Last Updated : 07 Nov, 2019 07:17 AM

 

Published : 07 Nov 2019 07:17 AM
Last Updated : 07 Nov 2019 07:17 AM

வாரம் நான்கு நாட்களாக வேலை நாட்களைக் குறைத்தால் என்ன? 

விக்ரமாதித்யனின் புகழ்பெற்ற கவிதைகளில் ஒன்று இது: ‘எட்டு மணி நேரம் வேலை செய்ய வேண்டும்/ எட்டு மணி நேரம் தூங்க வேண்டும்/ எத்தனை மணி நேரம் வாழ வேண்டும்?’ இன்று பிழைப்புக்கான நேரம்தான் நாம் தூங்குவதற்கான நேரத்தையும் வாழ்க்கை நடத்துவதற்கான நேரத்தையும் தீர்மானிக்கிறது. எனக்குத் தெரிந்து நண்பர் ஒருவர் செங்கல்பட்டிலிருந்து தினமும் கடற்கரை ரயில் நிலையத்துக்குப் பயணித்து, பாரிமுனையில் உள்ள அலுவலகத்துக்குச் செல்கிறார்.

வீட்டிலிருந்து ரயில் நிலையம் வருவதற்குக் கால் மணி நேரம். ரயில் பயணம் சுமார் இரண்டு மணி நேரம். ரயிலில் இறங்கிய பின் அலுவலகம் செல்வதற்குப் பத்து நிமிடம். இப்படியே வீடு திரும்புவதற்கும் ஆகும் நேரத்தையும் கணக்கிட்டுக்கொள்ளலாம்.. இதில் சிலசமயம் ரயிலுக்காக அரை மணி நேரத்துக்கும் மேலாகக் காத்திருக்க நேரிடும். ஒட்டுமொத்தமாக ஒரு நாளில் சுமார் ஐந்து மணி நேரம் பயணத்துக்காகச் செலவிடுகிறார்.

அலுவலகத்தில் எட்டு மணி நேரத்துக்கும் மேல் வேலை. தூங்குவது ஏழு மணி நேரம். ஆக, மொத்தம் இருபது மணி நேரம். மீதமுள்ள நான்கு மணி நேரத்தில் குளியல், சாப்பிடுவது என்று இன்ன பிற வேலைகள். இதெல்லாம் போக குடும்பத்தினருடன் செலவழிப்பதற்கு அவருக்கு எவ்வளவு நேரம் இருக்கும்? இந்த லட்சணத்தில் ஞாயிறு வந்தால் இருக்கும் ஒரே விடுமுறை நாள் அது என்பதால், வீட்டுக்காகச் செய்துமுடிக்க வேண்டிய வேலைகள் குவிந்துகிடக்கும். இதற்கிடையே ஓய்வு நாளான அன்று எங்கே ஓய்வெடுப்பது? இப்படி ஒருவரல்ல, ஒரு சமூகத்தின் பெரும் கூட்டம் அன்றாடம் ஓடிக்கொண்டிருக்கிறது என்றால், அது எவ்வளவு பெரிய கொடுமை?

வழிகாட்டுகிறது மைக்ரோசாஃப்ட்

ஜப்பானில் ‘மைக்ரோசாஃப்ட்’ நிறுவனம் நடத்தியுள்ள பரிசோதனை முயற்சி நம் கவனத்தை ஈர்க்கிறது. ஜப்பானில் உள்ள தன் கிளைகள் அத்தனையிலும் ‘மைக்ரோசாஃப்ட்’ நிறுவனம் வாரம் நான்கு நாட்கள் மட்டும் வேலைசெய்தால் போதும் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் ‘வேலை-வாழ்க்கை தேர்வு சவால் கோடை 2019’ என்ற பெயரில் இந்தத் திட்டத்தை ‘மைக்ரோசாஃப்ட்’ நிறுவனம் செயல்படுத்தியிருக்கிறது.

இதன் அடிப்படையில், ஜப்பானில் உள்ள அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் அனைவருக்கும் ஏற்கெனவே உள்ள இரண்டு நாட்கள் வார விடுமுறையுடன் கூடுதலாக வெள்ளிக்கிழமையும் விடுமுறை வழங்கப்பட்டது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், அந்தக் கூடுதல் விடுமுறை நாளுக்கான ஊதியத்தில் அவர்கள் கைவைக்கவில்லை என்பதுதான்.

ஆகஸ்ட் மாத முடிவில் அந்தப் பரிசோதனைத் திட்டத்தைப் பரிசீலித்துப் பார்த்ததில் நிறுவனத்தின் உற்பத்தித் திறன் முன்பைவிட 40% அதிகரித்திருப்பது தெரியவந்திருக்கிறது. வாரம் ஒரு நாள் கூடுதல் விடுமுறை கிடைத்ததால் வேலை நேரத்தில் வெளியே செல்வது 25% குறைந்திருக்கிறது. கூடவே, மின்சாரப் பயன்பாடும் 23% குறைந்திருக்கிறது. மேலும், காகிதத்தை அச்சிடுவது கிட்டத்தட்ட 60% குறைந்திருக்கிறது.

இத்திட்டத்துக்கு அந்நிறுவன ஊழியர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. 92% ஊழியர்கள் அந்தத் திட்டத்தை விரும்புவதாகத் தெரிவித்திருக்கிறார்கள். “குறைந்த நேரம் வேலை பாருங்கள், நன்றாக ஓய்வெடுங்கள், நிறைய கற்றுக்கொள்ளுங்கள்” என்று கூறியிருக்கிறார் ‘மைக்ரோசாஃப்ட்’ நிறுவனத்தின் ஜப்பான் தலைவர் டகுயா ஹிரனோ. “20% குறைவான வேலை நேரத்தில் எப்படி அதே விளைவுகளைக் கொண்டுவர முடியும் என்பதைப் பற்றி ஊழியர்கள் சிந்திக்க வேண்டும் என்று விரும்புகிறேன்” என்றும் அவர் கூறுகிறார்.

