Published : 29 Oct 2019 08:08 AM
Last Updated : 29 Oct 2019 08:08 AM

மாநிலத் தலைவர்கள் கையில்தான் மாநிலங்கள்! 

செல்வ புவியரசன்

அறுதிப் பெரும்பான்மையுடன் மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சியில் அமர்ந்ததும், இந்தியா முழுவதும் அக்கட்சியின் ஆளுகைக்குள் அடங்கிவிட்டதான ஒரு தோற்றம் உருவாகியிருந்தது. கூடவே, டெல்லியில் இருந்தபடியே கட்சித் தலைவர்கள் எல்லா மாநிலங்களையும் இயக்கிவிட முடியும் என்பதான பாவனையும்கூட உருவாகிவந்தது.

மாநிலங்களில்தான் இந்தியா இருக்கிறது; மாநிலங்களின் வழியாகத்தான் அது தீர்மானிக்கப்படுகிறது என்பதை மகாராஷ்டிர - ஹரியாணா தேர்தல்கள் நிரூபித்திருக்கின்றன என்று சொல்லலாம். இப்படிச் சொல்லும்போது, 2019 மக்களவைத் தேர்தலுக்கு முன்பு நடந்த ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேச தேர்தல் முடிவுகளையும் கூடவே நினைவுக்குக் கொண்டுவரலாம்.

தேசிய அளவில் பிரதமர் நரேந்திர மோடிக்கு இணையான தலைவராக ஒருவர் மக்கள் மத்தியில் இன்று உருவெடுக்கவில்லை; அவருடைய செல்வாக்கு நாடு முழுக்க விரவியிருக்கிறது என்றபோதிலும், அவருக்கான மக்கள் ஆதரவு அப்படியே மாநிலத் தேர்தல்களுக்கும் விஸ்தரிக்கப்பட்டுவிடுவதில்லை என்பதையே இம்முடிவுகள் சொல்கின்றன.

பாஜக வழியாக மட்டும் அல்லாமல், காங்கிரஸ் வழியாகவும் இதே விஷயத்தைப் புரிந்துகொள்ளலாம். மக்களவைத் தேர்தலுக்குப் பின் காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து ராகுல் காந்தி விலகி, இரு மாதங்கள் வரை அக்கட்சியின் தலைமைப் பதவி காலியாக இருந்தது. அடுத்த தலைவராக வேறு யாரும் பொறுப்பெடுத்துக்கொள்ள முன்வராத நிலையில், ராகுல் காந்தியின் தாய் சோனியா காந்தியே மீண்டும் தலைவர் பதவிக்கு வந்தார்.

இந்தக் குழப்ப நிலை நாடு முழுக்க அக்கட்சியை நிலைகுலையச் செய்தது. பல தலைவர்கள் வெளியேறினர். குறிப்பாக, தேர்தல் நடந்த மாநிலங்களில் அக்கட்சித் தலைவர்கள் குறிவைத்து ஆளுங்கட்சிக்குத் தூக்கப்பட்டனர். பெயரளவுக்கே தேர்தல் பிரச்சாரத்தில் தன்னை இணைத்துக்கொண்டது தேசியத் தலைமை.

மோடி - அமித் ஷா ஜோடி இரு மாநிலங்களிலும் 50 கூட்டங்களில் பங்கேற்ற நிலையில், வெறும் 6 கூட்டங்களில் மட்டுமே பங்கேற்றார் ராகுல். சோனியா, பிரியங்கா இருவரும் தலைகாட்டவே இல்லை. மாநிலத் தலைவர்கள்தான் முழு மூச்சில் தேர்தல் பணியாற்றினார்கள். என்றாலும், காங்கிரஸ் தன்னுடைய இடத்தை மேம்படுத்திக்கொண்டிருக்கிறது. மகாராஷ்டிரத்திலும் ஹரியாணாவிலும் கடந்த சட்டமன்றத் தேர்தலைக்காட்டிலும் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் அதிக இடங்களைக் கைப்பற்றியிருக்கின்றன.

மகாராஷ்டிரத்தில் மொத்தம் உள்ள 288 இடங்களில் பாஜக 105 இடங்களிலும், சிவசேனை 56 இடங்களிலும் வென்றிருக்கிறது. கடந்த 2014 சட்டமன்றத் தேர்தலில் பாஜக 122 தொகுதிகளையும், சிவசேனை 63 இடங்களையும் கைப்பற்றியிருந்தன. மக்களவைத் தேர்தலில் சற்றேறக்குறைய 28% வாக்குகளைப் பெற்ற பாஜக, சட்டமன்றத் தேர்தலில் 25.6% வாக்குகளையே பெற்றிருக்கிறது.

