Published : 08 Jul 2015 10:38 AM
Last Updated : 08 Jul 2015 10:38 AM

ஆலயப் பிரவேசப் போராட்டம்

இந்து சமயத்தில் தீண்டாமைக்கு இடமில்லை என்று சமய இலக்கியங்களும் சான்று பகர்கின்றன.

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆலயப் பிரவேச நிகழ்வு நடைபெற்று, இன்று ஜூலை 8-ல் 76 ஆண்டுகள் நிறைவுபெறுகின்றன. இந்த ஆலயப் பிரவேசம் நடைபெறுவதற்கு முன்னதாக இதேபோன்று திருவிதாங்கூர் சமஸ்தானத்திலும் நடைபெற்றது.

அதாவது, திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் திவான் சி.பி.ராமசாமி அய்யரின் தலைமையிலான ஒரு ஆய்வுக் குழுவின் பரிந்துரையின்பேரில் அப்போதைய மன்னர் சித்திரைத் திருநாள் என்ற பலராம வர்மா தனது நிர்வாகத்தின் கீழ் இயங்கிவந்த சுமார் 2,000-த்துக்கும் மேற்பட்ட இந்துக் கோயில்களை 1936 நவம்பர் 12-ம் நாள் தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் திறந்துவிட ஆணையிட்டார்.

திருவிதாங்கூர் சமஸ்தானம் என்பது ஒரு தனிப்பட்ட மன்னராட்சியின்கீழ் செயல்பட்டு வந்த ஒரு நாடு. தனது நாடு சம்பந்தப்பட்ட எந்த ஒரு உத்தரவையும் தடையின்றிப் பிறப்பிக்க மன்னருக்கு அதிகாரமிருந்தது. ஆனால், மதுரை அப்படியல்ல. இது பலம் பொருந்திய ஆங்கிலேயரின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த பகுதி. இங்கு எந்த ஒரு செயலையும் குறிப்பாக சமூகம், சமயம் போன்ற காரியங்களில் எதையும் அவ்வளவு எளிதாகச் செய்துவிட முடியாது. வலிமையான சட்டங்கள், அதிகாரமிக்க நீதிமன்றங்கள், திறமையான நிர்வாகம் என எல்லாமும் ஆங்கிலேயரிடம் இருந்துவந்தன. இச்சூழ்நிலையில், காந்தியடிகளின் தலைமையின் கீழ் விடுதலைப் போராட்ட இயக்கங்களும் நடைபெற்றுவந்தன. ஆங்கிலேயர்கள் மிக விழிப்புடன் நிலைமையைக் கையாண்டுவந்தனர்.

‘யங் இண்டியா’-வில் தீண்டாமை ஒழிப்பு

1932-ம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட புணே ஒப்பந்தத்துக்குப் பிறகு, அகில இந்திய ஹரிஜன சேவக சங்கம் ஆரம்பிக்கப்பட்டு, காந்தியடிகளின் வழிநடத்துதலின்பேரில், தாழ்த்தப்பட்ட மக்களுக்கான முன்னேற்றப் பணிகள் தேசம் முழுவதும் வெகு விமர்சையாக நடைபெற்றுவந்தன. இதில் தீண்டாமை ஒழிப்பு முக்கிய இடம்பெற்றது. தீண்டாமை ஒழிப்பின் அவசியம்பற்றி ஆரம்பம் முதலே தனது ‘யங் இண்டியா’ பத்திரிகையில் காந்தி ஏராளமாக எழுதிவந்தார். ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக இழைக்கப்பட்டுவந்த, பல சமூகக் கொடுமைகளைத் தாங்கிக்

கொண்டிருந்தவர்களின் முன்னேற்றத்துக்காகப் பாடுபட உறுதிபூண்டார். இந்தியாவில் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக முன்னேற்றத் திட்டங்கள் நடைபெறச் செய்தார். அத்திட்டங்களில் ஒன்றுதான், ஆலய நுழைவுப் போராட்டம்.

அய்யருக்கு ஆசான் ராஜாஜி

தமிழ்நாட்டில் தீண்டாமை ஒழிப்பு உள்ளிட்ட ஹரிஜன முன்னேற்ற வேலைகளுக்குத் தலைமை ஏற்குமாறு மதுரை அ. வைத்தியநாத அய்யரை காந்தியடிகள் கேட்டுக்கொண்டார். காந்தியடிகளின் வேண்டுகோளைச் சிரமேற்கொண்டு தாழ்த்தப்பட்ட மக்களுக்காக அவரும் பாடுபடலானார்.

வழக்கறிஞர் தொழில் மூலம் கிடைத்த வருமானம் அனைத்தையும் தனது பணிகளுக்காகச் செலவு செய்தார். 1934-ல் ஹரிஜன நல நிதி திரட்டுவதற்காக காந்தியடிகள் தமிழ்நாட்டில் பயணம் மேற்கொண்டபோது, அதிகப்படியான நிதி வசூல் கிடைப்பதற்குப் பாடுபட்டார். தீண்டாமை ஒழிப்புப் பணியில் அய்யருக்கு ஆசானாக விளங்கியவர் ராஜாஜி.

சமய இலக்கிய மேற்கோள்கள்

தமிழ்நாடு மற்றும் தமிழ் மக்கள் மீது அளவற்ற அன்பு கொண்டிருந்தார் காந்தியடிகள். தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்துக்கான வேலைகளைத் திறம்படச் செய்து காந்தியடிகளின் நன்மதிப்பைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டுமென, இவ்விரு தலைவர்களும் விரும்பினார்கள். இதன் வெளிப்பாடாக அமைந்ததுதான் தமிழ்நாட்டில் ஆலய நுழைவுப் போராட்டம்.

