Published : 19 Nov 2019 10:48 AM
Last Updated : 19 Nov 2019 10:48 AM

ஆமாம், இயந்திரங்கள் உங்கள் வேலையைத் திருடிக்கொண்டிருக்கின்றன!

ஆண்ட்ரூ யாங்

அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சியினுடைய கடந்த விவாதத்தின்போது ஒரு தருணமானது தனித்துத் தெரிந்தது. எலிஸபெத் வாரனும் நானும் தானியங்கி இயந்திரங்கள் எப்படி பணியிழப்புக்குக் காரணமாகின்றன என்பதைப் பற்றி விவாதித்தோம். ஜோ பிடனும் இடையே எங்களோடு சேர்ந்துகொண்டார். நான்காவது தொழிற்புரட்சியானது வேலையிழப்புக்குக் காரணமாகிறது; ஆகவே, இந்தப் பிரச்சினையின் வேரைக் கண்டறிந்து அதை எதிர்கொள்வது மிகவும் முக்கியமானது என்றார் அவர்.

உடனடியாக, தரவுகளைச் சரிபார்ப்பவர்கள் களத்தில் இறங்கினார்கள். 2000-லிருந்து 2010 வரை தொழிற்சாலைகளில் 88% வேலையிழப்புக்குத் தானியங்கி இயந்திரங்கள்தான் காரணம் என்று சுட்டிக்காட்டினார்கள். எனினும், அந்த விவாதத்தைத் தொடர்ந்து வந்த தினங்களில் சில முக்கியமான ஊடக ஆளுமைகள் தானியங்கி இயந்திரங்கள் விடுக்கும் அச்சுறுத்தல் உண்மையானது அல்ல என்றார்கள். நியூயார்க் டைம்ஸ் பத்தியாளர் பால் க்ரூக்மன் “உண்மையான கேள்விகளிலிருந்து தப்பிப்பதற்காக மையவாதிகள் கையில் எடுத்துக்கொண்ட விவகாரம்தான் இது” என்றார்.

இயந்திரங்களின் கொடூரக் கரம்

கள யதார்த்தத்தைப் புறக்கணிக்கும் முழுமையற்ற புள்ளிவிவரங்களை எடுத்துக்காட்டுவது எளிது; ஆனால், தடுமாறும் சமூகங்களிடையே நேரம் செலவழித்து நான் கணக்குப் போட்டிருக்கிறேன். நான் நிறுவிய ‘வென்ச்சர் ஃபார் அமெரிக்கா’ நிறுவனம் என்னை நாடு முழுவதும் டெட்ராய்ட், செய்ன்ட் லூயிஸ், பர்மிங்காம் போன்ற இடங்களுக்கும் பிற சமூகங்களுக்கும் என்னை அனுப்பியது. அங்கெல்லாம் தொழில்முனைவைத் தூண்டிவிடவும் வேலைகளை உருவாக்கவும் நாங்கள் முயன்றோம். அப்போதுதான் தானியங்கி இயந்திரங்களால் வேலையை இழந்து, மேற்கொண்டு எந்த வேலையையும் தேடிக்கொள்ள வழியில்லாமல் இருந்தவர்களிடம் பேசிப் பார்த்தேன். எனது அமைப்பு புதிய வேலைகளை உருவாக்குவதில் உதவினாலும், தானியங்கி இயந்திரங்கள் இந்த மாகாணங்களில் பல்லாயிரக்கணக்கானோரின் வேலைகளைப் பறித்துக்கொண்டிருக்கிறது.

தொழிற்சாலையில் வேலை பார்க்கும் தொழிலாளிகள், ட்ரக் ஓட்டுநர்கள் போன்றவர்களை மட்டும்தான் தானியங்கி இயந்திரங்கள் பாதிக்கின்றன என்றில்லை; கணக்காளர்கள், இதழாளர்கள், சில்லறை உணவு வணிகர்கள், அலுவலக எழுத்தர்கள், கால் சென்டர் ஊழியர்கள், ஏன் ஆசிரியர்கள்கூட இயந்திரங்களால் வேலை இழக்கும் அச்சுறுத்தல் இருக்கிறது. இவைதான் அமெரிக்காவில் அதிகம் காணப்படும் வேலைகளுள் சில. 2016-ல் வெளியான ஒரு ஆய்வறிக்கையின்படி ஒரு மணி நேரத்துக்கு இந்திய மதிப்பில் ரூ.1,433 சம்பளமாகத் தரக்கூடிய வேலைகளில் 83% தானியங்கிகள் செய்துவிடக்கூடியவையே. இதற்கும் மேல்நிலையில் உள்ளவர்களும் இந்த அச்சுறுத்தலிலிருந்து தப்பிவிட முடியாது - மருத்துவர்கள், கணக்காளர்கள், ஏன் வழக்கறிஞர்கள்கூட இந்த அச்சுறுத்தலை எதிர்கொண்டிருக்கிறார்கள்.

