Published : 31 Oct 2019 08:25 AM
Last Updated : 31 Oct 2019 08:25 AM

எது சுஜித்துக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி?

திருச்சி மாவட்டம், நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து இரண்டு வயதுச் சிறுவன் சுஜித் உயிரிழந்தது ஒட்டுமொத்த தமிழகத்தையும் துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது. தேசியப் பேரிடர் மீட்புப் படையும் மாநிலத்தின் அதன் இணை அமைப்புகளும் குழந்தையை மீட்க தீவிரமான முயற்சிகளை அக்கறையுடன் எடுத்தும் முடிவு சோகமாகிவிட்டது.

நிலத்தடி நீர்மட்டம் ஆழமாகச் சென்றுவிட்டதாலும், பாசனத்துக்கு நிலத்தடி நீரை எடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாலும், அனேகமாக எல்லா மாநிலங்களிலும் ஆழ்துளைக் கிணறுகளை அமைப்பது தொடர்கிறது. அப்படி தண்ணீர் கிடைக்காத கிணறுகளைக் கைவிட நேர்வதும், அவற்றில் குழந்தைகள் தவறி விழுவதும் தொடர்கிறது. இப்படி விழும் குழந்தைகளை மீட்பதற்கு இறுதிசெய்யப்பட்ட செய்முறைகளும் தொழில்நுட்ப உத்தியும் வரையறுக்கப்படவில்லை.

உச்ச நீதிமன்றம் வகுத்தளித்த வழிகாட்டு நெறிகளைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு 2015-ல் ஊராட்சிகள் சட்டப்படி, ஆழ்துளைக் கிணறுகளைத் தோண்டுவதை வரைமுறைப்படுத்தும் பாதுகாப்பு வழிமுறைகளை அறிவுறுத்தியிருக்கிறது. ‘ஆழ்துளைக் கிணற்றின் உரிமையாளர், கைவிடப்பட்ட நிலையில் இருக்கும் கிணற்றில் களிமண், மணல், கற்கள் ஆகியவற்றைக் கலந்து உட்செலுத்தி, அடி ஆழத் தரைமட்டம் வரையில் அதை இடைவெளியில்லாமல் நிரப்பி மூட வேண்டும்’ என்கிறது அந்த வழிகாட்டல். இந்த வழிகாட்டுதல் முறையாகப் பின்பற்றப்பட வேண்டும் என்றால், இதை நிறைவேற்றும் பொறுப்பை அந்தந்தப் பகுதி உள்ளாட்சி மன்றங்களிடம்தான் ஒப்படைக்க வேண்டும்.

விவசாயம் செய்யத் தண்ணீருக்காகக் கடன் வாங்கிக் கிணறு தோண்டும் ஏழை விவசாயிகளுக்கு, பயன் தராத கிணற்றை மீண்டும் செலவுசெய்து மூட அவர்களுடைய பொருளாதாரம் இடம் கொடுக்காது. இதற்காக அவர்களை முழுமையாகப் பொறுப்பிலிருந்து விடுவித்துவிட வேண்டும் என்ற எண்ணமும் தேவை இல்லை. கிணறு தோண்டுவதற்கான அனுமதியை வரன்முறைப்படுத்துவதன் ஒரு பகுதியாக ஏற்கெனவே சம்பந்தப்பட்டவருக்கு / சம்பந்தப்பட்ட இடத்தில் கைவிடப்பட்ட கிணறுகள் இருக்கின்றனவா; அப்படியிருந்தால், உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக அவை மூடப்பட்டுவிட்டனவா என்று உறுதிசெய்யும் சான்றிதழை தாக்கல்செய்யும் முறையைக் கொண்டுவரலாம். கைவிடப்படும் ஆழ்துளைக் கிணறுகளை மழைநீர் சேகரிப்புத் திட்டத்துக்குப் பயன்படுத்தலாம் என்று புதிய யோசனை கூறப்பட்டுள்ளது. அப்படி மாற்றுவது தொடர்பிலும்கூட யோசிக்கலாம். எப்படியாகினும் இது அரசும் இணைந்து ஏற்க வேண்டிய பொறுப்பு. இனியாகிலும் இந்த விஷயத்தில் உரிய அக்கறை காட்டப்பட வேண்டும்.

தமிழக அரசு நிர்வாகம் சிறுவன் சுஜித் மீட்பு விஷயத்தில் பெரிய அக்கறையை வெளிப்படுத்தியது பாராட்டுக்குரியது. அதேசமயம், நம்முடைய அக்கறைகள் எந்த அளவுக்கு வெற்றிகரமானவையாக மாறுகின்றன என்பது தொடர் காரியங்களாக அவை பரிமளிப்பதில்தான் இருக்கின்றன.

உள்ளபடி, பேரிடர் மேலாண்மைக் கட்டமைப்பு எந்த அளவுக்கு நம் மாநிலத்தில் முழு வடிவில் இருக்கிறது, பேரிடர்களுக்கு எந்த அளவுக்கு முன் திட்டமிடல்களுடன் இருக்கிறோம் போன்ற கேள்விகளை இந்தச் சம்பவமும் எழுப்பாமல் இல்லை. அந்தக் கேள்விகளுக்குப் பதில் தேடுவதே சுஜித்துக்குச் செலுத்தும் உண்மையான அஞ்சலி!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x