Published : 19 Nov 2019 10:41 AM
Last Updated : 19 Nov 2019 10:41 AM

சாமானியரையும் அதிகாரத்தையும் இணைக்கும் நேசக்கரம்

மன்னார்குடியின் குடிமைச் சமூகக் குழு ஒன்று தன்னுடைய ஊருக்காக ஆற்றிவரும் காரியங்கள் கவனம் ஈர்க்கின்றன. சமூகத்தின் வெவ்வேறு முனைகளில் இருப்பவர்களையும் ஒருங்கிணைத்து அது ஆற்றிவரும் காரியங்கள் ஆச்சரியமூட்டுகின்றன. உள்ளூர் அமைச்சர், சட்டமன்ற - நாடாளுமன்ற உறுப்பினர்கள், வட்டாட்சியர் அலுவலக - நகராட்சி அலுவலக அதிகாரிகள் தொடங்கி காவல் துறையினர், அரசு மருத்துவமனை மருத்துவர்கள் வரை என அதிகாரத்தின் முனையையும், பல்வேறு கட்சிகளையும் சேர்ந்த அரசியலர்கள், சமூகச் செயல்பாட்டாளர்கள், பொது நல அமைப்பினர், ஆசிரியர்கள், மாணவர்கள் என்று செயல்பாட்டு முனையையும் சாமானிய மக்களோடு இணைக்கும் ‘நேசக்கரம்’ குழுவின் குவிமையம் வாட்ஸ்அப் செயலிதான்.

‘ஊருக்காக ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் கவனம்!’ இதுதான் இந்தக் குழுவினர் தங்களுக்குள் ஏற்படுத்திக்கொண்டிருக்கும் நிபந்தனை. அப்படி ஒரு மணி நேரத்தைச் செலவிட்டாலே பல மாற்றங்களை நம் முன் ஏற்கெனவே இருக்கும் கட்டமைப்புகளைக் கொண்டே நிகழ்த்திவிட முடிகிறது என்கிறார்கள்.

விதை எங்கே விழுந்தது?

தமிழகத்தின் தொன்மையான நகரங்களில் ஒன்றான மன்னார்குடி காவிரிப்படுகையில் அமைந்தது. வெள்ளம் - வறட்சி இரண்டையும் அடிக்கடி எதிர்கொள்ளும் பகுதி இதுவென்றாலும், மன்னார்குடியின் நகரக் கட்டமைப்பு இவற்றை எதிர்கொள்ளும் வகையில் திட்டமிட்டு அமைக்கப் பட்டது. ஆகையால், அருகிலுள்ள ஏனைய பகுதிகளைப் போல பெரும் பாதிப்புகளுக்கு இந்நகரம் உள்ளாவது குறைவு. ‘மன்னார்குடி பாதிப்புக்குள்ளானால், காவிரிப்படுகையில் இயற்கையின் சீற்றம் அதிகம்’ என்று சொல்லும் அளவுக்குத் தாங்குசக்தியைக் கொண்டது அது.

ஆக, அருகிலுள்ள ஊர்கள் பேரிடர்களை எதிர்கொள்ளும்போது உடனே உதவிக்கரம் நீட்டும் மரபு மன்னார்குடிக்கு எப்போதும் உண்டு. இதில் திட்டமிட்டுப் பணியாற்றும் பாங்குக்கு வெவ்வேறு சந்தர்ப்பங்கள் காரணமாவதும் உண்டு. ஓர் உதாரணமாக, சுனாமி தாக்குதலுக்கு உள்ளான நாகப்பட்டினத்துக்கு இங்கிருந்து தொடர்ந்து உதவச் சென்றவர்களைச் சொல்லலாம். இந்தத் தலைமுறையினருக்கு அப்படியான சந்தர்ப்பமாக அமைந்தது சென்னைப் பெருவெள்ளம். சென்னைவாசிகளுக்கு நிவாரண உதவி புரியும் பொருட்டு தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளிலும் உருவான தன்னார்வக் குழுக்கள் பெரும்பாலும் அந்த வெள்ளத்தோடு தங்கள் பணிகளை முடித்துக்கொண்டுவிட்ட நிலையில், மன்னார்குடியில் இந்தக் குழுக்கள் ‘நேசக்கரம்’ என்ற பெயரில் ஒன்றிணைந்தன. பேரிடர் சமயத்தில் ஒன்றிணைவது என்பதற்குப் பதிலாக, அன்றாட ஊர்ச் செயல்பாடுகளில் தங்களை இணைத்துக்கொண்டன.

கவனம் ஈர்க்கும் பொதுப் பணிகள்

தமிழக அளவில் நீர்க்கட்டமைப்புக்கு முன்னுதாரண நகரம் என்று மன்னார்குடியைச் சொல்லலாம். இந்தச் சின்ன நகரம் நூறு குளங்களைக் கொண்டதாகவும், ஒரு குளம் நிரம்பி மற்றொரு குளத்துக்கு நீர் செல்லும் வகையில் ஒன்றுக்கு ஒன்று வாய்க்கால்களால் பிணைக்கப்பட்டும் கட்டமைக்கப்பட்டிருந்தது; இங்குள்ள ஹரித்ராநதி தமிழ்நாட்டின் கோயில் குளங்களிலேயே பெரியது என்ற ஒரு வரித் தகவல் அதன் சிறப்பைச் சொல்லப் போதுமானது. ஆனால், பிற்காலத்தில் இந்தக் குளங்கள், வாய்க்கால்கள் ஆக்கிரமிப்புக்குள்ளாயின. மிச்சப்பட்டவையும் சீரழிவுக்குள்ளாயின.