2000-லிருந்து அமெரிக்காவில் உற்பத்தித் தொழிலில் 50 லட்சம் பேர் தானியங்கி இயந்திரங்களால் வேலை இழந்திருக்கிறார்கள். இந்த வேலையிழப்புகள் ஓஹியோ, மிஷிகன், பென்சில்வேனியா, விஸ்கான்ஸின், அயோவா ஆகிய டொனால்டு ட்ரம்புக்கு 2016-ல் சாதகமாக அமைந்த மாகாணங்களில் நிகழ்ந்திருக்கின்றன. 2000-ல் உற்பத்தித் தொழில் வாய்ப்புகள் சரிவடையத் தொடங்கியபோது, உடல் ஊனத்துக்கான சலுகையைக் கோரும் விண்ணப்பங்கள் அதிகரிக்க ஆரம்பித்தன. தற்கொலைகள், போதை மருந்துகளை அதிக அளவில் பயன்படுத்துதல் என்று எல்லாவற்றையும் தற்போது பார்த்துக்கொண்டிருக்கிறோம். அமெரிக்கர்களின் சராசரி ஆயுள் குறைந்துவிட்டது. இது 1918-ல் ஏற்பட்ட ஸ்பானிஷ் காய்ச்சலுக்குப் பிறகு நிகழ்ந்திராத ஒன்றாகும்.

21-வது நூற்றாண்டின் தீர்வு

நமது மக்கள் மீது தானியங்கி இயந்திரமயமாக்கல் ஏற்படுத்திய விளைவுகளை மறுப்பதை விட்டுவிட்டு, இந்தப் பிரச்சினைகளுக்கு 21-வது நூற்றாண்டின் தீர்வுகளைக் காண நாம் முயல வேண்டும். மொத்த உள்நாட்டு உற்பத்தி, பங்குச் சந்தை, வேலையில்லாத் திண்டாட்டம் ஆகியவற்றைப் பார்ப்பதுதான் பொருளாதாரத்தை அளப்பதற்கான 20-ம் நூற்றாண்டின் வழிமுறை. தன்னைத் தானே ஓட்டிச்செல்லும் ட்ரக்குகள் மொத்த உள்நாட்டு உற்பத்திக்குப் பெரும் நன்மை செய்பவையாக இருக்கலாம். ஆனால், லட்சக்கணக்கான ட்ரக் ஓட்டுநர்களைப் பொறுத்தவரை அது பெருந்துயரமாகும்.

எது முக்கியமானதோ அதைத்தான் நமது பொருளாதாரம் சார்ந்த எண்கள் அளக்க வேண்டும். அமெரிக்காவிலுள்ள 78% தொழிலாளர்களைப் பொறுத்தவரை பங்குச் சந்தையால் அவர்களுக்கு எந்தப் பயனும் கிடையாது. அவர்களெல்லாம் கைக்கும் வாய்க்குமாகத் திண்டாடிக்கொண்டிருப்பவர்கள். மனிதர்களை மையமாகக் கொண்ட முதலாளித்துவத்தை நோக்கி நாம் நகர வேண்டும். அதில் சந்தையானது நமக்கானதாக இருக்கிறதே தவிர, சந்தைக்காக நாம் இருப்பதில்லை. மனித மையமான முதலாளித்துவம் பணத்தைவிட மக்கள்தான் முக்கியம் என்பதையும், சந்தையானது நமது பொதுவான இலக்குகளுக்கும் மதிப்பீடுகளுக்கும் பணியாற்றுவதற்காகவே இருக்கிறது என்பதையும் உறுதிப்படுத்த வேண்டும்.

