Published : 04 Dec 2019 07:38 am

Updated : 04 Dec 2019 07:39 am

 

Published : 04 Dec 2019 07:38 AM
Last Updated : 04 Dec 2019 07:39 AM

தாக்குப்பிடிப்பாரா தாக்கரே?

maharastra-chief-minister-thackrey

மகாராஷ்டிரத்தில் பல்வேறு அரசியல் நாடகங்களுக்கு இடையில், சிவசேனையின் உத்தவ் தாக்கரே கடந்த நவம்பர் 28 அன்று மகாராஷ்டிரத்தின் முதல்வராகப் பதவியேற்றுக்கொண்டார். இந்துத்துவா கொள்கையில் பாஜகவுக்குச் சற்றும் குறைவில்லாத கட்சியான சிவசேனை, காங்கிரஸுடனும் தேசியவாத காங்கிரஸுடனும் ‘மகா விகாஸ் ஆகாதீ’ என்ற கூட்டணியை அமைத்து, ஆட்சியைப் பிடித்திருப்பது இந்தியா முழுவதிலும் உள்ள அரசியல் நோக்கர்களை மகாராஷ்டிரத்தை உற்றுப்பார்க்கச் செய்திருக்கிறது.

கடந்த 30 ஆண்டுகள் தொடர்ந்த பாஜகவுடனான நட்பை முறித்துக்கொண்டு, சிவசேனை காலம் காலமாக எந்தக் கட்சியை எதிர்த்துக்கொண்டிருந்ததோ அந்த காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்திருப்பது ஒரு அசாதாரண நிகழ்வாகவே பார்க்கப்படுகிறது. எனினும், பாஜகவின் ராஜதந்திரங்களை முறியடித்து, சிவசேனை ஆட்சியமைத்திருப்பது பாஜகவுக்கும் அதன் தலைவர் அமித் ஷாவுக்கும் பெரும் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.


பின்னணிக் கதை

1960-ல் பால் தாக்கரேவுக்கு மூன்றாவது மகனாகப் பிறந்தவர் உத்தவ் தாக்கரே. அப்போது சிவசேனை நிறுவப்பட்டிருக்கவில்லை. உத்தவ் தாக்கரேவுக்கு ஆறு வயதாக இருக்கும்போது, அதாவது, 1966-ல் தான் சிவசேனை கட்சியை பால் தாக்கரே நிறுவுகிறார். அப்போதைய பம்பாயைச் சார்ந்த கட்சியாகத்தான் அது பெரிதும் உருவானது. வேலைவாய்ப்புகளில் மண்ணின் மைந்தர்கள் புறக்கணிக்கப்படுவதாக பால் தாக்கரே கருதியதுதான் அந்தக் கட்சியின் உருவாக்கத்துக்குப் பிரதான காரணம். அந்தக் காரணத்தின் அடிப்படையில், அது மூர்க்கமான பிராந்தியவாதத்தைத் தன்னகத்தே கொண்டிருந்தது. ஆரம்பத்தில் அதன் இலக்கு தென்னிந்தியர்கள். குறிப்பாக தமிழர்கள் என்றால், பிற்பாடு மகாராஷ்டிரத்தில் பிழைக்கவந்திருக்கும் பிஹாரிகள், உத்தர பிரதேசத்தினர் மீது திரும்பியது. கூடவே, சிவாஜியைத் தங்கள் நாயகனாகக் கொண்டு, சிவசேனை இந்துத்துவத்தைக் கையிலெடுத்தது. உத்தவ் தாக்கரே இன்று வந்திருக்கும் இடத்தின் பின்னணியில் இதையெல்லாம் வைத்துப்பார்க்க வேண்டும்.

