Published : 17 Oct 2019 07:21 AM
Last Updated : 17 Oct 2019 07:21 AM

சிவசேனையும் பால் தாக்கரேவும் வளர்ந்தது எப்படி?

ஆசை

பலமிக்க பிராந்தியக் கட்சிகளுள் ஒன்றும், இந்துத்துவக் கோட்பாட்டைத் தீவிரமாகக் கொண்டிருப்பதுமான சிவசேனை வளர்ந்த விதம், ஒரு திரைப்படத்துக்கே உரிய திருப்பங்களையும் அதிரடிகளையும் கொண்டது. அந்தக் கட்சியின் பிதாமகன் பால் தாக்கரேவும் திரைப்படங்களில் வழக்கமாக வரும் ‘காட்ஃபாதர்’ பாத்திரத்தைப் போன்றவர்தான். அவரும் அவரது கட்சியும் மகாராஷ்டிர அரசியலில், அதன் மூலமாக தேசிய அரசியலில் தாக்கத்தைச் செலுத்தலானது அரை நூற்றாண்டுக் கதை.

அது 1950-களின் இறுதிப் பகுதி. குஜராத் பகுதிகளும், தற்போதைய மகாராஷ்டிரத்தின் பகுதிகளும் இணைந்திருந்த பம்பாய் மாநிலம் மராத்தி, குஜராத்தி என்று இரு மொழிகளையும் கொண்டவர்களால் ஆளப்பட்டாலும், இயல்பாகவே செல்வந்த குஜராத்திகள் பம்பாயில் ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருந்தனர். இதற்கு எதிரான கோபம் மராத்தியர்களிடையே கனன்றுகொண்டிருந்தது. தங்களுக்கென்று தனி மாநிலம் வேண்டும் என்று மராத்தியர்கள் ‘சம்யுக்தா மகாராஷ்டிர சமிதி’ இயக்கம் கண்டு போராடினார்கள். அந்த இயக்கத்தை நிறுவியவர்களில் ஒருவர்தான் பால் தாக்கரேவின் தந்தை கேஷவ் சீத்தாராம் தாக்கரே.

பால் தாக்கரே

1926-ல் பிறந்த பால் தாக்கரே, மராத்தி சந்திரசேனிய காயஸ்த பிரபு என்ற முற்பட்ட பிரிவைச் சேர்ந்தவர். தந்தையின் அரசியல் கருத்துகளால் சிறு வயதிலேயே ஈர்க்கப்பட்டார் பால் தாக்கரே. ஒரு கேலிச்சித்திரக்காரராக ‘ஃப்ரீ பிரஸ் ஜர்னல்’ இதழில் தன் பணியைத் தொடங்கினார். அந்த இதழுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரும், அவருடைய நண்பர்கள் நான்கு பேரும் அங்கிருந்து விலகி, தனியாக ஒரு நாளிதழைத் தொடங்கினார்கள். அந்த நாளிதழ் ஓரிரு மாதங்களே நீடித்தது. இதற்குப் பின் 1960-ல் ‘மார்மிக்’ என்றொரு கேலிச்சித்திர வார இதழை பால் தாக்கரே தொடங்கினார்.

பின்னாளில் அவரது அரசியல் எதுவாக உருவெடுக்கப்போகிறதோ அதற்கு ‘மார்மிக்’ இதழ் அடித்தளமிட்டது. 1950-களின் இறுதியிலும் சரி, 1960-களின் தொடக்கத்திலும் சரி; பம்பாயில் மராத்தியரல்லாதவர்களின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது. அப்போது எடுக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்பின்படி தலைநகர் பம்பாயில் மராத்தியர்களின் எண்ணிக்கை 43% என்றது. எப்போதும்போல வணிகத்தை குஜராத்திகள் தங்கள் கையில் வைத்திருந்தார்கள்.

‘வெள்ளை சட்டைப்பட்டை வேலைகள்’ என்று சொல்லப்படும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் அதிகாரப் பணிகளில் ‘மதறாஸிகள்’ என்று அழைக்கப்பட்ட தென்னிந்தியர்கள் தங்கள் கையில் வைத்திருந்தார்கள். சொந்த மண்ணில் அதன் மைந்தர்கள் புறக்கணிக்கப்படுவதாக ‘மார்மிக்’ இதழில் பால் தாக்கரே தொடர்ந்து கேலிச்சித்திரங்களை வெளியிட்டுவந்தார். மேலும், மராத்தியர்கள் அல்லாத உயர் பணி அலுவலர்கள், அதிகாரிகள் போன்றோரின் பெயர்களையும் அடிக்கடி வெளியிட்டு கலவரப்படுத்தினார்.

