Published : 22 Nov 2019 07:02 AM
Last Updated : 22 Nov 2019 07:02 AM

360: இவ்வளவு அறிவு வறட்சியா?

அறிவுத் திருட்டு (பிளேஜியரிஸம்) என்பது இந்திய பல்கலைக்கழகங்களைப் பீடித்திருக்கும் பெரிய நோயாகும். இதில் ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகம் தொடங்கி சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் வரை விதிவிலக்கு ஏதும் இல்லை போலும்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்களால் வெளியிடப்பட்ட 200 ஆய்வுக் கட்டுரைகளில் அறிவுத் திருட்டு, சித்திரத் திருட்டு, தரவுத் திருட்டு போன்றவை நடந்திருப்பதாக அறிவியலில் ஆய்வு நேர்மைக்கான ஆலோசகர் எலிஸபெத் பிக் கண்டுபிடித்திருக்கிறார்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நடந்த தகவல் திரட்டைக் கண்டுபிடிப்பதற்கு அவருக்கு மூன்று மாதங்கள் செலவாகியிருக்கின்றன. புதுவை பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் சந்திர கிருஷ்ணமூர்த்தி, டெல்லி பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் தீபக் பென்ட்டால், குமாயுன் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் பி.எஸ்.ராஜ்புத், பாரத ரத்னா விருது பெற்ற சி.என்.ஆர்.ராவ் திருவனந்தபுரத்தின் ஐஐஎஸ்ஈஆரின் இயக்குநரான வி.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் புலமைத் திருட்டில் ஈடுபட்டிருப்பதான குற்றச்சாட்டுகள் சமீப ஆண்டுகளில் வெளிவந்திருப்பது குறிப்பிடத்தக்கது. அசலான சிந்தனை வற்றிப்போனதன் விளைவே இது. கல்வித் துறையில் நிலவும் அறிவு வறட்சியை சரிசெய்யாதவரை நோபல் பரிசுகள் நமக்கு எட்டாக்கனியாகத்தான் இருக்கும்.

சிறை இலக்கியம்: ஜெயசீலனின் ஆய்வு முகம்!

தமிழ்வழிக் கல்வியில் படித்து, தமிழிலேயே ஐஏஎஸ் தேர்வை எழுதி, தமிழக அளவில் முதலிடம் பிடித்தவர் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் வீ.ப.ஜெயசீலன். சமீபத்தில் ‘தமிழில் சிறை இலக்கியம்’ என்ற தலைப்பில் ஆய்வுசெய்து, முனைவர் பட்டம் பெற்றுள்ளார். பேராசிரியர் எழிலரசி பெருமாள் முருகன் நெறியாள்கையின் கீழ் ஆய்வு மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வேடு, சிறை இலக்கியங்களின் மீது கவனம் குவித்திருக்கிறது.

தமிழில் சிறை பற்றிய அனுபவங்களையும் இலக்கியப் படைப்புகளையும் எடுத்துக்கொண்டு சிறைவாசிகளின் சமூகவியல் பார்வைகளையும் சிறைச் சீர்திருத்தத்தையும் ஆய்வுசெய்திருக்கிறார் ஜெயசீலன். அமெரிக்காவிலும் லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் சிறை பற்றிய பதிவுகளும் அனுபவங்களும் தனி இலக்கிய வகையாகவே வகைப்படுத்தப்படுகின்றன. தமிழில் சங்க இலக்கியம் தொடங்கி நவீன இலக்கியம் வரை தொடர்ச்சியாக சிறை அனுபவங்கள் பேசப்பட்டபோதிலும் இதுவரை அதைத் தனியொரு இலக்கிய வகையாக யாரும் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டதில்லை. ஆட்சிப்பணிக்கு இடையே ஜெயசீலனின் ஆய்வுப் பணிகளும் தொடரட்டும்!

ஆஞ்சியோ வேண்டாம்; மருத்துவ சிகிச்சையே போதும்!

ரத்த ஓட்டக் குறைபாடு இதய நோய்ப் பிரச்சினை உள்ளவர்கள் இந்தியாவில் 4 கோடியிலிருந்து 5 கோடி வரை இருக்கிறார்கள். இதயத்துக்கு ரத்தத்தைக் கொண்டுசெல்லும் நாளங்கள் மிகக் குறுகலாக இருந்தால் ஏற்படும் நோய் இது. இந்தியாவில் நிகழும் மரணங்களில் 15-லிருந்து 20 சதவீதம் வரை இந்த நோயால்தான் நிகழ்கின்றன.

இந்த நோய் உள்ளவர்களில் ஆண்டுக்கு 4.5 லட்சம் பேர் ஆஞ்சியோபிளாஸ்டி செய்துகொள்கிறார்கள். சமீபத்தில், இஸ்கெமியா பரிசோதனை என்ற பெயரில் சுமார் 5,000 இதய நோயாளிகளிடம் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது.

இந்த நோயாளிகளில் சரிபாதிப் பேர் ஆஞ்சியோ செய்துகொண்டவர்கள். மீதமுள்ளவர்கள் மருந்துகளைச் சாப்பிட்டே சிகிச்சை எடுத்துக்கொள்பவர்கள். ஒப்பிட்டுப் பார்க்கும்போது மருந்துகளைச் சாப்பிட்டு சிகிச்சை எடுத்துக்கொள்பவர்கள் சற்று அதிகமாகக் குணமாகியிருப்பது தெரியவந்துள்ளது.

ஆகவே, இந்த நோய்க் குறைபாடு இருப்பதாக அறிந்தவுடன் ஓடிப்போய் ஆஞ்சியோ செய்துகொள்ள வேண்டாம், மருந்துகளைக் கொண்டே பெரும்பாலும் குணப்படுத்திவிட முடியும், அப்படியும் முடியாதபட்சத்தில் ஆஞ்சியோ செய்துகொள்ளவோ, ஸ்டென்ட்டுகளைப் பொருத்திக்கொள்ளவோ செய்யலாம் என்று இதய நோய் நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x