1966-ல் நிறுவப்பட்ட சிவசேனை ஆரம்பத்தில் சில ஏற்ற இறக்கங்களைச் சந்தித்தாலும், 1990-க்குப் பிறகு அந்தக் கட்சிக்கு ஏறுமுகம்தான். 1992-ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டது இதற்கு முதன்மையான காரணம். இதன் பின்விளைவாக 1993-ல் மும்பையில் பல இடங்களில் குண்டு வெடித்தது. இதையே சந்தர்ப்பமாக வைத்து, முஸ்லிம்களுக்கு எதிராகக் கலவரத்தைத் தூண்டும் விதமாக பால் தாக்கரே பேசினார். இதனால் ஏற்பட்ட கலவரங்களில் மும்பையே பற்றியெரிந்தது. இது, 1995 சட்டமன்றத் தேர்தலில் சிவசேனைக்கும் பாஜகவுக்கும் சாதகமாகிப்போனது. இந்து வாக்காளர்களை ஒன்றுதிரட்டியதால் அந்தத் தேர்தலில் இந்தக் கூட்டணி அதிக இடங்களை வென்றது. சிவசேனை 73 இடங்களையும் பாஜக 65 இடங்களையும் வென்று, கூட்டணி ஆட்சி அமைத்தன. சிவசேனையின் தலைவராக இருந்தாலும் பால் தாக்கரே முதல்வராகவில்லை. அவருக்குப் பதிலாக மற்றொரு மூத்த தலைவரும் சிவசேனையின் தொடக்க காலத்திலிருந்து பால் தாக்கரேவுடன் இருந்தவருமான மனோகர் ஜோஷி முதல்வரானார். மனோகர் ஜோஷி முதல்வராக இருந்தாலும் ஆட்சியின் லகான் பால் தாக்கரேவிடமே இருந்தது.

தள்ளியிருந்த உத்தவ்

இந்தக் காலங்களிலெல்லாமே உத்தவ் தாக்கரே ஆட்சி அதிகாரத்திலிருந்து தள்ளியிருந்தார். பால் தாக்கரேவின் கடைக்குட்டியான உத்தவ் தாக்கரேவுக்கு ஆரம்பத்திலிருந்தே அரசியல் மீது பெரிதும் நாட்டம் இல்லை. தேர்ந்த புகைப்படக் கலைஞரான உத்தவ் தாக்கரே, மகாராஷ்டிரத்தின் கோட்டைகளைத் தான் எடுத்த புகைப்படங்களைக் கொண்டு ஜஹாங்கீர் கலைக் காட்சியகத்தில் 2004-ல் ஒரு கண்காட்சி நடத்தினார். அவரது புகைப்படங்கள் ‘மகாராஷ்டிரா தேஷ்’ (2010), ‘பாஹவா வித்தல்’ (2011) என்ற தலைப்புகளில் புகைப்படப் புத்தகங்களாக வெளியாயின.

சிவசேனையைப் பொறுத்தவரை பால் தாக்கரேவின் அரசியல் வாரிசாக பால் தாக்கரேவின் தம்பி மகன் ராஜ் தாக்கரேதான் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்ப ராஜ் தாக்கரேவும் கட்சியில் பிரதான இடத்தைப் பிடித்திருந்தார். உத்தவ் தாக்கரேவை அவரது அப்பா பால் தாக்கரேவைப் போலவோ, தம்பி ராஜ் தாக்கரேவைப் போலவோ நல்ல பேச்சாளர் என்று சொல்ல முடியாது. அவர்களிடம் மக்கள் உணர்ந்த கவர்ச்சியும் உத்தவ் தாக்கரேவுக்கு இருந்ததாகச் சொல்ல முடியாது. இந்நிலையில், உத்தவ் தாக்கரேவின் மூத்த அண்ணன் பிந்துமாதவ் 1996-ல் ஒரு சாலை விபத்தில் மரணமடைந்ததை அடுத்து, உத்தவ் தாக்கரே தனது தந்தையின் இல்லமான மாதோயில் அவரோடு சேர்ந்திருப்பதற்கு வந்தது ஒரு முக்கியமான திருப்புமுனை எனலாம்.

அரசியலுக்கு வந்த பிறகு...

