Published : 20 Nov 2019 12:06 PM
Last Updated : 20 Nov 2019 12:06 PM

நினைவில் இருக்கும் கேரளம் 

மினி கிருஷ்ணன்

சமீபத்திய எனது கேரளப் பயணத்தின்போது நெடுஞ்சாலையின் இரு மருங்கிலும் வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பலகைகளைப் பார்த்தபடியே சென்றேன். அவை பசிக்கும் ருசிக்கும் தீனிபோடும் வகைவகையான உணவுப் பண்டங்களைப் பற்றிய விளம்பரங்கள். அரை நூற்றாண்டுக்கு முன்னால் கேரளத்தில் பயணித்தால் எப்படியிருக்கும் என்ற சிந்தனையில் மூழ்கினேன்.

ரயில் நிலையத்திலிருந்து விலகி உள்நாட்டில் செல்லச் செல்ல சாலைகள் காணாமல்போகும், இறுதியாகக் கடல் போன்று அகன்ற தண்ணீர் விரிவை அடைய வேண்டியிருக்கும், அது உண்மையில் ஒரு மைல் அகலம் கொண்டதுதான், படகு மூலம் கடக்க வேண்டியிருந்திருக்கும்.

எந்த மாதிரியான பொறுமையை அந்த மக்கள் கொண்டிருந்திருப்பார்கள். அக்கம்பக்கத்தவர் வீட்டுக்கோ தாய் வீட்டுக்கோ, அதாவது அந்த வீடு ஆற்றின் அக்கரையில் இருக்குமென்றால், அதைச் சென்றடைய ஒரு காலைப் பொழுது முழுவதும் தேவைப்பட்டிருக்கும். ஆனால், உணவு... என்னுடைய சித்தியைச் சந்தித்தபோது எங்கள் தாத்தா என்ன மாதிரியான உணவைச் சாப்பிடுவார் என்று கேட்டேன்.

ஒவ்வொரு நாளும் மசித்த பருப்பு, அரிசிச் சோறு, நெய் போன்றவற்றைத்தான் அவர் சாப்பிடுவார். அவருக்காக அம்மா காரமான சட்னியும் செய்வதுண்டு. இவற்றைத் தவிர, என்னால் வேறு எதையும் நினைவுகூர முடியவில்லை. ஆக, விநோத உணவுகள் ஏதும் இல்லை. தயிரைப் பற்றி அவர்கள் கேள்விப்பட்டதே இல்லை - எப்போதும் மோர்தான்.

சித்தி தனது பெற்றோரைப் பற்றிப் பேசும்போது இருவரும் நூறு ஆண்டுகளுக்கு முன்பு பிரபலமாக இருந்த அமெரிக்கப் பெண் எழுத்தாளர் ஹென்றி உட்டின் எழுத்துகளைப் படித்துக்கொண்டிருந்ததைக் குறிப்பிட்டார். அந்த எழுத்தாளரின் ‘ஈஸ்ட் லைன்’ என்ற புத்தகத்தை தாத்தா ஆங்கிலத்திலும், பாட்டி மலையாள மொழிபெயர்ப்பிலும் படிப்பார்கள். “வீட்டு வேலைகளெல்லாம் முடிந்து எல்லோரும் தூங்கிக்கொண்டிருக்கும்போது விளக்கின் மங்கலான வெளிச்சத்தில் பாட்டி படிப்பார். படிப்பதென்றால் அவருக்கு அவ்வளவு விருப்பம்” என்றார் சித்தி.

தண்ணீரில் திளைத்தல்

வீடு திரும்பிய பிறகு நான்கு குழந்தைகள் இடுப்பு வரையிலான தண்ணீரில் நின்றுகொண்டு கேமராவை நோக்கிச் சிரித்துக்கொண்டிருக்கும் புகைப்படம் ஒன்றைப் பார்த்தேன். சில நொடிகளில் கடந்த காலமானது 60 ஆண்டுகளைத் துளைத்துக்கொண்டு உயிரோடு வந்து நின்றது. அந்தத் தண்ணீரின் இனிமையான மணத்தை என்னால் இப்போதும் உணர முடிந்தது.

குளத்தின் மேற்பரப்பை மூடியிருந்த பச்சைத் திட்டுகளையும் என்னால் நினைவுகூர முடிந்தது. மனிதர்களால் உருவாக்கப்பட்ட இதுபோன்ற குளங்களைச் சுற்றிலும் சுவர் எழுப்பப்பட்டிருக்கும். கேரளத்தின் மண் இப்படித்தான் ஈரப்பதம் மிகுந்ததாக இருக்கும். அந்தக் காலத்தில் வசதியான சில வீடுகளில் இப்படியான குளங்கள் சுற்றுச்சுவருக்குள் இரண்டு மூன்றுகூட இருக்கும்.

