Published : 13 Nov 2019 07:29 AM
Last Updated : 13 Nov 2019 07:29 AM

உழுத நிலம் விற்பனைக்கு: விவசாயத்தைப் புரட்டிப்போடும் தொழில்நுட்பம்!

நார்மன் மேயர்ஷான்

உலகின் தொழிற்புரட்சி இப்போது கற்பனைக்கெட்டாத அடுத்த கட்டத்தை எட்டிக்கொண்டிருக்கிறது. வழக்கமான பாதையில் சிந்திக்காமல் புதுமையாகச் சிந்தித்து தொழில்நுட்பம் உருவாக்குவதில் அமெரிக்காவின் கலிபோர்னியா மாநில சிலிக்கான் வேலியில் உள்ள ‘பேர் ஃபிளாக் ரொபாடிக்ஸ்’ (Bear Flag Robotics) நிறுவனம் நாம் இதுவரை கற்பனையே செய்து பார்த்திராத ஒரு பொருளைச் சந்தைப்படுத்தப்போகிறது.

என்ன தெரியுமா? சாகுபடிக்குத் தயார் நிலையில் உள்ள உழுத நிலம்! எவருடைய கட்டளைக்காகவும் காத்திருக்காமல் தானே சிந்தித்துச் செயல்படும் டிராக்டர்களை இந்நிறுவனம் உருவாக்கிவருகிறது. ‘டிரைவர் இல்லாத கார்’ என்ற நிலைக்கும் அடுத்த கட்டம் இது! பேர் ஃபிளாக் நிறுவனம் டிராக்டர்களைத் தயாரிக்கவில்லை; டிராக்டர்களில் பயன்படுத்த வேண்டிய நுண் உணர் கருவிகளையும், செயல்படச் செய்யும் கருவிகளையும் உருவாக்கிவருகிறது. அப்படிச் செய்தால் எந்த நிறுவனம் தயாரிக்கும் டிராக்டராக இருந்தாலும் அதில் இவற்றைப் பொருத்தி பயன்படுத்திக்கொள்ளலாம். இதனால், உலகளாவிய சந்தையைப் பிடிப்பது எளிது.

அறிவியல் புனைகதை அல்ல

இது ஏதோ அறிவியல் புனைகதையில் வரும் சமாச்சாரம்போல தெரியும். அமெரிக்கப் பண்ணை களுக்கு இது அறிமுகமாகிவிட்டது. விவசாய சாகுபடி தொடர்பான ஒவ்வொரு வேலையையும் இயந்திரமயப்படுத்துவது, அதற்குத் தேவைப்படும் தரவுகளைத் திரட்டுவது, தரவுகளைப் பகுப்பாய்வது என்பவை இதில் அடங்கும். தொழில் துறையில் நடைபெறும் ரோபோக்கள் மூலமான உற்பத்திக்கு இணையாக இப்போது வேளாண் துறை நடைபோடத் தயாராகிவருகிறது. டிராக்டர்கள், அறுவடை இயந்திரம் என்று எல்லாவற்றிலும் ஜிபிஎஸ் ரிசீவர்கள், ஆட்டோ-ஸ்டீயரிங் இணைக்கப்படும்.

இதனால், தானியத்துக்கு ஏற்றபடி சாகுபடி நிலத்தில் வரிசையாக நாற்றுகள் அல்லது விதைகள் நடப்படும். நூறு அடி அகலத்துக்கு நடவு, களைபறிப்பு, பூச்சிக்கொல்லி அல்லது உரம் தெளிப்பு ஆகியவற்றை சீராக மேற்கொள்ள முடியும். விதைப்பதையும் உரமிடுவதையும் அங்குலத்துக்கும் குறைவான தொலைவில்கூடத் துல்லியமாக மேற்கொள்ள முடியும். இக்கருவிகளை செயற்கைக்கோள் மூலம் இயக்கலாம். இப்போது இந்தச் செயல்களைக் கட்டுப்பாட்டு அறை அல்லது மையத்தில் ஒருவர் இருந்துகொண்டு கவனித்துச் செய்கிறார். இனி ஆளில்லாமலேயே இந்த வேலைகள் முடிந்துவிடும்.

