Published : 22 Nov 2019 07:19 AM
Last Updated : 22 Nov 2019 07:19 AM

இது அடையாற்றின் பிரச்சினை மட்டுமல்ல; ஒட்டுமொத்த தமிழகத்தின் பிரச்சினையும்தான்! 

ஜி.செல்வா

சென்னை பெருவெள்ளம் சர்வதேச அளவில் செய்தியானது. ‘தி நியூயார்க் டைம்ஸ்’ நாளிதழிலெல்லாம் கட்டுரைகள் வெளியாயின. ஏனென்றால், சென்னையின் பிரச்சினை; ஒரு கோடி மக்களின் பிரச்சினை. அந்தப் பெருவெள்ளத்துக்கு முக்கியமான காரணங்களுள் ஒன்று அடையாறு. இப்போது அடையாற்றில் ஒரு பிரச்சினை. அது அந்த அடையாற்றின் பிரச்சினை மட்டுமல்ல; நமது ஒட்டுமொத்த மாநிலத்தின் பிரச்சினையும்கூட.

எப்போதும் நடந்துகொண்டிருக்கும் நிகழ்வைப் போலவே அந்த ஊடகச் செய்தியும் நுட்பமாக யாருக்கும் வலிக்காமல், இன்னும் சொல்லப்போனால் ஒருவகையில் வெகுமக்கள் விருப்பத்தை அரசே முன்வந்து நடத்திக்காட்டுவதுபோலத்தான் அமைந்திருந்தது. ஒவ்வொரு நாளும் எவ்வளவோ செய்திகளைக் கடந்துபோகிறோம். பெரிய செய்திகளுக்கு முன்னால் அதிக முக்கியத்துவம் தராத செய்திகளெல்லாம் காணாமல்போய்விடுகின்றன. இதுவும் அப்படித்தான்.

‘அடையாற்றை மீட்டெடுக்கும் பணியின் ஒரு பகுதியாக சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை நிதியின் கீழ் ரூ.94.76 கோடி செலவில் பொதுப்பணித் துறை மூலம் திருநீர்மலை பாலம் முதல் அடையாறு முகத்துவாரம் வரை 25 கிமீ நீளத்துக்கு அடையாற்றைத் தூர்வாருதல், சுமார் 11,400 ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், ஆற்றை அகலப்படுத்துதல், ஆற்றின் இருபுறங்களிலும் வெள்ளத்தடுப்பு அமைத்தல், பாதிப்புக்குள்ளான பகுதிகளில் 1,800 மீட்டர் நீளத்துக்கு கான்கிரீட் வெள்ளத்தடுப்புச் சுவர் அமைத்தல், 8 உள்வாங்கிகள் அமைத்தல் போன்ற பணிகள் நடைபெற்றுவருகின்றன.’ இந்தச் செய்திக் குறிப்பு குறித்தும், திட்டம் பற்றியும் பொதுமக்கள், அரசியல் அமைப்புகள், வல்லுநர்கள் மத்தியில் மாறுபட்ட பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன. ஆனால், இங்கே நாம் எழுப்பும் கேள்விகள் அனுபவத்திலிருந்து உண்மையைத் தேட முயல்வது.

விடை காண வேண்டிய கேள்விகள்

ஆற்றின் கரையை அரசு எவ்வாறு அடையாளம் காண்கிறது? அரசு எப்படி ஆக்கிரமிப்பாளர்களை வகைப்படுத்துகிறது? ஆற்றின் கரையில் கான்கிரீட் வெள்ளத்தடுப்புச் சுவர் அமைத்தால் வெள்ளத்தைத் தடுக்க முடியும் என்று எந்த வல்லுநர்கள் பரிந்துரைத்தார்கள்? காசி திரையரங்கின் பின்புறத்தில் சென்னை மாநகராட்சி 137, 138 வட்டங்களில் அடையாற்றின் கரையோரம் டாக்டர் கானு நகர், சூளை பள்ளம், சஞ்சய் காந்தி காலனி, சத்தியமூர்த்தி பிளாக், திருநகர் ஆகிய பகுதிகளில் சுமார் நாற்பது ஆண்டுகளாகக் குடியிருக்கும் மக்களை அப்புறப்படுத்தும் வகையில் தமிழக அரசின் பொதுப்பணித் துறை சார்பில் அடையாளக் குறியீடு வைக்கப்பட்டது.