சிவசேனை ஆட்சியதிகாரத்தில் இருந்தபோது அரசியலில் ஈடுபாடு காட்டாத உத்தவ் தாக்கரே, 1999 தேர்தலில் சிவசேனை-பாஜக கூட்டணி தோல்வியடைந்து ஆட்சியை இழந்த பிறகு ஆர்வம் காட்டத் தொடங்கினார். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் அரசியலிலும் சிவசேனையிலும் அவருடைய இடம் என்ன என்பது தெளிவாகத் தெரிந்துவிட்டது. சிவசேனை நிறுவப்பட்டதிலிருந்து கட்சிக்குள் தேர்தல் இல்லாமல்தான் அதன் தலைவராக பால் தாக்கரே நீடித்துவந்தார். அவரது உடல்நலம் குன்றத் தொடங்கியதால், 2003-ல் சிவசேனையின் செயல் தலைவராக உத்தவ் தாக்கரேவை அவர் நியமித்தார். இது பால் தாக்கரேவின் அரசியல் வாரிசாக உத்தவ் தாக்கரேவை அறிவிப்பதற்கு இணையானதாகவே கருதப்பட்டது. சிவசேனையின் அடுத்த தலைவராகவும் பால் தாக்கரேவின் அரசியல் வாரிசாகவும் ஆவதற்குக் காத்திருந்த ராஜ் தாக்கரேவுக்கு அப்போதிலிருந்தே கசப்பு ஆரம்பித்தது. 2005-ல் ராஜ் தாக்கரே கட்சியை விட்டு வெளியேறினார்.

ராஜ் தாக்கரே வெளியேறிய பிறகு உத்தவ் தாக்கரேவுக்குக் கட்சிக்குள் எந்த முட்டுக்கட்டையும் இல்லை. 2012 ஜூலை மாதத்தில் உத்தவ் தாக்கரேவுக்குக் குருதிக்குழாய் சீரமைப்பு சிகிச்சை (angioplasty) மேற்கொள்ளப்பட்டு, ரத்த நாளங்களில் மூன்று இடங்களில் அடைப்பு நீக்கப்பட்டது. இதிலிருந்து மீண்டுவந்த சில மாதங்களில் பால் தாக்கரே மரணமடைகிறார். 2013-ல் சிவசேனையின் தலைவரானார் உத்தவ் தாக்கரே.

2014-ல் பாஜகவுடன் கூட்டணி அமைத்து மத்திய அமைச்சரவையில் சிவசேனையும் இடம்பிடித்தது. கூட்டணியில் இருந்தபோதே பாஜகவின் பல நடவடிக்கைகளை உத்தவ் தாக்கரே கடுமையாக விமர்சித்தார். 2014-ல் மகாராஷ்டிர சட்டமன்றத்துக்கு நடந்த தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைக்காமல்தான் சிவசேனை தேர்தலில் போட்டியிட்டது. அந்தத் தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மை பெற்றாலும் ஆட்சியமைக்கும் அளவுக்கு அறுதிப் பெரும்பான்மை இல்லாததால், சிவசேனை ஆதரவளித்தது. கசப்புடன் நீடித்த இந்தக் கூட்டணி 2018-ல் தற்காலிகமாக முடிவுக்கு வந்தது. எனினும், 2019 மக்களவைத் தேர்தலில் மீண்டும் இந்தக் கூட்டணி இணைந்து 48 தொகுதிகளில் 41-ல் வெற்றிபெற்றன.

சட்டமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை உத்தவ் தாக்கரேவின் கணக்கு வேறு! ஆட்சியில் பங்கு என்ற நிபந்தனையைத் தேர்தலுக்கு முன்னும் பின்னும் அவர் உறுதியாக வைத்தார். உத்தவ் தாக்கரே தனது மகன் ஆதித்ய தாக்கரேவை முதல்வராக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வைத்த நிபந்தனைதான் அது. பாஜகவுடனான கூட்டணி முறிந்து காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் ‘மகா விகாஸ் ஆகாதீ’ அமைத்தபோது கணக்கு மாறியது. காங்கிரஸிலும் தேசியவாத காங்கிரஸிலும் பல மூத்த தலைவர்கள் இருப்பதால், இளைஞரான ஆதித்ய தாக்கரேவுக்குக் கீழ் பணிபுரிவதில் அவர்களுக்குச் சங்கடம் இருந்தது. ஆகவேதான், உத்தவ் தாக்கரே முதல்வராகும் நிலை வந்தது. அரசியல் சாணக்கியர் என்று பெயரெடுத்த அமித் ஷாவின் ராஜ தந்திரங்களை வீழ்த்திப் புதிய அரசியல் சாணக்கியர் என்று பெயரெடுத்திருக்கும் சரத் பவார்தான் இன்று உத்தவ் தாக்கரே முதல்வரானதற்குப் பிரதான காரணம். அதற்கான நன்றியையும் உத்தவ் தாக்கரே சரத் பவாருக்குத் தெரிவித்திருக்கிறார்.

