Published : 11 Nov 2019 07:15 AM
Last Updated : 11 Nov 2019 07:15 AM

டெங்கு பீதியில் தமிழகம் கொள்ளை நோய்

ஆக்கிவிடாதீர்கள்!

பருவமழை தொடங்குவதற்கு முன்பே தமிழ்நாட்டில் டெங்கு பதற்றம், பருவமழை தொடங்கிவிட்ட நிலையில் இப்போது நூற்றுக்கணக்கானவர்களைப் படுக்கையில் கிடத்திவிட்டிருக்கிறது. நாளுக்கு நாள் உயிரிழப்பு அதிகரித்துக்கொண்டிருக்கிறது. 2017-ல் டெங்கு காய்ச்சலுக்கு இந்தியாவிலேயே அதிக உயிர்களைப் பறிகொடுத்த மாநிலமான தமிழ்நாடு, அந்தப் பெருந்துயரத்திலிருந்து பாடம் கற்றுக்கொள்ளவில்லை என்பதைத்தான் இது உணர்த்துகிறது.

இந்த ஆண்டு மட்டும் தமிழ்நாடு முழுவதும் 4,500 பேர் டெங்கு காய்ச்சல் காரணமாக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருவதாக அதிகாரபூர்வக் கணக்கு சொல்கிறது. தொடர்ந்து வெளிவரும் சமீபத்திய செய்திகளோ பதற வைக்கின்றன. காஞ்சிபுரம், வேலூர் மாவட்டத்தில் மட்டும் 600-க்கும் மேற்பட்டவர்களுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்புள்ளது.

பருவமழை தொடங்கும் காலத்தில் தட்பவெப்பநிலை மாற்றத்தால் டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சல் அதிக அளவில் பரவுகிறது என்பது, நமது சுகாதாரத் துறைக்குத் தெரியாத புதிய தகவல் ஒன்றும் அல்ல. ஒவ்வொரு ஆண்டும் நாம் இதைத் திரும்பத் திரும்பச் சொல்ல வேண்டியிருப்பது துரதிர்ஷ்டவசமானது.

குறைந்தபட்சமாக, கடந்த மாதம் விடுக்கப்பட்ட டெங்கு அபாய எச்சரிக்கையைத் தொடர்ந்தாவது பொது சுகாதாரத் துறை முன்னேற்பாடுகளை மேற்கொண்டிருந்திருக்க வேண்டும். அவர்களின் பொறுப்பிலிருந்து தவறிவிட்டு, இப்போது தண்ணீர் தேங்கும் இடங்களை அடையாளம் கண்டு அபராதம் விதித்தால் மட்டும் டெங்குவைத் தடுத்துவிட முடியுமா? இதில் சகித்துக்கொள்ளவே முடியாத இன்னொரு அவலம் இருக்கிறது; அண்டை மாநிலங்களைச் சுட்டிக்காட்டி ‘அங்கே ஒப்பிடும்போது இங்கே இறப்புவிகிதம் குறைவாக இருக்கிறது’ என்று ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் பேசுவதுதான் அது. மக்கள் மீது ஒரு அரசு வைத்திருக்கும் அலட்சியத்தையே இது வெளிப்படுத்துகிறது. ஒவ்வொரு உயிருமே முக்கியம் என்பதை உணர்ந்து அரசு செயலாற்ற வேண்டும்.

விஷக் காய்ச்சல் - மர்மக் காய்ச்சல் என்ற பெயரில் தமிழக மக்கள் ஒவ்வொரு ஆண்டும் பாதிக்கப்படுவது பல ஆண்டுகளாகத் தொடர்கிறது. இதைத் தீவிரமான ஒரு பிரச்சினையாகக் கருத வேண்டும். மக்களிடம் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கைகளையும் சுகாதாரத் துறை மேற்கொள்ள வேண்டியது மிகமிக அவசியம்.

பரவலாக மருத்துவ முகாம்களை நடத்தி, மக்களுக்கு டெங்கு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலமும், அரசு மருத்துவமனைகளில் போதிய வசதிகளை ஏற்படுத்துவதன் மூலமும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து ஒருங்கிணைந்த கொசு ஒழிப்புத் திட்டத்தைத் தீவிரப்படுத்துவதன் வழியாகவும் நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த வேண்டும்.

தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட மிக முக்கியமான காரணம், குப்பை – கழிவுகள் மேலாண்மையில் ஏற்பட்டிருக்கும் பின்னடைவுதான். அரசியல் காரணங்களுக்காக உள்ளாட்சித் தேர்தலை முடக்கிவைத்திருந்த அதிமுக அரசு, உள்ளாட்சிகளின் முக்கியத்துவத்தை உணர்ந்திருப்பதாகத் தெரியவில்லை. ஒரு காய்ச்சலை அரசின் அலட்சியம் கொள்ளைநோய் ஆக்கிவிடக் கூடாது. அரசு விரைந்து செயலாற்றி உயிரிழப்புகளைத் தடுக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x