Published : 25 Nov 2019 08:18 AM
Last Updated : 25 Nov 2019 08:18 AM

360: ஒற்றை இலக்க மருத்துவர்கள்!

நீட் தேர்வில் குறிப்பிட்ட பாடங்களில் ஒற்றை இலக்க மதிப்பெண், பூஜ்ஜிய மதிப்பெண், எதிர்மறை மதிப்பெண்களைப் பெற்றவர்களுக்கும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்திருக்கிறது.

நூற்றுக்கணக்கானோர் இப்படி மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்திருக்கிறார்கள். கடந்த ஆண்டு இந்த விஷயமானது சர்ச்சைக்குள்ளானதால், குறிப்பிட்ட பாடத்தில் எடுத்த மதிப்பெண்களை வெளியிடாமல் ஒட்டுமொத்த நீட் மதிப்பெண்ணை வெளியிட்டார்கள்.

எனினும், இந்த ஆண்டும் குறிப்பிட்ட பாடங்களில் குறைவான மதிப்பெண்களைப் பெற்றவர்களுக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைப்பது தொடர்கிறது. இது குறித்து தேசிய திறனறி முகமையிடம் (என்.டி.ஏ.) கேட்டால், அந்தந்தப் பாடங்களில் பெற்ற மதிப்பெண்களை வெளியிடுவது மோசமான பிம்பத்தை ஏற்படுத்தும் என்பதால், அந்த மதிப்பெண்களை வெளியிடுவதை நிறுத்திவிட்டோம் என்கிறார்கள். ஏற்கெனவே நீட் தேர்வானது ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகங்களை விலக்கி வைக்கிறது என்ற விமர்சனம் இருக்கும் சூழலில், தற்போது இந்த விவகாரமும் வெடித்துள்ளது.

சர்வாதிகாரத்தை நோக்கிச் செல்கிறதா பிரேசில்?

பிரேசில் கொந்தளித்துக்கொண்டிருக்கிறது. அதிபர் போல்ஸோனாரோவுக்கு எதிரான மக்களின் கோபம் நாடெங்கும் வெடிக்கும் நிலையில் இருக்கிறது. பிரேசிலின் முன்னாள் அதிபரும் இடதுசாரியுமான லூலாவை பிரேசிலின் உச்ச நீதிமன்றம் சமீபத்தில் விடுவித்ததை அடுத்து, அங்கே பிரச்சினை மேலும் தீவிரமாகியிருக்கிறது.

மக்களின் ஆதரவு லூலாவுக்கு அதிகம் என்பதால், போல்ஸோனாரோவும் அவரது ஆதரவாளர்களும் அச்சத்தில் உள்ளனர். இதன் விளைவாக, 1968-ல் நிகழ்ந்ததுபோல சர்வாதிகார ஆட்சியை நோக்கி பிரேசில் நகர்ந்துவிடுமோ என்ற அச்சம் மக்களிடையே ஏற்பட்டிருக்கிறது.

இதற்கேற்ப போல்ஸோனாரோவின் மகன் சமீபத்தில் ஒரு தொலைக்காட்சியில் அளித்த பேட்டியில் சர்வாதிகார ஆட்சி மீண்டும் கொண்டுவரும் வகையில் அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்பட வேண்டும் என்றிருக்கிறார். இதைப் பல்வேறு தரப்புகளும் கண்டித்திருக்கின்றன.

தென்னமெரிக்க நாடுகளுக்கு இது போதாத காலம்போல. ஏற்கெனவே கலவரங்களாலும் போராட்டங்களாலும் சீலே பற்றியெரிந்துகொண்டிருக்க பிரேசிலிலும் அதைப் போன்றதொரு நிலைமை. இதைச் சாக்கிட்டு மீண்டும் சர்வாதிகார ஆட்சியை நோக்கி பிரேசில் போய்விடக் கூடாது என்பதுதான் அரசியல் நோக்கர்களின் எண்ணமாக உள்ளது.

சிறிய தீ நல்லது!

உலகெங்கும் காட்டுத் தீயானது அபாயகரமாகப் பார்க்கப்பட்டுவரும் சூழலில், நன்மை தரும் காட்டுத் தீ அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தின் காடுகளில் நடைமுறையில் உள்ளது. கடந்த 13,000 ஆண்டுகளாக கலிஃபோர்னியாவிலும் உலகின் பல்வேறு நாடுகளிலும் உள்ள பழங்குடியினர் பின்பற்றிவரும் வழக்கம்தான் இது.

காட்டில் கிடைக்கும் உணவுகள், மருந்துகள் போன்றவற்றைப் புதுப்பித்துக்கொள்ளவும், விலங்குகளுக்கு வாழிடங்களை ஏற்படுத்தித் தரவும், பெரிய, ஆபத்தான காட்டுத் தீ அபாயங்களைக் கட்டுப்படுத்தவும் இந்த நன்மை தரும் காட்டுத் தீயை சிறிய அளவில் பற்றவைப்பது வழக்கம்.

பல பத்தாண்டுகளாக இந்தக் காட்டுத் தீக்கு கலிஃபோர்னியா மாகாணத்தில் தடை இருந்தது. தற்போதுதான் பழங்குடியினரின் வழக்கத்தின் முக்கியத்துவத்தை அந்த மாகாண அரசு உணர்ந்திருக்கிறது. ஆகவே, அந்த மக்களையே தீ நிர்வாகத்தில் அரசு ஈடுபடுத்தியிருக்கிறது.

“இந்த நிலத்தைப் பராமரிப்பதற்கான எங்கள் முதல் ஒப்பந்தமானது, எங்களைப் படைத்தவருடன் நாங்கள் செய்துகொண்டது. அந்த ஒப்பந்தம் எங்களிடமிருந்து பறிக்கப்பட்டது, தற்போது அதற்கு உரிமை கோர நாங்கள் முயன்றுகொண்டிருக்கிறோம்” என்கிறார்கள் அந்த மக்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x