முன்னுள்ள சவால்கள்

சிவசேனை, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் மூன்றும் அமைத்திருக்கும் அசாதாரணக் கூட்டணி பல கேள்விகளை நம்மிடம் எழுப்புகிறது. முக்கியமாக, இந்துத்துவக் கட்சியான சிவசேனை தனது கூட்டணிக் கட்சியான காங்கிரஸை எப்படிச் சமாளிக்கப்போகிறது அல்லது காங்கிரஸ் இந்தச் சூழலை எப்படி எதிர்கொள்ளப்போகிறது? “இந்துத்துவத்தைக் கைவிட மாட்டோம்” என்று உத்தவ் தாக்கரே கூறியிருப்பதை வைத்துப் பார்க்கும்போது, இந்தக் கூட்டணிக்குள் உரசல் எழாமல் உத்தவ் தாக்கரே தனது ஆட்சிக் காலத்தை நிறைவுசெய்வாரா என்பது சந்தேகமே என்று தோன்றுகிறது. இதைத் தவிர, நாட்டிலேயே விவசாயிகள் தற்கொலை அதிகமாக நிகழும் மகாராஷ்டிரத்தில் விவசாயிகள் பிரச்சினையை உத்தவ் தாக்கரே எப்படி சமாளிக்கப்போகிறார் என்ற கேள்வியும் எழுகிறது. “விவசாயத்தைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. ஆனால், விவசாயிகள் பிரச்சினையை நான் தீர்ப்பேன்” என்று உத்தவ் தாக்கரே உறுதிகூறியிருப்பது சிறிது நம்பிக்கையை அளித்தாலும், இந்த விஷயத்தில் உத்தவ் தாக்கரே மேற்கொள்ள வேண்டிய பணிகள் ஏராளம். இதைப் போலவே விதர்பா போன்ற பகுதிகளில் நிலவும் தண்ணீர்ப் பஞ்சத்துக்கு உத்தவ் தாக்கரே எந்த மாதிரியான நடவடிக்கைகளை எடுக்கப்போகிறார் என்பதையும் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். புல்லட் ரயில் திட்டத்தை மறுபரிசீலனை செய்யப்போவதாக உத்தவ் தாக்கரே கூறியிருக்கிறார். இந்தத் திட்டத்தைப் பொறுத்தவரை மூன்று கட்சிகளும் ஒரே முடிவு எடுக்குமா என்பதும் தெரியவில்லை.

இதற்கிடையில், மத்தியில் அசுர பலத்தைப் பெற்று ஆட்சியில் அமர்ந்திருக்கும் பாஜக, மகாராஷ்டிரத்தில் சிவசேனை தலைமையிலான கூட்டணி ஆட்சியைத் தொடரவிடுமா என்பதும் பெரும் கேள்விக்குறியாக உத்தவ் தாக்கரேவின் தலைக்கு மேல் தொங்கிக்கொண்டுதான் இருக்கிறது. அரசியல் நாடகங்களுக்கு இடையில் நான்கு நாட்கள் முதல்வராக இருந்த தேவேந்திர ஃபட்நவீஸ் ராஜினாமா செய்யும்போது “இந்த மூவர் கூட்டணியும் தங்களுக்கு இடையிலான முரண்பாடுகள் காரணமாகவே வீழ்ந்துவிடும்” என்றிருக்கிறார். கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையிலான அரசுக்கு காங்கிரஸ் ஆதரவளித்து, பிறகு அந்த ஆட்சி கவிழ்ந்ததுபோல் மகாராஷ்டிரத்திலும் நடக்கும் என்று பாஜக எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது. அது நடக்காமல் தடுப்பதற்கான சக்தி சரத் பவாரின் கையிலும் உத்தவ் தாக்கரேயின் கையிலும்தான் இருக்கிறது.

- ஆசை, தொடர்புக்கு: asaithambi.d@hindutamil.co.in


அரசியல் நாடகங்கள்மத்திய அரசுமுன்னுள்ள சவால்கள்தள்ளியிருந்த உத்தவ்உத்தவ் தாக்கரேசிவசேனை கட்சிசரத் பவார்அஜித் பவார்பாஜகஅமித் ஷாபிரதமர் மோடி

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author