Published : 22 Oct 2019 07:57 AM
Last Updated : 22 Oct 2019 07:57 AM

இப்படிக்கு இவர்கள்: எல்லோருக்கும் புரியும்படியான மருத்துவக் கட்டுரைகள்

மருத்துவர் கு.கணேசனின் ‘மருத்துவ நோபல் 2019: மகத்துவம் என்ன?’ கட்டுரை அற்புதம். புதிய மருத்துவக் கண்டுபிடிப்புகளால் பிற்காலச் சந்ததியினருக்குக் கிடைக்கவிருக்கும் பலன்கள் குறித்து, சாதாரண மக்களும் புரிந்துகொள்ளத்தக்க வகையில் எழுதியிருந்தார். நோபல் பரிசு குறித்த செய்திகளை வெறும் செய்திகளாக மட்டுமே படித்துப் பழகிய எனக்கு, இதுபோன்ற கட்டுரைகள் நல்ல புரிதலைத் தருகின்றன.

- பாபநாசம் நடராஜன், தஞ்சாவூர்.

ஆளுமைகளை வாழும் காலத்திலேயே கௌரவிக்க வேண்டும்

அக்டோபர் 21 அன்று வெளியான ‘ஆ.சிவசுப்பிரமணியனுக்கான டாக்டர் பட்டம் தமிழுக்கான கௌரவம்’ தலையங்கம் வாசித்தேன். மிகப் பெரும் ஆளுமைகளுக்கெல்லாம் அவர்கள் வாழும் காலத்திலேயே உரிய கௌரவம் கொடுக்க வேண்டும் என்பதை தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகமும், ‘இந்து தமிழ்’ நாளிதழும் சரியாகச் செய்திருக்கின்றன. ‘நூல்வெளி’யில் வெளியான கட்டுரை மூலம் அறிந்து, அவரது ‘பனை மரமே! பனை மரமே!’ புத்தகம் வாசித்தேன். அவரது புத்தகங்கள் எல்லாவற்றையும் வாசிக்க வேண்டும் என்ற உந்துதலை இந்தத் தலையங்கம் கொடுத்தது.

- சி.இரமேசு, விசுவநாதபுரம்.

பிளாஸ்டிக்: மக்களை அச்சுறுத்தும் நவீன எமன்

பிளாஸ்டிக் தொடர்பாக க.சே.ரமணி பிரபா தேவி எழுதிவரும் ‘பிளாஸ்டிக் எனும் அணுகுண்டு’ தொடரைத் தொடர்ந்து வாசித்துவருகிறேன். அக்டோபர் 21 கட்டுரையில், பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை விதி 2016-ன் சாராம்சத்தைக் குறிப்பிட்டிருந்தார். குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று மாநகராட்சி தரம் பிரித்து, அதன் பிறகு முறையாக மறுசுழற்சி செய்ய வேண்டும் என்கிற நடைமுறை வெறும் ஏட்டுச் சுரைக்காயாக இருப்பது வேதனைதான்.

தனித்தனியாகக் குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டாலும்கூட அதைப் பொதுமக்கள் முறையாகப் பயன்படுத்துவதில்லை. ஆக, மக்களிடம் அது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய தேவையும் இருக்கிறது. இன்று நீர்நிலைகளை அடக்கி ஆளும் நிலைக்கு வந்துவிட்ட பிளாஸ்டிக், மக்களை அச்சுறுத்தும் நவீன எமன் என்றால், அது மிகையல்ல. பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் தங்கள் தேவைகளை மாத்திரம் கருத்தில்கொள்ளாமல் சுற்றுச்சூழல் மீதும் அக்கறைகொள்வதே இயற்கைக்குச் செய்யும் நன்றிக்கடன்.

- இரா.முத்துக்குமரன், அற்புதபுரம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x