இப்படியான குளங்கள், வாய்க்கால்களைச் சீரமைப்பதுதான் ‘நேசக்கரம்’ அமைப்பு முன்னெடுத்த முதல் பணி. இந்த ஆண்டு பருவ மழைக் காலத்தில் பல ஆண்டுகளுக்குப் பிறகு, நகரத்திலுள்ள குளங்கள் அனைத்தும் நிரம்பியிருக்க மழை மட்டுமே காரணம் இல்லை; குளங்களும் வாய்க்கால்களும் மழையைத் தக்கவைக்கும் அளவுக்குச் சீரமைப்பைப் பெற்றிருந்ததும் காரணம். நகரத்தைப் பசுமையாக்க மரக்கன்றுகளை நட்டுப் பராமரிக்கும் இயக்கம், பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைத்து, கழிவு மேலாண்மையை மக்கள் மத்தியிலிருந்து முன்னெடுக்கும் இயக்கம். நகரின் பூங்காக்கள் - பொது இடங்களை மேம்படுத்தும் இயக்கம் என்று அடுத்தடுத்து ஆர்வமாகப் பேசுகிறார்கள்.

நகர வீதி ஒன்றில் சாக்கடை ஓடுகிறதா, சாலையில் ஒரு திடீர் குழி உருவாகியிருக்கிறதா, குப்பைகள் எங்கும் தேங்கிக் கிடக்கின்றனவா, பாதசாரி ஒருவர் மயங்கிக்கிடக்கிறாரா, அரசு மருத்துவமனையில் யாருக்கேனும் சிகிச்சை சரியில்லையா, அனாதைப் பிணம் கண்டுகொள்ளப்படாமல் கிடக்கிறதா, கைவிடப்பட்டவர்கள் அவதிப்படுகிறார்களா, அவசரத் தேவைக்குக் குறிப்பிட்ட பிரிவு ரத்தம் தேவைப்படுகிறதா; இந்த அமைப்பில் இருப்பவர்கள் உடனே செயலாற்றுகிறார்கள். ‘இந்த இடத்தில் இப்படி’ என்று ஒருவர் வாட்ஸ்அப் குழுமத்தில் தகவல் தர... உடனே சம்பந்தப்பட்டவர்களுக்கு அது கடத்தப்பட்டு, உடனடி நடவடிக்கைக்கு வழிவகுக்கிறது.

உடனடி நடவடிக்கையோடு தங்கள் கடமையை முடித்துக்கொள்வதில்லை; தொடர் செயல்பாட்டையும் கவனிக்கிறார்கள். ஆதரவற்ற, மனநலம் குன்றிய ஒரு நோயாளியை மருத்துவ மனையில் சேர்த்து இருபது நாட்களுக்கு அவர் சிகிச்சையைக் கவனித்துக்கொண்டதை ஓர் உதாரணமாகச் சொல்லலாம். உதவிக்கு இதுதான் என்று வரையறையும் இல்லை. தீ விபத்துக்குள்ளாகி தங்கள் குடிசைகளை இழந்த எளியோருக்காகப் பதினைந்து வீடுகளை இவர்கள் கட்டித் தந்திருப்பதைக் குறிப்பிடலாம்.

தமிழகமெங்கம் விரியட்டும்

மன்னார்குடி பகுதியிலிருந்து சென்று வெளிநாடுகளிலும் வெளிநகரங்களிலும் பணி யாற்றுவோர் எண்ணிக்கை அதிகம். இப்பகுதியின் பொருளாதாரத்தில் இவர்களுடைய பங்களிப்பு முக்கியமானது. சமூக ஊடகங்கள் வழி இப்படி வெளியூர்களில் வாழ்வோரையும் ‘நேசக்கரம்’ பிணைத்திருக்கிறது. “ஊர் நல்லாயிருந்தாதான் நாம நல்லாயிருக்க முடியும். ஊருக்காக ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் செலவழிக்க முடிஞ்சா எல்லா மாற்றமும் கொண்டுவரலாம்” என்று சொல்லும் இந்த அமைப்பில் உள்ளவர்கள், தனிப்பட்ட வகையில் தங்கள் பெயர்கள்கூட வெளியே வருவதை விரும்பவில்லை.

ஊருக்கு ஊர் இப்படியான அமைப்புகள் இருக்கின்றனதான். ‘நேசக்கரம்’ அதற்கான எல்லைகளையும் கற்பனைகளையும் கூடுதலாகக் கொண்டிருக்கிறது என்பதே அதன் சிறப்பம்சம். உள்ளூர்க் குழுக்கள் இப்படி ஊரின் பெயரால் எல்லாத் தரப்புகளையும் இணைத்துக்கொண்டு பணியாற்றினால், குடிமைச் சமூகச் செயல்பாடு பெரிய அர்த்தம் பெறும். கூடவே, சாமானிய மக்களும் அதிகாரம் பெறுவார்கள்.

- த.ராஜன், தொடர்புக்கு: rajan.t@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x