Published : 03 Dec 2019 07:44 AM
Last Updated : 03 Dec 2019 07:44 AM

360: தொலைந்த கண்டங்கள்

கண்டங்கள் எத்தனை என்று நம்மிடம் கேட்டால் ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, வடஅமெரிக்கா, தென்அமெரிக்கா, ஆஸ்திரேலியா, அண்டார்க்டிக்கா ஆகிய 7 கண்டங்கள் என்றே சொல்வோம். ஆனால், மண்ணியல் அறிவியலாளர்களின் பதில் வேறு மாதிரி இருக்கும்.

ஏனெனில், அவர்கள் நம்மைப் போல கண்ணுக்குத் தெரியும் கடலுக்கு மேற்பட்ட பரப்பை மட்டுமே பார்த்து பதில் சொல்வதில்லை. கடலுக்கு அடியிலும் பார்ப்பவர்கள் அவர்கள். அப்படிப் பார்த்துதான் தொலைந்த கண்டங்களைச் சமீப காலமாகக் கண்டுபிடித்துக்கொண்டிருக்கிறார்கள்.

இவற்றுள் நியூஸிலாந்துக்கு அடியில் இருக்கும் சிலாண்டியா (Zealandia) கண்டமும் ஒன்று. இப்படிக் கண்டுபிடிக்கப்படும் கண்டங்கள் பெரும்பாலும் குறுங்கண்டங்கள் என்று அழைக்கப்படுகின்றன. குறுங்கண்டம் என்றாலும் ஆஸ்திரேலியா கண்டத்தின் பரப்பளவில் பாதிக்கும் மேற்பட்ட பரப்பளவைக் கொண்டது சிலாண்டியா.

இதன் பரப்பளவில் 93% கடலுக்கு அடியில் இருப்பதால், இது கண்டம் என்ற அந்தஸ்தைப் பெறாமல் குறுங்கண்டம் என்ற அந்தஸ்தைப் பெற்றிருக்கிறது. 49,20,000 சதுர கிமீ பரப்பளவைக் கொண்ட இந்தக் கண்டமானது 2.3 கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கியிருக்கலாம் என்கிறார்கள் அறிவியலாளர்கள்.

கண்காணிப்பின் அடுத்த பரிணாமம்

மேலும் மேலும் கண்காணிப்புச் சமூகமாகிக்கொண்டிருக்கிறது சீனா! ஆம், இனிமேல் புதிய செல்பேசி வாங்குபவர்கள் தங்கள் முகத்தை ஒளிவருடல் (ஸ்கேன்) செய்து, அதனுடன் தங்கள் தேசிய அடையாள அட்டையின் தகவல்களையும் இணைக்க வேண்டுமாம். கடந்த ஞாயிற்றுக்கிழமையிலிருந்து இந்த விதிமுறையை அமல்படுத்தியிருக்கிறது சீனாவின் தொழிலக மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம்.

இணைய உலகில் குடிமக்களைப் பாதுகாப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்று அந்த அமைச்சகம் தெரிவித்திருந்தாலும், இது மக்களின் தனிப்பட்ட உரிமைகளின் மீதான தாக்குதல் என்று விமர்சிக்கப்பட்டுவருகிறது.

ஏற்கெனவே, இணையத்தில் அரசுக்கு எதிரான கருத்துகளைத் தெரிவிப்பவர்களைக் கண்டுபிடித்து, அவர்களை சீன அரசு கைதுசெய்துவரும் சூழலில், அதன் அடுத்த கட்டமாகவே இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது. சீனா முழுவதும் 20 கோடி கண்காணிப்பு கேமராக்கள் இருக்கின்றன.

கண்காணிப்பு கேமராக்கள் அதிகம் கொண்ட நாடுகளின் பட்டியலில் சீனாவுக்கு முதலிடம் என்ற தகவலை வைத்துப் பார்க்கும்போது, எந்த அளவுக்கு அது கண்காணிப்பு சமூகமாகியிருக்கிறது என்ற உண்மை நமக்குப் புரியும்.

நஞ்சாகும் மருந்து

தனியார் மருத்துவமனைகளில் அதிக அளவுக்கு நோயுயிர்முறிகளை (antibiotics) பரிந்துரைக்கப்படுவதாகச் சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. ஆயிரம் பேரில் 412 பேருக்கு நோயுயிர்முறிகள் பரிந்துரைக்கப்படுகின்றன. இதில் 0-4 வயதுள்ள குழந்தைகளுக்குத்தான் 1,000 பேரில் 636 பேர் என்ற அளவில் பரிந்துரைக்கப்படுகிறது. இந்த ஆய்வை இந்திய பொதுச் சுகாதார நிறுவனம் மேற்கொண்டு முடிவுகளை வெளியிட்டிருக்கிறது.

நோயுயிர்முறிகள் என்பவை அற்புதம் செய்யும் மருந்துகள்தான். அதேநேரத்தில், அவற்றைக் கவனமாகக் கையாள வேண்டியுள்ளது. தேவையில்லாத, அதீதப் பயன்பாடு உடலில் பெரும் சிக்கலை ஏற்படுத்திவிடுகிறது.

இவற்றில் முக்கியமானது நோய்த் தடுப்புச் சக்தி குறைந்துபோவது. சாதாரண ஜலதோஷம், சுவாசக் கோளாறுகள் போன்ற பிரச்சினைகளுக்குக்கூட நோயுயிர்முறிகள் அதிகமாகப் பரிந்துரைக்கப்படுகின்றன. மருந்து நிறுவனங்களின் வணிக லாபிதான் இதற்குப் பெருமளவில் காரணம் என்று கருதப்படுகிறது. இந்த லாபிக்குப் பலியாவது பொதுமக்கள் மற்றும் குழந்தைகளின் உடல் நலன்தான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x