Published : 29 Oct 2019 07:53 AM
Last Updated : 29 Oct 2019 07:53 AM

360: சிறுபான்மையினர் தனித்துப் போட்டியிடுவதால் யாருக்கு லாபம்?

மகாராஷ்டிர சட்டமன்றத்தில் இம்முறை 10 முஸ்லிம்கள் இடம்பெறுகின்றனர். மாநிலத்தின் மக்கள்தொகையில் முஸ்லிம்களின் எண்ணிக்கையோடு ஒப்பிட இது மிகக் குறைவு. மக்கள்தொகையில் 11.5% உள்ள முஸ்லிம்களுக்கு, மொத்தமாக 288 இடங்களைக் கொண்ட சட்டமன்றத்தில் 11.5% பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும் என்றால், 33 உறுப்பினர்கள் அவர்களுக்கு இருக்க வேண்டும். ஆனால், இப்போது மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள்கூடத் தேர்ந்தெடுக்கப்படவில்லை. “முஸ்லிம்களின் வாக்கு சிந்தாமல் சிதறாமல் எங்களுக்கு அளிக்கப்பட்டால், முழுப் பிரதிநிதித்துவம் கிடைக்கும்” என்று பேசிவந்தார் இந்திய மஜ்லிஸ் இ இத்ஹதுல் முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி.

இந்தத் தேர்தலில் 44 தொகுதிகளில் அவருடைய கட்சி போட்டியிட்டது. வெறும் 2 தொகுதிகளில் மட்டுமே அதனால் வெல்ல முடிந்தது என்றாலும், குறைந்தது 9 தொகுதிகளில் காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்கள் பாஜக - சிவசேனை கூட்டணியிடம் தோற்க அது வழிவகுத்தது. மிகச் சிறந்த உதாரணம், சந்திவாலி தொகுதியில் மகாராஷ்டிரத்தின் முக்கியமான முஸ்லிம் தலைவர்களில் ஒருவரான முஹம்மது ஆரீஃப் நசீம் கான் வெறும் 409 வாக்குகளில் தோற்கடிக்கப்பட்டது. நான்கு முறை சட்டமன்ற உறுப்பினர் மற்றும் முன்னாள் அமைச்சரான கான் சிவசேனையின் திலீப் லண்டேவிடம் தோற்றார். அந்தத் தொகுதியில் ஏஐஎம்ஐஎம் கட்சி வேட்பாளர் வாங்கியிருந்த ஓட்டுகள் 1,167.

இப்படி 9 தொகுதிகளில் நேர்ந்திருக்கிறது. “ஓவைசி போன்றவர்கள் முஸ்லிம்களுக்கு நன்மையைக் காட்டிலும் தீமையையே செய்கிறார்கள். ஏனென்றால், அவர்கள் ஏற்படுத்தும் பாதிப்பு இதோடு முடிந்துவிடவில்லை. முஸ்லிம்கள் ஒருங்கிணைப்பு என்ற பெயரில் அவர்கள் தேர்தல் களத்தில் வாக்குகளை ஒருங்கிணைப்பது எதிரே இந்துக்கள் ஒருங்கிணைப்பு என்ற தளத்தை பாஜக கூட்டணிக்கு உண்டாக்கிவிடுகிறது. ஆக, சிறுபான்மையினரையும் உள்ளடக்கிச் சிந்திக்கும் காங்கிரஸ் போன்ற கட்சிகளுக்கே அவர்கள் உண்மையில் சேதத்தை உண்டாக்குகிறார்கள். கூடவே, முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தையும் குறைத்துவிடுகிறார்கள்” என்ற விமர்சனங்கள் இப்போது எழுந்திருக்கின்றன.

நகரங்களில் ஓங்கி நிற்கும் பாஜக: எப்படிப் புரிந்துகொள்வது?

இரு மாநிலத் தேர்தல் ஆச்சரியங்களில் முக்கியமான ஒன்று, மும்பை மாநகரின் 36 தொகுதிகளில் 28 தொகுதிகளை பாஜக - சிவசேனை கூட்டணி வென்றிருப்பதாகும். அவற்றில் பாஜக 15, சிவசேனை 13 தொகுதிகளில் வென்றன. இயல்பிலேயே பாஜகவும் சிவசேனையும் நகரங்களைச் சார்ந்த அரசியல் கட்சிகள் என்பது போக, வேறு இரு விதங்களிலும் இதைப் புரிந்துகொள்ளலாம். நகர்ப்புற வாக்காளர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் மத்தியில் அவற்றால் தங்கள் கதையாடலை வெற்றிகரமாகக் கொண்டுசெல்ல முடிகிறது. ஆனால், கிராமப்புறங்களில் நிலைமை வேறாக இருக்கிறது.

குறிப்பாக, விவசாயிகள் - நிலவுடைமையாளர்கள் மத்தியில் அதிருப்தி நிலவுகிறது. மகாராஷ்டிரத்திலும் ஹரியாணாவிலும் கிராமப்புறத் தொகுதிகளை ஆய்வுக்குள்ளாக்குகையில் இது நன்றாகவே புலப்படுகிறது. இதை இன்னொரு வகையில் சொல்வது என்றால், நகர்ப்புற வாக்காளர்களிடம் உரையாடும் இடத்தில் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் நிலைமை மோசம் என்றும் சொல்லலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x