என் லட்சியமானது புதிய உயர்ரக அளவீடுகளைக் கணக்கில் கொள்கிறது. உடல்நலம், ஆயுட்காலம், மனநலம், போதைப் பொருள் பயன்படுத்துவது, குழந்தை மரணம் தவிர்ப்பு விகிதம், சராசரி வருமானம், சுற்றுச்சூழலின் தரம், ஓய்வூதியச் சேமிப்புகள், தொழில் வர்க்கத்தின் பங்களிப்பு, அடிப்படைக் கட்டமைப்பு, வீடில்லா நிலை போன்றவைதான் அந்த அளவீடுகள். இவைதான் நமது வாழ்க்கையை அளவிடுவதற்கான உண்மையான அளவைகள். எத்தனை பேர் காலையில் மொத்த உள்நாட்டு உற்பத்தியைப் பற்றிய மகிழ்ச்சியுடன் கண்விழிக்கிறார்கள்? அமெரிக்காவில் 10-ல் நான்கு பேர் அசுத்தமான காற்றைச் சுவாசிக்கிறார்கள் என்பதையோ, மனநலம் குன்றிய வயதுவந்தோரில் ஐந்தில் மூன்று பேருக்கு சிகிச்சை அளிக்கப்படுவதில்லை என்பதையோ தெரிந்துகொள்வதில்தான் நாம் ஆர்வம் காட்டுவோம். இந்த அளவீடுகளையெல்லாம் பொருளாதாரத்தின் மையத்தில் நாம் வைத்தோமென்றால், நமது வாழ்க்கையை மேம்படுத்திக்கொள்வதற்கான பெரும் மாற்றங்களை நம்மால் ஏற்படுத்த முடியும்.

லட்சியப் பார்வையும் செய்தியும்

அமெரிக்க அதிபர் தேர்தலுக்காக நான் போட்டியிட ஆரம்பித்தபோது, அமெரிக்காவின் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கான இந்தப் பெரிய தீர்வுகளைப் பேசிய ஒரே வேட்பாளர் நான்தான். ஆனால், பெரும்பாலான அமெரிக்கர்களைத் தானியங்கி இயந்திரமயமாதல் கவலைகொள்ளச் செய்திருக்கிறது என்பதை எங்களின் ஜனநாயகக் கட்சி உணர ஆரம்பித்துள்ளது. இந்த லட்சியப் பார்வையும் செய்தியும்தான் கடந்த முறை நடந்த ஜனநாயகக் கட்சி விவாதத்தின் பொருளாதாரப் பகுதியை உந்திச் செலுத்தியது.

அமைப்பானது தங்களைச் சுரண்டுகிறது என்பதை வாக்காளர்கள் உணர்ந்திருக்கிறார்கள். பெரிய நிறுவனங்களெல்லாம் தங்கள் பணிகளைத் தானியங்கிமயமாக்குகிறார்கள். நமது உள்ளூர்ப் பொருளாதாரத்தின் மதிப்பை உறிஞ்சியெடுத்துக்கொண்டு வரிப்பணமாக எதையும் செலுத்துவதில்லை, அல்லது குறைந்த அளவே செலுத்துகிறார்கள். அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி இந்திய மதிப்பில் ரூ.14.34 கோடியே கோடி! எனினும், சராசரி அமெரிக்கர்கள் தள்ளாடிக்கொண்டிருக்கிறார்கள்.

இது மேலும் மேலும் மோசமாகிக்கொண்டுதான் இருக்கிறது. 2000-க்குப் பிறகு பிறந்த ஒருவர், தனது பெற்றோரைவிட தாக்குப்பிடிப்பதற்கு 50-50 வாய்ப்புதான் இருக்கிறது. ஆனால், 1940-களில் பிறந்தவர்களுக்கு 90% வாய்ப்பு இருந்தது. அமெரிக்கக் கனவு என்பது எண்களால் இறந்துகொண்டிருக்கிறது. வெள்ளை மாளிகையில் வசிக்கும் அமெரிக்க அதிபரை மட்டும் பழிபோடாமல் இந்தப் பிரச்சினைக்குக் காரணம் என்ன, அதற்கு என்ன தீர்வு காண வேண்டும் என்பதைப் பற்றியெல்லாம் நாம் பேசியாக வேண்டும்.

- ஆண்ட்ரூ யாங், அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர்களில் ஒருவர்.

© தி நியூயார்க் டைம்ஸ், தமிழில்: ஆசை

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x