எதற்காக இத்தகைய குறியீடு வைக்கப்படுகிறது என இப்பகுதியில் குடியிருக்கும் மக்களுக்கு அரசுத் தரப்பில் தெரிவிக்கப்படவில்லை. கடந்த வாரம் சூளைப்பள்ளம் பகுதியில் ஆக்கிரமிப்புப் பகுதிகள் என அடையாற்றிலிருந்து முந்நூறு அடி தள்ளி அடையாளக் குறியீடு வைத்தனர். ‘அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் எதற்காக இவ்வளவு வீடுகளை எடுக்கப்போகிறீர்கள்?’ எனக் கண்ணீரும் கம்பலையுமாய் அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளனர். அதிகாரிகளோ நீதிமன்ற உத்தரவு என்று பதிலளித்தனர்.

இந்தப் பிரச்சினையை அரசியல் கட்சிகள் கையில் எடுத்தன. ‘எவ்வித வெளிப்படைத்தன்மையும் இன்றி, மக்களை அப்புறப்படுத்தத் திட்டம் தீட்டியிருப்பது சரியல்ல. மேலும், திட்டத்தின் தன்மை, அடையாறு ஆற்றிலிருந்து எவ்வளவு தூரம் நிலங்களை எடுக்கப்போகிறார்கள், எத்தனை வீடுகள் என்பது குறித்தும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்படவில்லை. இப்படியான வெளிப்படைத்தன்மையற்ற செயல் பாடுகளை அரசு தவிர்க்க வேண்டும்’ என்று மாம்பலம் வட்டாட்சியரிடம் தெரிவித்தது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.

அரசு பொருட்படுத்தியதா?

இதையெல்லாம் அரசோ அதிகாரிகள் கவனத்தில் கொள்ளாமல் ஆக்கிரமிப்பாளர்களை அடையாளம் கண்டு, மறுகுடியமர்த்தும் வேலையில் காவல் துறை உதவியோடு ஈடுபடத் தொடங்கினர். எனவே, மக்களைத் திரட்டி இத்தகைய நடைமுறைக்கு எதிராகப் போராட மார்க்சிஸ்ட் கட்சி வழிகாட்டியது. அதன் பின்னர்தான் அதிகாரிகள் காதுகொடுத்துக் கேட்டனர்.

“கரையோரம் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு, தனியார் பள்ளிகள், மருத்துவமனைகளைப் பட்டியலிட்டு அவை ஏன் ஆக்கிரமிப்பு பட்டியலில் வரவில்லை?” எனக் கேட்டதும், ‘அவை பட்டா நிலங்கள்’ என்பதாக அதிகாரிகள் பதிலளித்தனர். கரையோரம் இருந்த புறம்போக்கு நிலங்களெல்லாம் பட்டா நிலங்களாக மாறிய விஷயத்தை எடுத்துச்சொல்லியும், சட்டரீதியான குளறுபடிகளைப் பட்டியலிடத் தொடங்கிய பிறகுதான் அங்கே நடைமுறைகள் மாறத் தொடங்கின. ஔவையார் தெருக்கள் மட்டும் ஆக்கிரமிப்பு என வரையறைசெய்தனர். வெளியேற்ற வேண்டிய குடியிருப்புப் பகுதிகள் பட்டியலிலிருந்து நேரு தெருக்கள் தப்பின. சுமார் நூற்றைம்பது குடும்பங்கள் நிம்மதிப் பெருமூச்சுவிட்டன.

இப்போது கேள்வி என்னவெனில், மக்களைத் திரட்டி காவல் துறையின் அச்சுறுத்தல்களை எதிர்த்துப் போராடினால்தான் ஆக்கிரமிப்பு வரையறையை மாற்ற முடியும் என்றால், தங்கள் விருப்பத்துக்கும் தேவைக்கும் ஏற்றாற்போல் ஏழை எளிய மக்களின் வாழ்க்கையோடு விளையாடும் தைரியத்தை அதிகாரிகளுக்கு யார் கொடுத்தது? மேலும், ஆற்றின் கரையோரம் சாலை அமைக்கப்போகிறோம் என்றும், அதற்காகக் கூடுதல் வீடுகளை எடுப்பதாகவும் பேசுகின்றனர்.