தீண்டாமை ஒழிப்பு வேலைகளின் ஒரு அங்கம் ஆலய நுழைவுப் போராட்டம். ஆலய நுழைவு உரிமை வேண்டி சில ஒடுக்கப்பட்ட சமூகங்கள் இதற்கு முன்பும் பல போராட்டங்களை நடத்தியிருந்தன. அப்போராட்டங்கள் கலவரங்களிலும் தோல்விகளிலும்தான் முடிந்தன. இவற்றையெல்லாம் மனதில் கொண்டுதான், மக்கள் ஆதரவுபெற்ற இயக்கத்தின் மூலமாகத்தான் சமூகப் புரட்சியை ஏற்படுத்த முடியுமென ராஜாஜியும் அய்யரும் எண்ணினார்கள். ஆலய நுழைவுப் போராட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்றினார்கள். அனைத்துச் சமூகங்களையும் இப்போராட்டத்தில் பங்கெடுக்கச் செய்தார்கள்.

கோயில் நகரங்களில் தெருத் தெருவாகச் சென்று அய்யர் பிரச்சாரம் செய்தார். இந்து சமயத்தில் தீண்டாமைக்கு இடமில்லை என்பதைச் சமய இலக்கியங்களை மேற்கோள்காட்டி வாதாடினார். சர்தார் வல்லபபாய் பட்டேல் உட்பட பல தேசத் தலைவர்களை தமிழ்நாட்டுக்கு வரவழைத்து பிரச்சாரத்தில் ஈடுபடுத்தினார். பொதுமக்களின் ஆதரவைத் திரட்டினார். எல்லா நகரசபைகளிலும் ஆலயப் பிரவேசத்துக்கு ஆதரவாகத் தீர்மானங்கள் இயற்றப்பட்டன.

அப்போதைய மாகாண முதலமைச்சரான ராஜாஜி, அய்யரை இயக்கினார். அய்யரும் இயங்கினார். சமூகம், சட்டம், நீதிமன்றம் மற்றும் நிர்வாகம் ஆகியவற்றின் சூழ்நிலைகளை நன்கு ஆராய்ந்து, இவ்விரு தலைவர்களும் செயல்பட்டனர். ஏனெனில், இப்போராட்டத்துக்குக் கடுமையான எதிர்ப்பும் நிலவிவந்தது. நில மானிய முறைக்கு ஆதரவான மனோபாவம் கொண்ட சிலர், தாழ்த்தப்பட்ட மக்கள் சம உரிமை பெறுவதை ஏற்றுக்கொள்ள முடியாதவர்களாக இருந்தனர்.

நடேச அய்யரின் எதிர்ப்பு

சனாதனிகளின் தலைவரான மதுரையைச் சார்ந்த ‘லா பாயிண்ட்’ நடேச அய்யர் ஆலய நுழைவுப் போராட்டத்தைக் கடுமையாக எதிர்த்தார். ஆனால், இந்தப் போராட்டத்தை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இத்தருணத்தில் ராஜாஜியும் அய்யரும் உலக சூழ்நிலைகளை நன்கு அலசி ஆராய்ந்து, நிதானமாக யோசித்து, ஒரு முடிவை மேற்கொண்டனர்.

அதன்படி 1939 ஜூலை 8-ம் நாள் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஐந்து பேருடன், நாடார் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரையும் அழைத்துக்கொண்டு, அய்யர் தனது தலைமையில் மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் ஆலயப் பிரவேசம் செய்துவைத்தார். இது ஒரு ‘மிராக்கிள்’ (அதிசயம்) என்று அய்யரைப் பாராட்டி, காந்தி கடிதம் எழுதினார்.

அஹிம்சை முறையில் நடத்தப்பட்ட ‘செயற்கரிய செயல்’ இது. இதற்காக ராஜாஜியும் அய்யரும் பட்ட பாடுகள், அனுபவித்த கஷ்டங்கள் ஏராளம். இத்தருணத்தில் குறிப்பிடத்தக்க மற்றுமொரு செய்தி யாதெனில், ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற ஆலய நுழைவுப் போராட்டத்தை ஆங்கிலேயர்கள் ஆதரித்தார்கள்.

ராஜாஜி போன்ற தலைவர்கள் நல்லதுதான் செய்வார்கள் என ஆங்கிலேயர்கள் நம்பினார்கள். ஆலயப் பிரவேசத்துக்கு ஆதரவான சட்டங்கள், சென்னை மாகாண சட்டமன்றத்தில் இயற்றப்பட்டபோது, மாநில ஆளுநரும், மத்திய தலைமை ஆளுநரும் உடனடியாகத் தங்களது ஒப்புதல்களைத் தெரிவித்தார்கள்.

‘அனைவரும் அர்ச்சகர்கள் ஆகலாம்’ என்ற தமிழ்நாடு அரசின் ஆணை உச்ச நீதிமன்றத்தில் நிம்மதியாக ஓய்வெடுத்துக்கொண்டிருக்கிறது’ செயல்படுத்தத் தலைவர்கள் இல்லை என்பதை நினைத்துப் பார்க்கிறபோது, ராஜாஜியும் அய்யரும் மிக உயர்வான இடத்தில் வைக்கப்பட்டு போற்றப்பட வேண்டியவர்களாகக் காட்சியளிக்கிறார்கள்!

- பி.எஸ். சந்திரபிரபு, பேராசிரியர்,
‘அமரர் அ. வைத்தியநாத அய்யர்’,
‘மதுரை காந்தி: என்.எம்.ஆர்.சுப்பராமன்’ முதலான நூல்களின் ஆசிரியர்,
தொடர்புக்கு: pschandraprabhu@yahoo.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x