Published : 05 Dec 2019 10:32 AM
Last Updated : 05 Dec 2019 10:32 AM

17 பேருக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலி எது?

மேட்டுப்பாளையத்தில் 17 உயிரைக் காவுவாங்கியிருக்கிறது தீண்டாமைச் சுவர். சாதிய மனோபாவம் இன்னும் அகலாத நம் சமூகத்தில் இதுபோல இன்னும் ஏராளமான ஓட்டைகள் இருக்கின்றன. அவையெல்லாம் இப்படியான துர்சம்பவங்கள் நேரும்போதுதான் பொது உரையாடலுக்குள் வருகின்றன. இப்படியான நேரத்தில்தான் இதுபோன்று இனி நேர்ந்துவிடாமல் தடுப்பதற்கான காரியங்களில் அரசும் சமூகமும் ஈடுபட்டிருக்க வேண்டும் இல்லையா?

ஆனால், ‘அது தீண்டாமைச் சுவர்’ என்றும், ‘தீண்டாமைச் சுவர் அல்லவே அல்ல’ என்றும் இரண்டு தரப்புகள் மாறி மாறிப் பேசிக்கொண்டிருக்கின்றன. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “அது தீண்டாமைச் சுவரா, இல்லையா என விசாரணையில் தெரியவரும்” என்கிறார்.

நடூர் ஏ.டி. காலனி என்கிற கண்ணப்பன் லேஅவுட் முக்கால் சென்ட், ஒரு சென்ட், ஒன்றரை சென்ட் எனப் பெட்டி பெட்டியாய் வீடுகள் கட்டி, நூற்றுக்கணக்கான அருந்ததியர் குடும்பங்கள் வாழ்ந்துவரும் பகுதி. எட்டடி, பத்தடி அகலமே உள்ள சிறுசிறு சந்துகள்போன்ற தெருக்களில் நுழைந்தால் மேற்குக் கடைக்கோடியில் சில நிலச்சுவான்தார்களின் மாளிகைகள் உள்ளன. ஜவுளிக்கடைக்காரர், பாக்கு களம் போட்டிருப்பவர், தனியார் பள்ளி நடத்துபவர்; இப்படியானவர்கள் முக்கால் ஏக்கர் முதல், இரண்டு மூன்று ஏக்கர்கூட நிலம் வைத்துள்ளார்கள்.

அந்த நிலத்துக்கும் இந்தக் காலனிக்கும் இடையேதான் பெருஞ்சுவர் எழுப்பப்பட்டிருக்கிறது. கருங்கல், ஹாலோ பிளாக், செங்கல் என்று தம் நில எல்லையில் சுவர் எழுப்பியிருக்கிறார்கள் நிலச்சுவான்தார்கள். அதுவும் எப்படி? காலனிக்கு மேலே 15 அடி உயரத்தில் இருக்கும் மேட்டுப்பூமியில், அதற்கு மேலே 15 முதல் 20 அடி உயரத்தில், 2-3 அடி தடிமனில் சுவர் எழுப்பியிருக்கிறார்கள்.

முதலியார் (பிற்படுத்தப்பட்ட பிரிவினர்) சமூகத்தைச் சேர்ந்த ஜவுளிக்கடைக்காரரின் நிலத்தில் உள்ள 50 அடி நீளக் கருங்கல் சுவர்தான் சரிந்து விழுந்து 17 அருந்ததியினரின் (பட்டியலினத்தவர்) உயிரைக் குடித்திருக்கிறது. கருங்கல் சுவரைப் போன்று ஹாலோ பிளாக், செங்கற்களாலான பெருஞ்சுவர்களும் இன்னும் பலரின் உயிரைக் குடிப்பதற்காகக் காத்துக் கிடக்கின்றன. இந்தச் சுவர்களால் இப்போது நேர்ந்த உயிரிழப்புகள் ஒருபுறம் என்றால், இதற்கு முன்பு அருந்ததி இனத்தவர்கள் எதிர்கொண்ட சாதிபேதங்கள் ஏராளம்.

நிலச்சுவான்தார்கள் அன்றாடம் வெளியேற்றும் கழிவு நீர், செப்டிங் டேங்க் கழிவுகள், மழைநீர் வடிகால் குழாய்கள் எல்லாமே இந்தக் காலனிக்குள் போகுமாறுதான் அமைக்கப்பட்டிருக்கின்றன. இதுகுறித்த தொடர் மன்றாடல்களுக்கும் கோரிக்கைகளுக்கும் நிலச்சுவான்தாரர்களிடமிருந் தும் அரசாங்கத்திடமிருந்தும் எந்தப் பதிலும் இல்லை.

“நாங்க வூடு கட்டின பின்னாடிதான் அவங்க பெருசாசுவர் வச்சாங்க. இவ்வளவு பெருசா வைக்கிறீங்க, அது வுழுந்து அமுத்தினா நாங்க என்னாவோம். கம்பி வேலி கீது போடுங்கன்னு சொல்லி சடைஞ்சிருப்போம். கேட்கலை. அவங்க வூட்டு சாக்கடையெல்லாம் எங்க வூட்டு மேல விழும். அதனால, எங்க வூட்டுச் சுவரு அப்பப்ப இடிஞ்சிடும்... கட்டுவோம். ஒவ்வொரு முறை இப்படி ஆவும்போதும் போய்ச் சொல்லுவோம். அசைஞ்சு கொடுக்கவேயில்லை. இப்ப என் வம்சம்ல அழிஞ்சுடுச்சு சாமீ” சொல்லி அழும் கமலம்மாள் தனது மகன், மருமகள் உட்பட ஏழு பேரை இழந்து தனிமரமாகிவிட்டார்.

என்னைக் கூட்டிப்போய் வீட்டுக்குள்ளும், வெளியில் உள்ள சுற்றுச்சுவர் சந்துக்குள்ளும் காட்டினார்கள். “அஸ்திவாரம் பலமில்ல. வெயில் காலத்துலயே தண்ணி கசிஞ்சுட்டே இருக்கும். மழைக்காலத்துல சொல்லணுமா? இதுவும் எப்ப விழும்னு தெரியல. காம்பவுண்ட் போட்டவங்ககிட்ட போய்ச் சொல்லி சலிச்சுட்டோம்” என்றார்கள்.

“காலனியில் உள்ளவர்கள் பல முறை பாதிப்பைச் சொல்லியிருந்தும் யாரும் கண்டுகொள்ளவில்லை. இவ்வளவு உயிரை இழந்ததற்குச் சாதிய மனோபாவம்தானே காரணம். அதனால்தான் இதைத் தீண்டாமை வழக்காகப் பதிவுசெய்யக் கோருகிறோம்” என்றார் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலபொதுச்செயலாளர் யு.கே.சிவஞானம்.

இன்றைக்கு நகர்ப்புறங்களில் அருந்ததியர் வசிக்கும் காலனிகளை ஒட்டி புதிய லேஅவுட் எழுப்புபவர்களும்கூட 25 அடிக்குக் குறையாமல் சுற்றுச்சுவர் எழுப்பியே விற்கிறார்கள் என்றார். இது நவீனத் தீண்டாமை இல்லையா? தமிழகம் முழுவதும் இப்படி எழுப்பப்பட்டிருக்கும் சுவர்களைத் தகர்த்தெறிவதுதான் மாண்டுபோன 17 உயிர்களுக்கு நாம் செலுத்தும் அஞ்சலி!

- கா.சு.வேலாயுதன்,
தொடர்புக்கு: velayuthan.kasu@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x