அரைத்த மாவை வீட்டுக்கு எடுத்துச் சென்று இட்லி சுடுவதைப் போல தயாரான உழுத நிலத்தை, சாகுபடிக்குப் பயன்படுத்தும் நிலை வந்துகொண்டிருக்கிறது என்கிறார் பேர் ஃபிளாக் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி இகினோ கேஃபிரோ. நிறுவனத்தின் தலைமையகத்திலிருந்து 60 மைல்கள் தொலைவுள்ள சிலாந்த்ரோ என்ற இடத்தில் களச் சோதனைகள் நடக்கின்றன. ஒரு நிலத்தில் அறுவடை நடந்து முடிந்த பிறகு, அடுத்த சாகுபடிக்கு நிலத்தைத் தயார்செய்யும் வேலையை இந்நிறுவனக் கருவிகள் செய்கின்றன.

கட்டுப்படுத்தும் இடத்தில்கூட ஆள் இல்லாத படிக்கு முழுக்க முழுக்கத் தானே சிந்தித்து முடிவு எடுத்துச் செயல்படுத்தும் அளவுக்கு நவீனக் கருவிகளை விவசாயத்தில் புகுத்துவது ஏன் என்றால், இப்போது விவசாய வேலைக்கு ஆட்களே கிடைப்பதில்லை. உணர்கருவி பொருத்தப்பட்ட டிராக்டர்களோ இரவுபகல் பாராமல் 24 மணி நேரமும் நிலங்களைச் சாகுபடிக்குத் தயார்செய்கின்றன.

டிரைவர் இல்லாத கார், பஸ், லாரிகள் இப்போது சாலையில் ஓடத் தொடங்கிவிட்டன. சாலைகளுக்குப் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம் டிராக்டர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. உழும் இடத்துக்கு அருகில் தப்பித்தவறி ஆட்களோ கால்நடைகளோ வேறு வாகனங்களோ வந்துவிட்டால் இவை இயக்கத்தை நிறுத்துவதுடன் தகவலையும் கட்டுப்பாட்டுப் பிரிவுக்குத் தெரிவித்துவிடும்.

இந்த டிராக்டர்கள் வேலை செய்துகொண்டிருக்கும்போதே மண்ணின் தன்மை, ஈரப்பதம், அதில் கலந்துள்ள நுண்ணூட்டச்சத்து, காற்றின் ஈரப்பதம், பூச்சிகள்-வண்டுகளின் நடமாட்டம் என்று பல தகவல்களையும் திரட்டித் தரவுகளாகக் கொடுத்துக்கொண்டிருக்கும். நடவு, மருந்து தெளித்தல் மட்டுமல்லாமல் முந்திரி, பாதாம் போன்ற கொட்டைகளைப் பறிக்கவும் நீள வரிசையில் சாகுபடி செய்யப்படும் பயிர்களை அறுவடை செய்யவும் இதைப் பயன்படுத்த ஆராய்ச்சிகள் தொடர்கின்றன.

970 கோடி மக்களுக்கு உணவு

2050-வது ஆண்டில் உலக மக்கள்தொகை 970 கோடியாகிவிடும். சாகுபடிப் பரப்பு சுருங்கிவருகிறது. தண்ணீர்த் தட்டுப்பாடும் அதிகரித்துவருகிறது. கிடைக்கிற இடத்தில் அதிகச் சாகுபடியைச் செய்தாக வேண்டும். பருவமழை மாறுதலால் ஒருசில நாட்களுக்குள் கொட்டித்தீர்க்கும் மழை, மாதக்கணக்கில் சிறு மழைகூட இல்லாத வறட்சி, மண் அரிப்பு, விவசாயத்தையே நம்பியிருக்க முடியாமல் வேறு தொழில்களுக்கு மக்கள் இடம்பெயர்தல் என்று பல சோதனைகளை வேளாண்மை சந்திக்கவிருக்கிறது. இந்நிலையில் உணவுத் தேவையைப் பூர்த்திசெய்ய நவீனத் தொழில்நுட்பங்களைக் கையாண்டால்தான் முடியும்.

விதைத்தால் விளைச்சல் நிச்சயம் என்பது வரலாற்றில் எப்போதுமே இருந்ததில்லை. பருவ மழை, காலநிலை மாற்றம், பூச்சித் தாக்குதல் என்று பல இடர்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இவ்வளவுக்குப் பிறகு சந்தைப்படுத்துவது தனிப் போராட்டம். விளைச்சல் நன்றாக இருந்தால் சந்தையில் விலை சரிந்துவிடுகிறது. விளைச்சல் குறைந்து சந்தையில் விலை அதிகமாக இருக்கும்போது விவசாயியிடம் விற்க ஏதுமில்லாமல் ஏக்கப் பெருமூச்சுவிட நேர்கிறது.

