Published : 05 Nov 2019 08:12 AM
Last Updated : 05 Nov 2019 08:12 AM

ராஜதானி எக்ஸ்பிரஸ்: கேரளம் அழைக்கிறது...

புவி

உள்ளடக்கம், வடிவமைப்பு, புகைப்படங்கள், ஓவியங்கள் என்று ஒவ்வொரு விஷயத்திலும் சர்வதேச இதழ்களோடு போட்டிபோடுகிறது ‘கேரளா காலிங்’. தமிழ்நாடு அரசு வெளியிடும் ‘தமிழரசு’ இதழ்போல கேரள அரசு வெளியிட்டுவரும் ஆங்கில மாத இதழ் இது.

காந்தியின் 150-வது ஆண்டு சிறப்பிதழாக வெளியாகியிருக்கும் அக்டோபர் மாத இதழில் ‘ஓப்பன்’ இதழின் நிர்வாக ஆசிரியர் உல்லேக் என்.பி., காந்தியச் செயற்பாட்டாளர் சி.கே.தாமஸ் சுங்கத், தத்துவப் பேராசிரியர் டக்ளஸ் ஆலன், பத்திரிகையாளர் எஸ்.ஆனந்த் ஆகியோரின் முக்கியமான கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. சுற்றுச்சூழல், மருத்துவம் என்று காந்தியின் பல்துறை பங்களிப்புகளைப் பற்றி துறைசார்ந்த நிபுணர்களால் கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. காந்தியின் 150-வது ஆண்டுவிழாவையொட்டி வெளிவந்த முக்கியமான சிறப்பிதழ்களில் ‘கேரளா காலிங்’கும் ஒன்று.

காந்தி சிறப்பிதழ் மட்டுமல்ல, ‘கேரளா காலிங்’ இதழ்கள் ஒவ்வொன்றுமே அப்படிப் பாதுகாக்கப்பட வேண்டிய அவசியத்தை உணர்த்துவன. இயற்கைப் பேரிடர்களிலிருந்து கேரளம் மீண்டுவருவதைப் பற்றிய கடந்த மாத சிறப்பிதழ்கள், மாவட்டவாரியான மறுகட்டமைப்புப் பணிகளைத் தெரிவிக்கின்றன என்றாலும் உணவு, உடை, கலாச்சாரம், நடனம், பண்டிகைகள் என்று கேரளக் கலாச்சாரத்தைக் கொண்டாடும் இதழ்களாகவும் அமைந்திருந்தன.

ஆங்கிலத்தில் வெளிவரும் ‘கேரளா காலிங்’ மட்டுமின்றி மலையாளத்தில் வெளிவரும் ‘சமகாலிக ஜனபதம்’ மாத இதழும் அதே உள்ளடக்கக் கவனத்தோடும் அழகுணர்ச்சியுடனும் தயாரிக்கப்படுகிறது. சமகாலிக ஜனபதத்தில் அரசுத் திட்டங்கள் தொடர்பான செய்திக் கட்டுரைகள் மட்டுமல்லாது இலக்கியப் பக்கங்களுக்கும் சிறப்பிடம் கொடுக்கப்படுகிறது.

மாதவிக்குட்டி போன்ற முக்கிய எழுத்தாளுமைகளைப் பற்றி நீண்ட கட்டுரைகள் இடம்பெறுகின்றன. புத்தக விமர்சனங்களுக்குத் தனிப்பக்கம் ஒதுக்கப்படுகிறது. மூத்த பத்திரிகையாளர் டி.ஜே.எஸ்.ஜார்ஜ் போன்றவர்களின் மிக விரிவான நேர்காணல்கள் இடம்பெறுகின்றன.

இவ்விரண்டு இதழ்களின் பழைய இதழ்கள் கேரள அரசின் இணையதளத்தில் படிக்கக் கிடைக்கின்றன. அரசாணைகள் உடனுக்குடன் அத்தளத்தில் பதிவேற்றப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. வெகு நீண்ட காலமாக அரசாணைகள் பக்கத்தையே முறையாகப் பராமரிக்காத தமிழக அரசிடம் ‘தமிழரசு’ இதழை இந்தத் தரத்தில் எதிர்பார்ப்பதெல்லாம் கொஞ்சம் அதிகம்தான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x