ஜப்பானைப் பொறுத்தவரை உலகிலேயே அதிக நேரம் வேலை செய்பவர்களைக் கொண்ட நாடு அதுதான். மாதம் 80 மணி நேரம் வரை கூடுதல் வேலையைத் தங்கள் ஊழியர்களை ஜப்பானிய நிறுவனங்கள் செய்ய வைக்கின்றன. அதே நேரத்தில் ஜி-7 நாடுகளிலேயே குறைவான உற்பத்தித் திறன் கொண்ட நாடும் ஜப்பான்தான். இந்தச் சூழலில்தான் ‘மைக்ரோசாஃப்ட்’டின் திட்டம் ஜப்பான் சமூகத்தில் பெரும் ஈர்ப்பை உண்டாக்கியிருக்கிறது. வாரம் நான்கு நாள் வேலைத் திட்டத்தைப் பல நிறுவனங்கள் பரிசோதிக்கத் தொடங்கியிருக்கின்றன.

முன்னோடிகள்

வாரம் நான்கு நாள் வேலைத் திட்டத்தைப் பொறுத்தவரை ‘மைக்ரோசாஃப்ட்’டுக்கு முன்னோடி கள் இருக்கிறார்கள் என்பதையும் இங்கே சொல்ல வேண்டும். 2018-ல் நியூஸிலாந்தைச் சேர்ந்த பெர்பெச்சுவல் கார்டியன் என்ற நிறுவனம், தனது 240 ஊழியர்களிடையே இந்த நான்கு நாள் வேலைத் திட்டத்தைச் செயல்படுத்தியது. உற்பத்தித்திறன் 45% அதிகரித்ததுடன் ஊழியர்களின் மனஅழுத்தமும் கணிசமான அளவு குறைந்தது. இதன் காரணமாக இந்தத் திட்டத்தை நிரந்தரமாக அந்த நிறுவனம் நீட்டித்திருக்கிறது.

அரசின் சேவைத் துறைகளில் இத்திட்டம் கடினம் என்றாலும், அரசாங்கங்களும்கூட இப்படி ஒரு திட்டத்தை யோசிக்கின்றன. காம்பியா அரசு தன்னுடைய ஊழியர்களுக்கு ஆறு ஆண்டுகளுக்கு முன்பே இப்படி ஒரு திட்டத்தைச் செயல்படுத்தத் தொடங்கியதை ஓர் உதாரணமாகச் சொல்லலாம்.

உலகம் இந்தப் பக்கமாகப் போனால், நாம் அந்தப் பக்கமாகப் போவோம் என்பதுதானே இன்றைய இந்திய ஆட்சியாளர்களின் வழக்கம். உலகம் வாரத்துக்கு நான்கு நாட்களை யோசிக்கத் தொடங்கும்போது, இந்தியாவில் வேலை நேரத்தை எட்டு மணி நேரத்திலிருந்து ஒன்பது மணி நேரம் ஆக்குவது குறித்த சட்ட முன்வரைவை இயற்றியுள்ளது தொழில் துறை அமைச்சகம்.

நூறு ஆண்டுகளுக்கு முன்பு பெரும்பாலான வளர்ந்த நாடுகளில் வேலை நேரம் வாரத்துக்கு 48 மணி நேரமாக இருந்தது இப்போது அது 38 மணி நேரமாக மாறியிருக்கிறது. நம்மிடம் குறைவாக வேலை செய்து, அதிக நேரம் நம் வாழ்க்கையை மகிழ்ச்சியாக நடத்துவதற்கான தொழில்நுட்பம் இருந்தாலும் நாம் நமது வேலை நேரத்தை அதிகப்படுத்துவதிலேயே குறியாக இருக்கிறோம். இந்த நான்கு நாள் வேலைத் திட்டமானது வேலையைத் தவிர்ப்பதற்கானது அல்ல; வேலையை ஒரு சுமையாக ஆகிவிடாமல் வாழ்க்கைக்கும் வேலைக்குமான ஒரு ஆரோக்கியமான உறவை நீட்டிப்பதற்காகவே இது.

எந்த வகையிலும் இது பொருளாதார வளர்ச்சிக்கு எதிரானது அல்ல. ‘ரிவ்யு ஆஃப் எகனாமிக்ஸ் அண்ட் ஸ்டாடிஸ்டிக்ஸ்’ இதழ் நடத்திய சமீபத்திய ஆய்வு, ‘அதிக நேரம் தூங்குபவர்களே அதிகம் சம்பாதிக்கிறார்கள்’ என்று தெரிவிக்கிறது. அதாவது, பணிக்கு வெளியே உள்ள நேரம்தான் நம்மை அதிகம் சிந்திக்கவும் புதுப்பித்துக்கொள்ளவும் உதவுகிறது. அப்படி நேரம் ஒதுக்குபவர்கள்தான் பணிகளிலும் ஜொலிக்கிறார்கள். பொருளாதார வளர்ச்சி தொடர்பில் அதிகமாகவே பேசும் இந்தியா இதுகுறித்து யோசிக்கலாம்; குறைந்தபட்சம் தனியார் நிறுவனங்களேனும் இதை ஆரம்பித்துவைக்கலாம்.

- ஆசை,
தொடர்புக்கு: asaithambi.d@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x