எங்கே திட்டத்துக்கான வரைபடம் என்று கேட்டால் பசப்புகின்றனர். அப்புறப்படுத்தப்படும் குடியிருப்புகளுக்கு மாற்றாக அருகமைந்த அரசு நிலங்களில் வீடு கட்டிக்கொடுக்க கோரிக்கை வைத்தால் அதுவும் நிராகரிக்கப்படுகிறது. நாற்பது கி.மீ.க்கு அப்பாலுள்ள பெரும்பாக்கம், செம்மஞ்சேரி குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள்தான் எளியவர்களுக்காக ஒதுக்கப்படுகின்றன.

ஆனால், உண்மை என்ன தெரியுமா?

அதே எம்ஜிஆர் நகரில் புதிய ரேஷன் கடை அமைக்கக் கோரிக்கை வைத்தபோது, உணவுப் பொருள் வழங்கல் துறை அதிகாரிகளோ, ‘எங்களுக்கென்று இப்பகுதியில் இடமில்லை. நீங்கள் இடம் காண்பித்தால் ரேஷன் கடை கட்டித்தருகிறோம்’ என்று கோரிக்கை வைத்தவர்களிடமே கோரிக்கை வைக்கின்றனர். பத்தாண்டுகளாகப் பயன்படுத்தப்படாமல் சுயநல சக்திகளின் ஆக்கிரமிப்புக்கு உட்படாமல் பாதுகாத்திருந்த குடிசைமாற்று வாரிய இடத்தை ரேஷன் கடை கட்டுவதற்கு தரக்கோரி அதிகாரிகளைச் சந்தித்து முறையிடல், ஆர்ப்பாட்டம், முற்றுகை எனப் பல வழிகளில் போராட்டம் நடந்தேறியது.

பின்புதான், குடிசைமாற்று வாரியம் தனது இடத்தை ரேஷன் கடை கட்டுவதற்காக வழங்கியது. இதேபோல, அரசின் பல்வேறு துறையின் கீழ் பயன்படுத்தப்படாமல் இருக்கும் இடங்களைக் குடிசைமாற்று வாரியத்திடம் கொடுத்தால், கரையோரத்திலிருந்து அப்புறப்படுத்தப்படும் மக்களுக்கு அவர்களின் குடியிருப்புக்கு அருகிலேயே புதிய அடுக்குமாடிக் குடியிருப்புகளைக் கட்டித்தர முடியும். இத்தகைய செயல்பாடுகளில் ஏன் அரசு ஈடுபட மறுக்கிறது? அதை ஏன் பொதுச் சமூகம் கண்டுகொள்ளாமல் இருக்கிறது?

ஆற்றின் கரையில் கான்கிரீட் வெள்ளத்தடுப்புச் சுவர் அமைத்தால் வெள்ளத்தைத் தடுக்க முடியும் என அரசு சொல்கிறது. ஆனால், சென்னை பெருவெள்ளத்தின்போது ஜாபர்கான்பேட்டை பகுதியில் அடையாற்றின் கரையோரம் கான்கிரீட் வெள்ளத்தடுப்புச் சுவர் இருந்தும் அப்பகுதியில் இருந்த பட்டா குடியிருப்புகள் வெள்ளத்தில் மூழ்கின. மழை வெள்ளத்தை கான்கிரீட் சுவரால் தடுக்க முடியாது என்ற அனுபவம் இருந்தும் அத்தகையதொரு திட்டத்தைச் செயல்படுத்துவது ஏன்? இன்னொரு கேள்வி: ஆற்றை அகலப்படுத்த வேண்டுமா, ஆழப்படுத்த வேண்டுமா?

இரண்டையும் செய்ய வேண்டியதுதான். ஆனால், ஆற்றின் எந்தப் பகுதியில் எங்கே, எதைச் செய்ய வேண்டும் என்பதை அரசு திட்டமிட வேண்டும். எளிய மக்களின் மீது அக்கறையோடு அரசு இத்திட்டத்தைக் கையாள நினைத்தால், ஆற்றை ஆழப்படுத்த வேண்டியதுதான் இலக்காக இருக்க முடியும். அரசு பரிசீலிக்க வேண்டும்.

- ஜி.செல்வா, அரசியல் செயல்பாட்டாளர், ‘எங்களை இங்கிருந்து அப்புறப்படுத்தாதீங்க!’ நூலாசிரியர்.
தொடர்புக்கு: selvacpim@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x