Published : 08 Nov 2019 07:05 AM
Last Updated : 08 Nov 2019 07:05 AM

பெண் பார்வை: மாதாந்திர நிலவு 

நவீனா

பெண்களின் மாதவிடாய் சுழற்சியின்போது அவர்களை ஒதுக்கி வைப்பதும், கோயில்களுக்குள் நுழைவதற்கான அனுமதி மறுப்பதும், வீடுகளுக்குள் அவர்களைத் தள்ளி வைப்பதும் சமூகத்துக்கு மிக இயல்பாகப் பழகிப்போன விஷயம்தான். இதுபோன்ற சடங்குகளைப் பலரும் பெரும் குற்றமாகக் கருதுவது கிடையாது. மாறாக, இந்தச் சடங்குகள் மதம் சார்ந்து நிகழ்வதால், மதநம்பிக்கைகளைச் சிதைக்க விரும்பாத பலரும், இதை நெறி தவறாமல் கடைப்பிடிப்பதையே விரும்புகின்றனர். மாதவிடாயின்போது ஒதுக்கி வைக்கும் இப்படியான சடங்குகளில் ஒன்றான ‘சவூபடி’ நேபாள அரசின் தடையையும் மீறி இன்றளவும் பல பெண்களின் உயிரைக் குடித்துக்கொண்டிருக்கிறது.

சவூபடியின்போது, சரியான காற்றோட்ட வசதி இல்லாத, முற்றிலும் அடைக்கப்பட்ட கூடாரங்களில் மாதவிடாய் சுழற்சியின் நிமித்தம் ஒதுக்கி வைப்பதால், பல பெண்கள் மூச்சுத் திணறலுக்கு ஆளாகி இறந்திருக்கிறார்கள். பாம்பு கடித்தும் மரணம் நிகழ்ந்திருக்கிறது.

இத்தகைய இறப்புகள் நேபாளத்தில் மட்டும் நடப்பதாக நினைத்து, இந்நிகழ்வை கடந்துசெல்ல முடியாதபடி, கஜா புயலின்போது வேதாரண்யத்தில் இவ்வாறு மாதவிடாயின் நிமித்தம் ஒதுக்கி வைக்கப்பட்டதால், மழை வெள்ளத்தில் இறந்துபோன விஜயலட்சுமி எனும் சிறுமியின் மரணம், தமிழகத்தின் நிலையையும் படம்பிடித்துக் காட்டுகிறது. நகர்ப்புறங்களைக் காட்டிலும் கிராமங்களில் மாதவிடாய் குறித்து இன்னும் சற்று முதிர்ச்சியான அணுகுமுறையும் கூடுதல் புரிதலும் தேவை என்பதையும் எடுத்துக்காட்டுகிறது.

இந்தியா உட்பட பல நாடுகளைச் சேர்ந்த பழங்குடியின மக்கள், முற்காலத்தில் பெண்களின் மாதவிடாய் சுழற்சிக்கும் நிலவின் சுழற்சிக்கும் இடையேயான கால ஒற்றுமையைக் கருத்தில் கொண்டு, மாதவிடாயை நிலவு தெய்வமாகவும் இனப்பெருக்கத்தின் தெய்வமாகவும் வழிபட்டுவந்திருக்கின்றனர். கனடா பழங்குடியினரான ‘ஓஜிப்வே’ இனமக்கள் இன்றளவும் தங்கள் மொழியில் இதை ‘மாதாந்திர நிலவு’ எனப் பொருள்படும்படி அழைக்கின்றனர். மாயன் நாகரிகத்திலும் மாதவிடாய் சுழற்சியின்போது, அந்தப் பெண்களைக் கொண்டு நிலவு தேவதைக்கு சிறப்பு பூஜைகள் செய்திருக்கின்றனர்.

ஆண்டுதோறும் ஜூன் மாதம் அசாமில் காமாக்யா தேவி கோயிலில் ‘அம்புபாச்சி மேளா’ எனும் பெயரில் தேவியின் மாதவிடாய், ஒட்டுமொத்த பூகோளத்தின் மாதவிடாயாகக் கருதப்பட்டு பூஜிக்கப்பட்டுவருகிறது. பழங்குடியினக் கலாச்சாரம் தொடங்கி வழிபாட்டு முறை வரை மாதவிடாய் சார்ந்து ஆரோக்கியமான, நேர்மறையான மனப்பான்மையும் அணுகுமுறையும் ஆதிகாலத்தில் இருந்திருப்பதைக் காண முடிகிறது.

இருந்தாலும், இடைக்காலத்தில் ஏற்பட்ட குளறுபடிகளால் சமூகத்தின் அடிப்படைக் கட்டமைப்பான குடும்பங்களில் மாதவிடாய் சார்ந்த எதிர்மறை எண்ணங்கள் மேலோங்கிவிட்டன. மனித இனத்தைத் தவிர சிம்பன்சி, போனபோ வகை பெண் குரங்குகளுக்கும், வேறு பல பெண்பால் விலங்கினங்களுக்கும், மாதவிடாய் சுழற்சியும் உதிரப்போக்கும் நிகழ்கிறது; அவற்றை மற்ற விலங்குகள் ஒதுக்கி வைப்பதில்லை. இயற்கையின்பால் விலங்குகள் கொண்டுள்ள புரிந்துணர்வு என்றும் ஆச்சரியமே!

- நவீனா, ஆங்கில உதவிப் பேராசிரியர்.
தொடர்புக்கு: writernaveena@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x