Published : 19 Nov 2019 11:45 AM
Last Updated : 19 Nov 2019 11:45 AM

360: சென்னையின் தண்ணீருக்கு இந்த நிலையா?

சென்னை தண்ணீருக்காக மட்டும் தவித்துக்கொண்டிருக்கவில்லை; நல்ல தண்ணீருக்காகவும்தான் தவித்துக்கொண்டிருக்கிறது. ஆம்! இந்திய தரநிர்ணயத்துக்கான ஆணையம் (பிஐஎஸ்) மேற்கொண்ட ஆய்வில், சென்னையில் வரும் குழாய் நீர் மிக மோசமானதாக இருப்பது தெரியவந்துள்ளது. சென்னையோடு சேர்ந்து லக்னோ, பெங்களூரு, கொல்கத்தா, திருவனந்தபுரம் உள்ளிட்ட 13 நகரங்களிலும் இதே நிலைதான்.

நீரின் கடினத்தன்மை, கலங்கல் தன்மை, கரைந்திருக்கும் திடப்பொருட்களின் அளவு போன்ற 9 அடிப்படைகளின்கீழ் செய்யப்பட்டிருக்கும் ஆய்வில் சென்னையின் குழாய் நீர் எதிர்பார்க்கப்படும் தரத்தைவிடக் குறைவாக இருக்கிறது. சென்னையில் நாள்தோறும் 52.5 கோடி லிட்டர் தண்ணீர் வழங்கப்படுகிறது. இதில் குழாய் வழியாக மட்டுமே 35 கோடி லிட்டர் தண்ணீர் வழங்கப்படுகிறது. கிட்டத்தட்ட ஒரு கோடி மக்களைக் கொண்ட சென்னை மக்களுக்குப் பாதுகாப்பான தண்ணீரை வழங்க முடியாதது அரசின் இயலாமை தவிர வேறு என்ன?

தனியார் வசமாகிறது ராணுவ வீரர்களுக்கான முதுகுப் பை தயாரிப்பு

இந்திய ராணுவ வரலாற்றில் முதன்முறையாக ராணுவ வீரர்களுக்கான முதுகுப் பை தயாரிப்பு தனியார் நிறுவனம் ஒன்றுக்கு ஏலம் விடப்பட்டுள்ளது. வைல்டுகிராஃப்ட் நிறுவனம்தான் இனி முதுகுப் பைகளைத் தயாரிக்கும். தலா 90 லிட்டர் கொள்ளளவு கொண்ட 1.8 லட்சம் பைகள் தயாரிக்கப்படவிருக்கின்றன. உயர் தொழில்நுட்பத்துடன் கூடிய இந்தப் பைகளின் தயாரிப்பு இன்னும் 12 மாதங்களில் நிறைவுக்குவரும் என்று அந்நிறுவனம் கூறியுள்ளது.

கடினமான தட்பவெப்ப நிலைகளில் 30 நாட்களுக்குத் தேவையான உணவுப் பொருட்கள் உள்ளிட்டவற்றைச் சுமந்து செல்வதற்கேற்ப இந்தப் பைகள் தயாரிக்கப்படவிருக்கின்றன. ஆண்டுக்கு ரூ.603 கோடி வருமானம் ஈட்டும் இந்நிறுவனம், இனி முதுகுப் பைகளின் உதவியால் ஆண்டுக்கு 1,000 கோடியை ஈட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசின் கையில் இருந்த முதுகுப் பை தயாரிப்பு, தனியார் நிறுவனத்துக்கு ஏலத்துக்கு விடப்பட்டிருப்பது கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது.

அறிவியல் துறைகளில் பெண்கள்

அறிவியலில் பெண்கள் நுழையாத துறைகளே இல்லை எனலாம். அப்படியும் பெண்களின் பங்கேற்பு அறிவியலில் குறைவாகத்தான் இருக்கிறது. பெண்கள் பெரும்பாலும் ‘மென்மையான அறிவியல்’ துறைகளையே தேர்ந்தெடுக்கும் நிலைதான் காணப்படுகிறது. இந்திய தேசிய அறிவியல் அகாடமி வெளியிட்ட அறிக்கை இளங்கலை, முனைவர் பட்டப் படிப்புகளில் மொத்தமுள்ள மாணவர்களில் பெண்கள் 40% என்றாலும், மேலே போகப்போகப் பெண்களின் பங்கேற்பு குறைகிறது.

பல்கலைக்கழகங்களிலும் அறிவியல் நிறுவனங்களிலும் அறிவியலாளர்களாக 15% பெண்கள்தான் பணியாற்றுகிறார்கள் என்கிறது. மேலும், ஆண்களுக்கு நிகரான பணியில் இருந்தாலும் அவர்களுக்கு நிகரான ஊதியம் பெண்களுக்கு வழங்கப்படுவதில்லை. கூடவே, திருமணம், குழந்தை பிறப்பு, குழந்தை பராமரிப்பு என்று பெண் அறிவியலாளர்களின் பணி மேலும் முடங்கிப்போகிறது. இதையெல்லாம் தாண்டித்தான் கல்பனா சாவ்லாக்களும் சுனிதா வில்லியம்ஸ்களும் மேலே வருகிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x