Published : 24 Aug 2015 11:16 AM
Last Updated : 24 Aug 2015 11:16 AM

பொருநை ஆற்றின் பெருமைகள்

தொடர்ந்து ‘தவழ்ந்தாய் வாழி தாமிரபரணி’ தொடரைப் படித்துவருகிறேன். பொருநையாறு தவழும் அந்த மண்ணைச் சார்ந்தவன் என்ற வகையில், கட்டுரைகள் என்னுள் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்துகின்றன. பொருநை ஆற்றைப் பாதுகாக்க வேண்டுமென்ற அக்கறையுள்ள பல்லாயிரக்கணக்கானவர்களில் நானும் ஒருவன்.

அதுமட்டுமில்லாமல், கங்கை - காவிரி இணைப்பு என்று பேசுவதை நிறுத்தி, கங்கை காவிரி வைகை - தாமிரபரணி இணைத்து, கங்கையின் நீர் குமரியைத் தொட வேண்டும் என்ற கோஷத்தை முன்வைத்தவன் நான்.

எல்லா ஆறுகளும் கடலில் மீன்களையும் தவளைகளையும் கொண்டுசேர்க்கும். ஆனால், பொருநையாறு மணிகளையும் முத்துக்களையும் கொண்டுசேர்க்கிறது.

தண்பொருநைக் கரையில்தான் தமிழுக்கு இலக்கணம் படைத்த அகத்தியரின் மாணாக்கர்களான அதங்கோட்டாசான், தொல்காப்பியர், செம்பூட்சேய், காக்கைப்பாடினியார், நத்தத்தனார், பனம்பாரனார், அவிநாயனார், வாய்ப்பியனார், வாமனார், வையாடிகளார் போன்ற தமிழ் ஆசான்கள் வாழ்ந்துள்ளார்கள். சங்க காலப் புலவர் மாறோக்கந்து நப்பசலையார் மாறமங்கலத்தில் வாழ்ந்திருக்க வேண்டும். மாறமங்கலம் பின்னர் மாறோக்கம் என்றாகியிருக்கலாம். கொற்கையின் பக்கத்திலுள்ள பன்னம்பரையில்தான் பனம்பாரனார் வாழ்ந்திருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி இந்நதியைப் பற்றிக் கூறும்போது, “திருநெல்வேலி மக்களின் முக்கால்வாசிப் பேரைத் தினம் அதிகாலையில் தாமிபரணி நதியில் குளித்துக்கொண்டிருக்கக் காணலாம். பொழுது விடிந்து சூரியன் உதயமாவதே காலையில் தாமிரபரணியில் ஸ்நானம் செய்வதற்குத்தான் என்பது திருநெல்வேலியாரின் அசையா நம்பிக்கை” என்று குறிப்பிட்டுள்ளார்.

பேரறிஞர் பெ.நா. அப்புசாமி, ‘‘தாமிரபரணி (அல்லது தாம்ரவரணி) திருநெல்வேலி மாவட்டத்தில் ஓடுகிற நதி. அது ஒரு ஜீவ நதி; இரு பருவ மழையுமே அதன் உற்பத்திக்கு மூலம். கோடைக் காலத்திலும், அது சிறிதாக, மெதுவாக மணலும் பாறையுமான படுகையில் பாய்கிறது.

அதன் தலை, காடு அடர்ந்த பொதிகையடி; அகத்திய மாமுனிவரின் மலை; முத்துக்கள் குவிந்துள்ள கொற்கை வரை அது தன் பாதத்தை நீட்டுகிறது. சங்கப் புலவர்கள் பொதிகையையும் கொற்கையையும் பாடியுள்ளனர்.” என்று குறிப்பிட்டுள்ளார். இதுபோன்று இன்னும் ஏராளமான அறிஞர்கள் தாமிரபரணியைப் போற்றிப் புகழ்ந்துள்ளனர்.

பொருநை ஆற்றைப் பற்றிய குறிப்புகளைத் தங்களுடன் இணைந்து பகிர்ந்துகொள்வதில் நான் பெருமை கொள்கிறேன்.

- கே.எஸ். இராதாகிருஷ்ணன்,சென்னை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x