Published : 13 Nov 2019 07:05 AM
Last Updated : 13 Nov 2019 07:05 AM

360: தண்ணீர்ப் பஞ்சமில்லா 2020 கோடை

இந்த ஆண்டு கடும் தண்ணீர்ப் பஞ்சத்தை எதிர்கொண்ட சென்னைக்கு ஒரு நல்ல செய்தி! சென்னைக்குக் குடிநீர் வழங்கும் ஆந்திரத்தின் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள கண்டலேறு அணையில் போதுமான அளவு தண்ணீர் சேர்ந்திருக்கிறது. மழையின் காரணமாக கிருஷ்ணா நதியில் தண்ணீர் வரத்து அதிகமாக இருந்ததால் அந்த அணை நிரம்பிவருகிறது. தற்போது அந்த அணையில் 4,082 கோடி கன அடி தண்ணீர் இருக்கிறது.

சென்னை தனது பங்கான 1,200 கோடி கன அடியை இந்த முறை பெறுவதில் எந்தப் பிரச்சினையும் இருக்காது என்கிறார்கள் தெலுங்கு-கங்கா திட்டத்தைச் சேர்ந்தவர்கள். கண்டலேறு அணைக்கு இணைப்புக் கால்வாய் மூலம் தண்ணீர் தரும் சோமசிலா அணையில் 7,462 கோடி கன அடி தண்ணீர் இருப்பதும் நல்ல அறிகுறி.

அதேநேரத்தில், சென்னை தனக்கான தண்ணீரை சென்னைக்குள்ளாகவோ சென்னைக்கு அருகிலேயோ சுற்றியுள்ள பகுதிகளிலேயோ ஏரிகளிலும் மழைநீர் சேமிப்பு மூலம் தரைக்குக் கீழேயும் சேமித்துக்கொள்வது அவசியம். எது எப்படியோ, வரும் கோடையில் தண்ணீர் லாரி பின்னால் மக்கள் ஓடும் காட்சிகள் இல்லாமல் இருந்தால் சரி.

சைக்கிள்லாந்து

நெதர்லாந்தை சைக்கிள்லாந்து என்று சொல்லிவிடலாம்போல. அந்த அளவுக்கு அந்நாடு சைக்கிள் பிரியர்கள் நிறைந்ததாக இருக்கிறது. நெதர்லாந்தின் மக்கள்தொகையைவிட (1.7 கோடி) சைக்கிள்தொகை (2.3 கோடி) அதிகம். இவ்வளவு ஏன், அந்நாட்டின் பிரதமர் மார்க் ரட் கூட வானிலை அனுமதிக்கும்போதெல்லாம் நாடாளுமன்றத்துக்கு சைக்கிளில் போகிறார். நெதர்லாந்தில் மொத்தம் 35 ஆயிரம் கிமீ நீளத்துக்கு சைக்கிள் பாதைகள் உள்ளன.

இளைஞர்கள் தொடங்கி வயதானவர்கள் வரை சைக்கிளில் செல்வதால் நீரிழிவு நோய், இதய நோய் போன்றவை அங்கு குறைவு. சைக்கிள் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் சுமார் 6 ஆயிரம் இறப்புகள் தடுக்கப்படுவதாகக் கணக்கிடப்பட்டிருக்கிறது.

கார்களைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக சைக்கிளைப் பயன்படுத்துவதால் ஆண்டுக்கு இந்திய மதிப்பில் சுமார் ரூ. 142 கோடி மிச்சமாகிறது என்றும் கணக்கிடப்பட்டிருக்கிறது. நம் ஊரிலும் சைக்கிள் பிரியர்கள் ஏராளம் இருக்கிறார்கள்; நெதர்லாந்தைப் போல சைக்கிள் பாதைகள் சாத்தியமானால் இங்கே ஒரு சைக்கிள் புரட்சியை நடத்திவிடலாம்.

இளைஞர்களை வரவேற்கும் வங்க மார்க்சிஸ்ட் கட்சி

முப்பதாண்டுகளுக்கும் மேல் வங்கத்தைத் தொடர்ந்து ஆட்சிசெய்து உலக சாதனை புரிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடந்த பத்தாண்டுகளாக மக்களால் புறக்கணிக்கப்படுகிறது.

‘வயதில் மூத்தவர்களும் உயர் சாதிக்காரர்களும் ஆதிக்கம் செலுத்தும் கட்சி’ என்று எழுந்துவந்த விமர்சனத்துக்கு இப்போது செவிசாய்க்கத் தொடங்கியிருக்கிறார்கள். கட்சியின் மாநில நிர்வாகிகளின் சராசரி வயதைக் குறைந்தபட்சம் 50 ஆக்க முடிவெடுத்திருக்கிறது.

கவுதம் தேவ், நிருபேன் சவுத்ரி, தீபக் தாஸ்குப்தா, மானவ முகர்ஜி ஆகிய நான்கு மூத்த தலைவர்களுக்கு மாநிலக் குழுவிலிருந்து ஓய்வு தரப்பட்டிருக்கிறது. இடதுசாரி முன்னணியின் தலைவர் பிமன் போஸுக்கு வயது 79 என்றாலும் இளைஞர்களே வியக்கும்படியாகத் துடிப்பாக இருக்கிறார் என்பதால் அவருக்கு மட்டும் விலக்கு.

இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக இளைஞர் பேரவையைச் சேர்ந்த 30 வயதுக்கும் குறைவான 8 பேர் மாநிலக் குழுவில் சேர்க்கப்பட்டுள்ளனர். வேலைவாய்ப்பு கோரி இந்திய மாணவர் சங்கம் நடத்திய ஊர்வலத்துக்கும் கண்டனக் கூட்டத்துக்கும் ஆயிரக்கணக்கில் இளைஞர்கள் திரண்டுவந்தது கட்சியினருக்குப் பெரும உற்சாகமளித்திருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x