Published : 21 Oct 2019 08:00 am

Updated : 21 Oct 2019 08:00 am

 

Published : 21 Oct 2019 08:00 AM
Last Updated : 21 Oct 2019 08:00 AM

ஆ.சிவசுப்பிரமணியனுக்கான டாக்டர் பட்டம்  தமிழுக்கான கௌரவம் 

honor-for-tamil

தமிழகப் பல்கலைக்கழகங்கள் வழங்கும் கௌரவ டாக்டர் பட்டங்கள் விமர்சனத்துக்கும் கேலிக்கும் உரியவை ஆகிப் பல காலம் ஆகிவிட்டிருக்கும் நிலையில், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் அறிவித்திருக்கும் டாக்டர் பட்ட அறிவிப்பு மிகுந்த கவனம் ஈர்க்கிறது; தமிழுக்கு மதிப்பு சேர்க்கிறது.

நாட்டார் வழக்காற்றியல் அறிஞர் ஆ.சிவசுப்பிரமணியன், எழுத்தாளர் வண்ணதாசன் மற்றும் அயல்வாழ் தமிழ் சேவகர் ஆறுமுகம் பரசுராமன் மூன்று ஆளுமைகளைத் தேர்ந்தெடுத்ததற்காக தமிழ்ப் பல்கலைக்கழகம் மட்டும் அல்லாது உயர் கல்வித் துறையும் பெருமைகொள்ளலாம்; இத்தேர்வுக்காகத் துணைவேந்தர் கோ.பாலசுப்பிரமணியன், அமைச்சர் க.பாண்டியராஜன் இருவரும் பாராட்டுக்குரியவர்கள் ஆகிறார்கள்.

மொரீஷியஸ் முன்னாள் அமைச்சரும் உலகத் திருக்குறள் மைய நிறுவனருமான ஆறுமுகம் பரசுராமன் தமிழ்நாட்டுக்கு வெளியே தமிழை வளர்த்தெடுக்கும் செயல்பாட்டாளர்களில் குறிப்பிடத்தக்கவர். எழுத்தாளரும் கவிஞருமான வண்ணதாசன் நுட்பமான சிறுகதையாளர், கவிஞர்; இவற்றைத் தாண்டி கடித இலக்கியத்துக்காகவும் கொண்டாடப்படுபவர்.

மூன்றாண்டுகளுக்கு முன்பு சாகித்ய அகாடமி விருது பெற்றிருக்கும் வண்ணதாசனுக்கு மேலும் ஓர் அங்கீகாரமாக அமைந்திருக்கும் இந்தப் பட்டம், நவீனப் படைப்பாளிகளை அங்கீகரிப்பதிலும் கொண்டாடுவதிலும் பின்தங்கி நிற்கும் தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களை அவற்றின் வழமையான போக்கிலிருந்து திசை திருப்பக் கூடியதாகவும் அமைந்தால் மேலும் நல்லது.

மரியாதைக்குரிய இன்னொருவர் ஆ.சிவசுப்பிரமணியன்; இதுவரை பெரிய அங்கீகாரங்கள் எதுவும் சென்றடையாத ஒரு மகத்தான ஆளுமை. அரை நூற்றாண்டுக்கும் மேலாக நாட்டாரியலில் ஆய்வுப் பயணம் மேற்கொண்டிருக்கும் சிவசுப்பிரமணியன் தன்னுடைய உடல், பொருள், ஆன்மா அத்தனையையும் தமிழுக்காகக் கரைத்துக்கொண்டவர். வரலாறு என்பது எப்போதுமே படித்தவர்கள் படித்தவர்களுக்காக எழுதப்படுவதாகவும், ஆளும் வர்க்கத்தினருடையதாகவுமே இருந்திருக்கிறது. ஆனால், ஆ.சிவசுப்பிரமணியன் வரலாற்றைக் கீழிருந்து எடுத்துவந்து, தமிழ்ச் சமூகத்தின் முன்வைத்தவர். சாதாரண மக்களின் வாழ்க்கையிலிருந்தும், அவர்களுடைய வாய்மொழி ஆதாரங்களிலிருந்தும் வரலாற்றை உருவாக்கியவர்.

பேராசிரியர் நா.வானமாமலையின் மாணவரான ஆ.சிவசுப்பிரமணியன், நாட்டார் வழக்காற்றியலை வெளிநாட்டுக் கோட்பாட்டுச் சட்டகங்கள் கொண்டு அணுகாமல், மக்களின் வாழ்வியலிலிருந்தே அணுகியவர். அவர் செய்த ஆய்வுகளும், எழுதிய நூல்களும் நாட்டார் வழக்காற்றியலில் புது வெளிச்சம் பாய்ச்சுபவை. தமிழ் மக்கள் வாழ்வில் இன்று நிலைத்திருக்கும் ஒவ்வொரு விஷயத்தின் வேர்களைக் கண்டடையும் முனைப்புக் கொண்டவை.

இதற்காகத் தமிழகமெங்கும் அவர் அலைந்து திரிந்து, பெரும் களப் பணியைச் செய்திருக்கிறார். இந்த ஆய்வுகளெல்லாம் கல்வி நிறுவனங்களின் ஆதரவிலோ, அரசின் நிதியுதவியிலோ நடந்தவை அல்ல என்பதும், அவருடைய தனிப்பட்ட ஆர்வத்திலும் ஆதாரத்திலும் நடந்தவை என்பதும் இங்கே மிக முக்கியமாகக் குறிப்பிடத்தக்கதாகும்.

ஆ.சிவசுப்பிரமணியனுக்கு வழங்கப்படும் அங்கீகாரமானது, கல்விப்புலத் துறைக்கு வெளியே இப்படி உழைத்து, தமிழக வரலாற்றையும் கலாச்சாரத்தையும் ஆவணப்படுத்திவிட்டு, எந்த அங்கீகாரமும் இன்றியிருக்கும் இன்னும் எத்தனை ஆளுமைகளை நாம் வெளியே நிறுத்தியிருக்கிறோம் என்ற கேள்வியையும், இப்படியான ஆய்வுகள் ஏன் நம்முடைய பல்கலைக்கழகங்களில், கல்வி நிறுவனங்களில் சாத்தியம் ஆகவில்லை என்ற கேள்வியையும்கூட இணைக்கக்கூடியது. தமிழ்ப் பல்கலைக்கழகம் மீண்டும் தொடங்கியிருக்கும் இந்த முனைப்பு வளர்த்தெடுக்கப்பட வேண்டும்; ஒரு போக்காக உருவெடுக்க வேண்டும்.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

ஆ.சிவசுப்பிரமணியம்டாக்டர் பட்டம்தமிழுக்கான கௌரவம்Honor for Tamilதலையங்கம்தமிழுக்கு மதிப்புகல்விப்புலத் துறைதமிழ்ப் பல்கலைக்கழகம்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author