எல்லாவற்றையும் கேள்வி கேட்காமல் எப்படி ஏற்றுக்கொண்டோம்! அழகிய மரங்கள், கொடிகள் எத்தனை எத்தனை! நாள் முழுவதும் பறவைகள், அணில்களில் சப்தங்கள் எத்தனை எத்தனை! இந்த சப்தங்களைப் போக்குவரத்தின் இரைச்சல்களும் ஒலிபெருக்கிகளின் ஓலங்களும் மூழ்கடித்துவிட்டன. அதேபோல், இடைக்கால விழுமியங்களுடன் வாழ்ந்த 20-ம் நூற்றாண்டின் நடுப்பகுதியைச் சேர்ந்த கிராமம் நவீனத்துவம், மின்சாரம், ‘வளர்ச்சி’ ஆகியவற்றிடம் சரணடைந்தும்விட்டது.

குழந்தைகளிடமும் அவர்களின் குளியல் நேரத்திடமும் வருவோம்... 20 நிமிடங்களில் முடிந்திருக்க வேண்டியது இரண்டு மணி நேரம் நீடிக்கும். வெகு நேரம் தண்ணீரில் விளையாடுவதிலும் கொஞ்சம் நீந்துவதிலும் நேரத்தையே நாங்கள் மறந்துவிடுவோம். இதில் விநோதம் என்னவென்றால், பெரியவர்கள் யாரும் வந்து எங்களைத் தண்ணீரிலிருந்து வெளியே வரும்படி கூப்பிடவோ, தொல்லைகொடுக்கவோ மாட்டார்கள்.

எங்களை யாருமே கண்காணிக்கவும் மாட்டார்கள். அதைப் பற்றிய நினைவுகளில் ஆழ்ந்திருக்கும்போது, எங்களைக் குறுக்கீடு செய்யாத எங்கள் பெற்றோர்கள், அத்தைகள், சித்திகள், பெரியம்மாக்கள், சித்தப்பாக்கள், பெரியப்பாக்களை வியந்து பார்க்கிறேன். ஒருவேளை எங்கள் தொந்தரவிலிருந்து கொஞ்ச நேரம் விடுபட்டிருப்பதற்காக அவர்கள் எங்களைக் கண்டுகொள்ளாமல் விட்டிருந்திருக்கலாம்.

அந்த அளவுக்கா இரைச்சலிடுபவர்களாக நாங்கள் இருந்தோம்? மரத்தாலான தாழ்வாரத்தில் இடிபோல இரைச்சலை ஏற்படுத்தக் கூடாது என்றும், ரொம்பவும் வயதான தாத்தா இருந்த பகுதியைத் தாண்டி வேகமாக ஓடக் கூடாது என்றும் எங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது நினைவில் இருக்கிறது.

அது ஒரு கனாக்காலம்

காலை உணவில் மாறுபாடே இருக்காது. அதே கல் போன்ற இட்லிதான், வேக வைத்த வாழை, முட்டை போன்றவை இலைகளில் வைக்கப்படும். கூடவே மூக்கு வைத்த பித்தளை கெண்டியில் தேநீர் வைக்கப்பட்டிருக்கும். கருப்பட்டி கலந்திருக்கும் அந்தத் தேநீர் வித்தியாசமான சுவையைக் கொண்டிருக்கும். ஆனால் சூடாகவும் நிறையவும் திருப்தியளிக்கும் விதத்திலும் இருக்கும். எப்போதாவது எங்களுக்குச் சாப்பிடுவதற்கு அரிசிப் புட்டு கிடைக்கும், அதற்குத் தொட்டுக்கொள்ள பருப்பாலான தொடுகறியும் கிடைக்கும்.

மின்சாரமானது இரவைப் பகலாக்குவதற்கு முந்தைய காலத்தில் அந்திப் பொழுதில், இரவு தொடங்கும் அந்தப் பொழுதில் கடுமையான இருட்டானது அரிக்கன் விளக்கால் மட்டுமே சிறிது வெளிச்சமூட்டப்பட்டிருக்கும். அது உஷ் உஷ் என்று தனது ஒளியைக் கொஞ்சம் மூடியிருக்கும் வராந்தாவில் பரவவிடும். இந்தக் காட்சிகளை நினைவுகூர்வதென்பது பல ஆண்டுகளுக்கு முன்பு பார்த்த பழைய திரைப்படத்தின் சில காட்சிகளை நினைவுகூர்வது போன்றது.

இன்றைய கேரளத்தின் காலை உணவு சாஸேஜுகள், கார்ன்-ஃப்ளேக்ஸ், பூரி, உருளைக்கிழங்கு மசாலா, தோசை, சட்னி இன்னும் விதவிதமான பொடிகள் என்று ஆகியிருக்கிறது. எனினும், இவற்றில் ஏதும் கேரளத்தின் சமையலறையில் பெரும் வேலை வைப்பதில்லை.

ஏனெனில், உடனடி தயாரிப்புக்கான பொடிகளும் கலவைகளும் மளிகைக் கடைகளின் அலமாரிகளில், ஏன் கிராமத்தில்கூட இடம்பிடித்துவிட்டன. நாம் அப்போது உடல்நலத்துடன் இருக்கவில்லையா? அப்போது நன்றாக உறங்கவில்லையா?

தி இந்து, தமிழில்: ஆசை

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x