Published : 18 Nov 2019 09:43 AM
Last Updated : 18 Nov 2019 09:43 AM

என்ன நினைக்கிறது உலகம்? - என்ன ஆயிற்று பொலிவியாவுக்கு?

பொலிவியாவில் வன்முறை தலை விரித்தாடுகிறது. நாடே அராஜகத்தில் மூழ்கும் நிலையில் இருக்கிறது. இந்த நிலைக்குக் காரணம் ராணுவத் தலைவர்களும் போராடும் மக்களும்தான் என்றாலும், இந்தப் பெரும் குழப்பநிலைக்குப் பிரதானப் பொறுப்பாளி யாரென்றால், தற்போது ராஜினாமா செய்திருக்கும் அதிபர் ஈவோ மொராலிஸ்தான். 14 ஆண்டுகளாக ஈவோ மொராலிஸின் சர்வாதிகாரத்தனம் அதிகரித்துவிட்டது.

நான்காவது முறையாக அதிபராக வேண்டும் என்று அவர் முயன்றுகொண்டிருக்கிறார். ஆனால், தேசிய அளவில் எடுக்கப்பட்ட பொது வாக்கெடுப்பில் அவருக்குப் பாதகமாகவே முடிவு வந்தது. பிறகு, அவரது கட்டுப்பாட்டில் இருக்கும் தேர்தல் ஆணையம், அந்த வாக்கெடுப்பு முடிவுகளில் தில்லுமுல்லு செய்து, ஈவோ மொராலிஸுக்கு வெற்றியைப் பரிசளித்தது. இதன் விளைவு கணிக்கக்கூடியதே. கோபம் கொண்ட பொலிவிய மக்கள் நாடு முழுவதும் தெருக்களில் இறங்கிப் போராட ஆரம்பித்தனர். இந்நிலையில், சமீபத்தில் ‘அமெரிக்க நாடுகளுக்கான அமைப்பு’ தேர்தல் குளறுபடிகளை வெளியிட்டு, புதிதாகத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று கூறியிருக்கிறது.

அதுதான் சரியான தீர்வு. ஆனால், ராணுவத் தளபதிகளும் தேசிய காவல் துறையும் கடந்த வாரத்தின் ஞாயிறு அன்று ஈவோ மொராலிஸை ராஜினாமா செய்யச் சொல்லிப் பிரச்சினையை மேலும் பெரிதுபடுத்திவிட்டார்கள். இது வழக்கமான அர்த்தத்தில் ராணுவப் புரட்சி அல்ல; எந்தப் படைகளும் அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டுத் தாக்கவில்லை, ராணுவமும் இதுவரை ஆட்சி அதிகாரத்தைக் கையில் எடுத்துக்கொள்ளவில்லை.

ராணுவத்தின் தலையீடானது ஆபத்தான அதிகார வெற்றிடத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மொராலிஸும் ஏனைய மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் ராஜினாமா செய்திருக்கிறார்கள். அதையடுத்து, இரு தரப்பிலும் உள்ளவர்கள் சூறையாடல், தீவைப்பு என்று பெரும் நாச வேலையில் இறங்கினார்கள்.

ஹ்யூகோ சாவேஸின் சீடரான மொராலிஸ் வெனிசுலாவில் ஏற்பட்டது போன்ற பொருளாதாரச் சீரழிவை பொலிவியாவில் ஏற்படுத்திவிடவில்லை. மாறாக, அவரது ஆட்சிக் காலத்தில் சீரான வளர்ச்சியும் வறுமை நிலையில் குறைப்பும் நிகழ்ந்தன.

அய்மாரா பூர்வகுடியைச் சேர்ந்தவரான மொராலிஸ் பொலிவியாவில் காலம் காலமாக ஒடுக்கப்பட்டுக் கிடந்த பூர்வகுடிப் பெரும்பான்மையினருக்கு புதிய மதிப்பை ஏற்படுத்திக் கொடுத்தார். அதிகாரம் மீதான அகோரப் பசிதான் அவரது வீழ்ச்சிக்குக் காரணமானது.

லத்தீன் அமெரிக்காவில் இடதுசாரிகளுக்கும் வலதுசாரிகளுக்கும் இடையிலான பிளவு அங்கே பெரும் குழப்பத்துக்கு இட்டுச்சென்றிருக்கிறது. நடந்துமுடிந்திருப்பதாகக் கருதப்படும் ராணுவப் புரட்சியை இடதுசாரிகள் நிராகரிக்க, வலதுசாரிகள் மொராலிஸின் வீழ்ச்சியை வரவேற்றிருக்கிறார்கள்.

எல்லாத் தரப்புகளுமே வன்முறைக்கு ‘அமெரிக்க நாடுகளுக்கான அமைப்பு’ ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று கோரியுள்ளன. மேலும், அமைப்புரீதியான செயல்பாட்டை உறுதிசெய்யும் வகையிலும் புதிய தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காகப் புதிய தேர்தல் அதிகாரிகளை நியமிக்கவும் நாடாளுமன்றம் கூட வேண்டும் என்று கோரியுள்ளனர். பொலிவியாவில் அமைதி திரும்ப வேண்டுமென்றால், அனைத்துத் தரப்புகளும் ஒத்துழைக்க வேண்டும்.

தமிழில்: ஆசை

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x