Published : 17 Oct 2019 07:42 AM
Last Updated : 17 Oct 2019 07:42 AM

இந்தியா-சீனா இடையே நம்பிக்கை வலுப்பெறட்டும்! 

சீன அதிபர் ஜி ஜின்பிங், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இடையில் சென்னையில் நடந்த உச்சி மாநாடு இனிதே முடிந்திருக்கிறது. ஊஹான் மாநாட்டில் ஒப்புக்கொண்ட விஷயங்களைச் செயல்பாட்டுக்குக் கொண்டுவரவும் மேற்கொண்டு புதிய துறைகளில் ஒத்துழைப்பை வளர்க்கவும் நடந்த இம்மாநாடு, தனது நோக்கத்தில் வெற்றிபெற்றிருக்கிறது. ஊஹான், சென்னை உச்சி மாநாடுகளைப் போல அடுத்த ஆண்டு சீனத்தில் நடைபெறவுள்ள மூன்றாவது மாநாட்டில் பங்கேற்பதாக மோடி உறுதியளித்திருக்கிறார்.

இரு நாடுகளின் நிதியமைச்சர்கள் தலைமையில் ‘உயர்நிலைப் பொருளாதார – வர்த்தகப் பேச்சுவார்த்தைக்கான அமைப்பு' உருவாக்கப்பட்டிருக்கிறது. சீனத்திடமிருந்து அதிக அளவில் இறக்குமதி செய்வதைப் போல ஏற்றுமதியையும் அதிகரிப்பது, இப்போதுள்ள இருதரப்பு வர்த்தகத்தை மேலும் பல மடங்கு அதிகரிப்பது, ஒப்புக்கொண்ட துறைகளில் பரஸ்பர முதலீடுகளை மேலும் உயர்த்துவது ஆகியவற்றை இலக்குகளாகக் கொண்டு இந்தப் பேச்சுவார்த்தைகள் அமையும். இந்த அமைப்பு வெற்றிகரமாகச் செயல்பட்டால், இரு நாடுகளின் தொழில் - வர்த்தகத் துறைகளைச் சேர்ந்தவர்கள் வெவ்வேறு தளங்களில் நெருங்கி ஒத்துழைக்க வழியேற்பட்டுவிடும்.

சென்னை உச்சி மாநாட்டின் பயன் என்ன என்பது இம்மாத இறுதியில் பாங்காக்கில்' ஆசியான்' அமைப்பின் ஆதரவில் நடைபெறவுள்ள, பிராந்திய ஒருங்கிணைந்த ஒத்துழைப்பு மாநாட்டின்போது தெரியவரும். இந்திய – சீன நல்லுறவு ஏற்பட்டு 70 ஆண்டுகள் ஆவதை உரிய வகையில் கொண்டாட இருதரப்பும் தீர்மானித்துள்ளன. எல்லைப் பிரச்சினை தொடர்பாக இந்திய-சீன நிபுணர்கள் விரைவில் கூடி பரஸ்பரம் நம்பிக்கையூட்டும் மேலும் பல நடவடிக்கைகளை எடுக்கப் போகின்றனர். பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையில் ஒத்துழைக்கவும் ஒப்புக்கொண்டுள்ளனர்.

இரு நாடுகளுக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகளைப் பெரிய பிரச்சினைகளாக வளரவிடாமல் கவனமாகக் கையாண்டு தீர்வு காண்போம் என்று இரு தலைவர்களும் சென்னை உச்சி மாநாட்டிலும் தீர்மானித்துள்ளனர். இதைச் சொல்வது சுலபம், செயலில் நிகழ்த்துவது கடினம். இந்தியாவின் கண்ணோட்டத்தில், பாகிஸ்தானுடன் சீனம் கொண்டுள்ள நெருக்கமான நட்புதான் முதலில் பதிவாகிறது. அதனால், சீனத்தின் நட்புறவு முயற்சிகள் மீது முழு நம்பிக்கை இந்தியாவுக்கு ஏற்படுவதில்லை.

பிற நாடுகளுடன் உறவுக்காக இந்தியா செய்துகொள்ளும் ஒப்பந்தங்களைச் சுயமானவையாகக் கருதாமல், அமெரிக்கக் கண்ணசைவுக்கு ஏற்ப இந்தியா செயல்படுகிறதோ என்று பார்க்கிறது சீனம். பாகிஸ்தான் வழியாக சீனம் ஏற்படுத்திவரும் பொருளாதார ஒத்துழைப்பு நடவடிக்கையும், பசிபிக் பெருங்கடலில் அமெரிக்காவுடன் சேர்ந்து இந்தியா மேற்கொள்ளும் கூட்டு ராணுவப் பயிற்சிகளும் சந்தேகத்தைத் தொடர்ந்து வலுப்பெற வைக்கின்றன.

புது டெல்லியும் பெய்ஜிங்கும் மேலும் நெருங்கி வர வேண்டும் என்றால், ‘மூன்றாவது நாட்டின்’ குறுக்கீட்டை விலக்குவது நல்லது. அடிக்கடி சந்திப்பது, பேசுவதுடன் நில்லாமல், எல்லை தொடர்பாகவும் ராணுவப் பாதுகாப்பிலும் பொருளாதாரத் துறையிலும் இரு நாடுகளுக்கும் அமைதியும் ஒற்றுமையும் ஏற்படும் வகையில், சேர்ந்து செயல்படுவதுதான் இவற்றுக்கெல்லாம் தீர்வாக அமைய முடியும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x