேதியியல் வினை நன்றாக நடைபெற ஷட்டரிங்கையும் சென்ட்ரிங்கையும் தாமதமாகப் பிரிப்பது உதவும். தூண்களின் ஷட்டரிங்கை இரண்டு நாட்கள் வரையில் பிரிக்காமல் வைத்திருக்கலாம். தளங்களின் சென்ட்ரிங்கை மூன்று வாரங்களுக்கும் உத்திரங்களை நான்கு வாரங்களுக்கும் பிரிக்காமல் வைத்திருக்கலாம். இதனால், வெளியிலிருந்து வெப்பத்தால் தாக்கப்படும் கால அளவைத் தாமதப்படுத்தலாம். இதன் மூலம் கான்கிரீட்டின் உட்புறமுள்ள நீர் முழுமையாக ஆவியாவதற்கு முன்னால் வேதியியல் வினையைத் தொடங்கிவிடலாம்.

கியூரிங் முறைகள்

கான்கிரீட் தூண்களை வார்ப்பதற்காகப் பூட்டப்பட்ட ஷட்டரிங் பெட்டிகளைப் பிரித்ததும் அவற்றைச் சுற்றிச் சாக்குகளாலோ வைக்கோல் பிரிகளாலோ கட்டி அதன் மீது நீரைச் சொரிவது நன்று. அது நனைவு கூடுதல் நேரம் நீடித்திருக்க வகைசெய்யும். கியூரிங் காலம் முழுவதும் கான்கிரீட் பரப்புத் தொடர்ச்சியாக ஈரமாக இருக்க வேண்டும். ஒருமுறை சொரிந்த நீர் உலர்வதற்கு முன்னர் மீண்டும் நீர் சொரிய வேண்டும். தளங்களைப் பொறுத்தமட்டில் கான்கிரீட் இறுகியதும் நனைத்தலைத் தொடங்கிவிட வேண்டும்.

தொடர்ந்து ஈரமாக வைத்திருப்பதற்குத் தளங்களின் மீது சாந்தாலோ களிமண்ணாலோ பாத்திகள் கட்டுவார்கள். இந்தப் பாத்திகள் இறுகியதும் தண்ணீரைக் கட்டி நிறுத்துவார்கள். அது ஒரு குட்டை போல் நீர் தேங்கி நிற்க வகை செய்யும். இந்தக் குட்டைகளை கியூரிங் காலம் முழுதும் நிரப்பி வைக்க வேண்டும்.

28 நாட்களுக்கு கியூரிங்கைத் தொடர வேண்டும் என்று சிலர் சொல்வதுண்டு. இது நடைமுறைச் சாத்தியமில்லை, அவசியமுமில்லை. கான்கிரீட் தூண்களை ஒரு வார காலத்துக்கும், தளங்களை இரு வார காலத்துக்கும் நனைக்க வேண்டும். கியூரிங் காலத்தில் கான்கிரீட் பரப்பு உலர்ந்துபோக அனுமதிக்கலாகாது.

கியூரிங்கைச் சிலர் நீராற்று என்கிறார்கள். இந்தச் சொல் காடாற்று என்கிற சொல்லிலிருந்து வந்திருக்கலாம். ‘காடத்து’ என்பது சிதை எரியூட்டப்பட்டதற்கு அடுத்த நாள் செய்யப்படும் ஒரு சடங்கு. அஸ்தியை எடுப்பதற்குத் தண்ணீர் ஊற்றி மயானத்தை ஆற்றுப்படுத்துவதே காடாத்து. கான்கிரீட்டில் கலக்கப்பட்ட நீர் ஆவியானதும் உருவாகும் வெற்றிடங்களை நீர் ஊற்றி ஆற்றுப்படுத்துவதை ‘நீராற்று’ என்று சொல்வது பொருத்தம்தான். கான்கிரீட்டை எந்தவிதச் சமரசம் இல்லாமல் குறிப்பிட்ட காலத்துக்கு நீராற்ற வேண்டும்.

நீராற்றுவதற்கு அதிகச் செலவாகாது. ஆனால், அதைச் செய்யாவிடில் மிகுந்த பொருட்செலவில் வார்க்கப்படும் கான்கிரீட்டின், கட்டப்படும் சுவர்களின் பலமும் ஆயுளும் குறைந்துபோகும். நீராற்றுவது கட்டுமானத்தில் மிக முக்கியமான பணி என்கிற புரிதல் எல்லோருக்கும் வர வேண்டும். கட்டுமானத்தில் நாம் பேசும் எந்தச் சீர்திருத்தமும் ஒரு வீட்டின் பிரச்சினை மட்டுமல்ல; சுற்றுச்சூழலோடும் பருவநிலை மாறுபாட்டோடும் தொடர்புடையது. ஆக, கட்டிடத்துக்குத் தண்ணீர் ஊற்றுவதன் மூலம் நாம் கட்டிடத்துக்கு மட்டும் தண்ணீர் ஊற்றுவதில்லை!

- மு.இராமனாதன், ஹாங்காங்கின் பதிவுபெற்ற பொறியாளர்
தொடர்புக்கு: mu.ramanathan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x