Published : 05 Nov 2019 08:27 AM
Last Updated : 05 Nov 2019 08:27 AM

பிரெக்ஸிட் விவகாரத்துக்கு முடிவுகட்டுமா பிரிட்டன் தேர்தல்? 

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான ஒப்பந்த இழுபறியில் சிக்கிக்கொண்டிருக்கும் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்ஸன், இந்த நேரத்தில் டிசம்பர் 12 அன்று தேர்தல் நடக்கும் என்று அறிவித்திருப்பது ஒருவகையில் இந்த விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்றே தோன்றுகிறது.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகுவதான பிரெக்ஸிட் முடிவை நிறைவேற்றுவதற்கான வாக்கு பலத்தைப் பெறுவதற்கான முயற்சியாகவும், பிரிட்டன் அரசியலில் தன்னுடைய இடத்தை வலுப்படுத்திக்கொள்ளும் வகையிலுமே தேர்தல் அறிவிப்பை ஜான்ஸன் வெளியிட்டிருக்கிறார். என்றாலும், இழுத்துக்கொண்டே செல்லும் பிரெக்ஸிட் விவகாரத்தில் பிரிட்டன் மக்களின் இன்றைய மனநிலை என்ன என்பதையும் அது துலக்கமாக்கிவிடும்.

ஐரோப்பாவுடனான உறவை பிரிட்டன் முறித்துக்கொண்டால் என்னென்ன பின்விளைவுகள் ஏற்படும் என்பது கடந்த முறை தேர்தல் நடந்த 2017 ஜூன் மாதத்தில் அவ்வளவு தெளிவாகத் தெரிந்திருக்கவில்லை. அதன் பிறகு, பிரெக்ஸிட் விவகாரம் அப்படியும் இப்படியும் அசையாமல் முட்டுக்கட்டை போட்டதுபோல் கிடக்கிறது. ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் நீடிப்பது அல்லது வெளியேறுவது தொடர்பாக அந்நாட்டின் இரு பெரும் கட்சிகள் மத்தியில் தெளிவான முடிவு இல்லை.

பிரிட்டன் தனித்திருக்க வேண்டும் என்ற குரலும் வலதுசாரித்தன்மையும் ஓங்குவதுபோலத் தோன்றும் சூழலை எதிர்கொள்ளும் வகையிலேயே டோரிகளின் கன்சர்வேட்டிவ் கட்சி ஜான்ஸனைப் பிரதமர் பதவி நோக்கி நகர்த்தியது. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற்றும் வலுவான குரலாகத் தன்னைக் கட்டமைத்துக்கொண்டிருக்கிறார் ஜான்ஸன்.

இதற்கு மாறாக, தாராளவாத ஜனநாயகக் கட்சியினரும் ஸ்காட்டிஷ் தேசியக் கட்சியும், ‘பிரிட்டன் தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் நீடிக்க வேண்டும்’ என்ற தரப்பில் உறுதியாக உள்ளனர். ஆனால், பிரதான எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியைப் பொறுத்தவரை அவர்களின் நிலைப்பாடு வெளியே துல்லியமாகத் தெரியவில்லை என்றாலும், அக்கட்சியின் பெரும் தலைவரான ஜெர்மி கார்பினின் இடதுசாரிக் கொள்கையானது ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதான அக்கறைகளுக்கு நெருக்கமாகத்தான் இருக்கின்றன.

ஜான்ஸனின் ஒப்பந்தத்துக்கு கார்பின் காட்டும் எதிர்ப்பானது தொழிலாளர் உரிமைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்றவற்றின் அடிப்படையிலானது. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறிவிட்டால், அதற்குப் பிறகு அமெரிக்காவுடனான வர்த்தக உறவின் கீழ் பிரிட்டனின் தேசிய சுகாதார சேவைக்கு என்ன ஆகுமோ என்ற அச்சமும் கார்பினிடம் இருக்கிறது. இந்த விவகாரங்களெல்லாம் தேர்தல் பிரச்சாரத்தில் முக்கிய இடம்பெறும்.

எப்படியும் கடந்த மூன்று ஆண்டுகளாக நீடித்த தாங்க முடியாத நிச்சயமற்ற தன்மைக்கு ஒரு முடிவை இத்தேர்தல் மூலம் கொண்டுவருவது பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய குடிமக்களுக்கும் வர்த்தகத்துக்கும் இன்றியமையாதது. பிரெக்ஸிட்டால் பிரிட்டனுக்கு நன்மை ஏதும் இல்லை என்றே உலகம் கருதுகிறது என்றாலும், பிரிட்டிஷார் என்ன நினைக்கிறார்கள் என்பதை இத்தேர்தல் வெளிப்படுத்திவிடும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x