கடந்த மக்களவைத் தேர்தலோடு ஒப்பிடுகையில் 23.29% வாக்குகளைப் பெற்ற சிவசேனை, இந்தத் தேர்தலில் 16.4% வாக்குகள் மட்டுமே பெற்றிருக்கிறது. காங்கிரஸ் கட்சி, மக்களவைத் தேர்தலில் பெற்ற அதே 16% வாக்குகளைத் தக்கவைத்துக்கொண்டிருக்கிறது. கடந்த மக்களவைத் தேர்தலோடு ஒப்பிடுகையில் தேசியவாத காங்கிரஸ் கட்சி 15.52% வாக்குகளிலிருந்து 16.7% ஆகத் தன் கணக்கை உயர்த்திக்கொண்டிருக்கிறது.

ஹரியாணாவில் மொத்தத் தொகுதிகள் 90. கடந்த 2014 சட்டமன்றத் தேர்தலில் 15 இடங்களில் வெற்றிபெற்ற காங்கிரஸ், தற்போது 31 இடங்களில் வென்றிருக்கிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் 47 இடங்களைப் பெற்று தனிப்பெரும்பான்மை பெற்றிருந்த பாஜக, இம்முறை 40 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றிருக்கிறது. மக்களவைத் தேர்தலில் 58% பெற்ற பாஜக, ஐந்தே மாதங்களில் சட்டமன்றத் தேர்தலில் 36.3% வாக்குகளை மட்டுமே பெற்றிருக்கிறது. காங்கிரஸ் அதே 28% வாக்குகளுடன் தொடர்கிறது. கடைசியில், துஷ்யந்த் சவுடாலாவின் ஜனநாயக் ஜனதா கட்சி ஆதரவோடுதான் பாஜக ஆட்சியில் அமர்ந்துள்ளது. மகாராஷ்டிரத்தில் பாஜகவுக்கும் சிவசேனைக்கும் இடையிலான உறவு எப்படிப் போகும் என்று தெரியவில்லை.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம், பாஜக - காங்கிரஸ் இரு கட்சிகளுக்கும் இடையே இரு மாநிலங்களிலும் மாநிலக் கட்சிகளும் மேலே வந்திருக்கின்றன. இந்தியத் தேர்தல் களத்தில் மாநிலக் கட்சிகளின் எதிர்காலம் என்னவாகும் என்ற கேள்விக்கு வலுவான நம்பிக்கையை இத்தேர்தல் முடிவுகள் கொடுக்கின்றன. மாநிலக் கட்சிகள் தங்களைத் தகுதியோடும் மக்களின் நம்பிக்கைக்கேற்பவும் வைத்துக்கொள்ள வேண்டும் என்பது மட்டுமே இங்கு ஒரே நிபந்தனை. மத்தியில் ஆளப்போவது யார் என்று தீர்மானிக்கும் மக்களவைத் தேர்தலையும், மாநிலங்களின் அரசியலைத் தீர்மானிக்கும் சட்டமன்றத் தேர்தலையும் மக்கள் வெவ்வேறு விதமாகவே அணுகுகிறார்கள்.

ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசு எடுத்த துணிச்சலான நடவடிக்கைதான் தேர்தல் களத்தில் பாஜகவின் முக்கியப் பிரச்சாரமாக இருந்தது. ஆனால், சட்டமன்றத் தேர்தலைப் பொறுத்தவரைக்கும் மாநிலப் பிரச்சினைகளைத்தான் வாக்காளர்கள் மனதில் கொண்டிருக்கிறார்கள். தேசிய அளவிலான பிரச்சாரங்களும் உத்திகளும் மக்களவைத் தேர்தலுக்குக் கைகொடுக்கலாம்.

ஆனால், அப்படியே மாநில அரசியலுக்கும் அது பொருந்தும் என்று சொல்லிவிட முடியாது என்பது நிரூபணம் ஆகியிருக்கிறது. இடைத்தேர்தல் நடந்த மாநிலங்களில் ஒன்றான பஞ்சாபில் காங்கிரஸ் பெற்றிருக்கும் வெற்றியானது முழுக்க அங்கு மாநில முதல்வர் பதவியில் இருக்கும் அமரீந்தர் சிங் தலைமையோடும் செல்வாக்கோடும் பொருத்திப் பார்த்தால் இதன் பின்னணி விளங்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x