இது உலகம் முழுக்கவும் விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள். இப்போது விவசாயத்தையும் தொழில் துறையைப் போல நிர்வகிக்க முயற்சிகள் நடக்கின்றன. அதன் ஒரு பகுதியாகத்தான் இப்போது நிலம், நீர், விளைச்சல், பருவநிலை, பூச்சிகளின் தாக்குதல் போன்ற அனைத்துத் தகவல்களும் திரட்டப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்டு ஆராயப்படுகிறது.

2016-ல் ஐபிஎம் நிறுவனம் ‘வெதர் கம்பெனி’யை வாங்கி மேகங்களை ஆராய்ந்து தரவுகளைச் சேமித்துவருகிறது. அந்தக் கால விவசாயிகள் பஞ்சாங்கங்களை நம்பி விவாசயம் மேற்கொண்டதற்கு இணையாக நவீனத் தொழில்நுட்பங்களின் உதவியுடன் தரவுகளைத் திரட்டுகிறார்கள். உலகம் முழுவதும் இதுவரையில் 20 லட்சம் ஏக்கர் வேளாண் நிலங்கள் பற்றிய தரவுகள் பெறப்பட்டுப் பதிவுசெய்யப்பட்டுள்ளன. வளிமண்டலத் தரவுகளும் செயற்கைக்கோள் தரவுகளுமாக ஆறு மாதங்களுக்கான வானிலை அறிவிப்புத் தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன.

ஆட்களுக்கு அவசியமில்லையா?

சரி, எல்லாவற்றையும் நவீனத் தொழில் நுட்பத்துடன் கருவிகள் செய்யப்போகின்றன, இனி வேளாண்மைக்கு ஆட்களே வேண்டியதில்லையா? பண்ணையாட்களும் வேண்டும்தான். ஆனால், குறைந்த எண்ணிக்கையில் போதும் என்கிறார்கள். விவசாயத்தை முழுக்க இயந்திரங்களிடமே விடும் எண்ணம் இல்லை.

விவசாயிகள் எல்லாவற்றையும் தங்கள் கைக்குள் வைத்திருப்பதை உறுதிசெய்ய விரும்புகிறோம் என்கிறது ஐபிஎம். ஸ்மார்ட்போன் அல்லது ஐபேட் மூலம் விவசாயி, தனது நிலத்தில் விளைந்துள்ள பயிரைப் படம் எடுத்து அனுப்பினால் உடனே அது பூச்சி அரிக்கப்பட்டதா, அப்படியென்றால் எத்தனை சதவீதம், எந்த மருந்து எந்த விகிதத்தில் கலந்து தெளிக்க வேண்டும் என்பதையெல்லாம் உடனே கணித்து அவருக்குத் தெரிவித்துவிட வழிசெய்யப்பட்டிருக்கிறது.

எதிர்கால விவசாயிகள் வேகாத வெயிலில் பயிர்களைப் பார்வையிடுவதற்குப் பதிலாக, கணினி மூலமாகவே எல்லாவற்றையும் துல்லியமாகத் தெரிந்துகொள்ளலாம். ‘எதிர்கால விவசாயிகள் சங்கம்’ (எஃப்எஃப்ஏ) தொடங்கப்பட்டிருக்கிறது. எஃப்எஃப்ஏவின் பிளேஸ் கர்ரி சொல்கிறார்: “உயர்நிலை பள்ளிக்கூடத்தின் ஏழு லட்சம் மாணவர்கள் இதன் உறுப்பினர்கள். விவசாயத்தை நவீனமயமாக்குவதல்ல நோக்கம்; நவீனத் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி விவசாயத்தில் இழப்பைக் குறைப்பதும் உற்பத்தியைப் பெருக்குவதும்தான் நோக்கம்.

விவசாய நிலத்தைச் சுற்றிவந்து கண்காணிக்கும் டிரோன் கருவியை விற்பனைப் பிரதிநிதி பண்ணைக்குக் கொண்டுசென்றால், அந்த வீட்டின் மூத்த விவசாயி தனது மகன் அல்லது பேரனை அழைத்து, இதைப் பற்றி நீயே கேட்டுத் தெரிந்துகொள் என்று பொறுப்பை ஒப்படைக்கிறார். எனவே, எதிர்கால விவசாயிகளாகச் சிறார்களைத் தேர்வுசெய்துள்ளோம்!”

தி நியூயார்க் டைம்ஸ், தமிழில்: சாரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x