சிவசேனையின் தோற்றம்

19.06.1966 அன்று சிவாஜி பூங்காவில் வைத்து ‘சிவசேனை’ கட்சியை பால் தாக்கரே தொடங்கினார். அந்தப் பெயரை வைத்தது பால் தாக்கரேவின் தந்தை. பம்பாயைச் சேர்ந்த ஒரு இயக்கமாகத்தான் அது தொடங்கப்பட்டது. அரசியல் அமைப்பாக அல்லாமல் மகாராஷ்டிரர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை ஏற்படுத்திக்கொடுப்பதற்கான இயக்கமாகத்தான் அது முதலில் தொடங்கப்பட்டது. கொஞ்ச காலத்திலேயே அரசியலிலும் சிவசேனை பங்கெடுக்க ஆரம்பித்தது. தொடக்க காலத்தில் காங்கிரஸின் ஆசிர்வாதம் சிவசேனைக்கு இருந்தது.

மகாராஷ்டிரத்தை அப்போது காங்கிரஸ் ஆண்டுகொண்டிருந்தது. அதற்கு இடதுசாரிகளின் தொழிற்சங்க அமைப்புகள் கடும் தலைவலியாக இருந்தன. அத்தொழிற்சங்க அமைப்புகளை முடக்குவதற்கு சிவசேனையை வெற்றிகரமாகப் பயன்படுத்திக்கொண்டது காங்கிரஸ். கம்யூனிஸ்ட்டுகளை ‘தேசத்துக்கு எதிரானவர்கள்’ என்று சித்தரிப்பது சிவசேனையின் வழக்கம். அப்போது இந்திய-சீனப் போர் நடந்து முடிந்திருந்த காலகட்டம் என்பதால், மக்களிடையே கம்யூனிஸ்ட்டுகள் மீதான வெறுப்பைப் பரப்பி அவர்களுக்கு முட்டுக்கட்டை போட்டது சிவசேனை.

இயக்கம் தொடங்கிய கொஞ்ச காலத்திலேயே தேர்தல் அரசியலில் சிவசேனை கால்பதிக்க ஆரம்பித்தது. 1967-ல் தானே மாநகராட்சிக்கு நடந்த தேர்தலில் 40-ல் 17 இடங்களை வென்று திரும்பிப் பார்க்க வைத்தது சிவசேனை. அதேபோல், அடுத்த ஆண்டில் பம்பாய் மாநகராட்சிக்கு நடைபெற்ற தேர்தலில் 121 இடங்களில் 42 இடங்களை வென்றது. ‘மகாராஷ்டிரம் மகாராஷ்டிரர்களுக்கே’ என்ற சிவசேனையின் கோஷம் மகாராஷ்டிர இளைஞர்களை ஈர்த்துக்கொண்டதன் விளைவுதான் இந்த வளர்ச்சி. பிராந்தியவாதத்தின் ஆபத்தான வடிவத்தால் தாங்கள் ஈர்க்கப்பட்டுக்கொண்டிருக்கிறோம் என்பது தெரியாமலேயே இளைஞர்கள் சிவசேனையின் பக்கம் சிறுகச் சிறுகப் போய்க்கொண்டிருந்தார்கள்.

சிவசேனை என்றால், இன்று நம் நினைவுக்கு வருவது அவர்களின் அதிதீவிர தேசியவாதத்துடன் இணைந்த இனவாதம், இந்துத்துவம், கூடவே வன்முறைப் பாதை. ஆனால், எப்படி அவர்கள் மக்களின் செல்வாக்கைப் பெற்றார்கள்? வெளி மாநில மக்கள் உள்ளூர் வேலைவாய்ப்புகளையும் செல்வத்தையும் ஆக்கிரமிக்கிறார்கள் என்ற உள்ளூர்க்காரர்களின் குரலை துச்சமாக அணுகிய ஆளும் வர்க்கத்தின் அலட்சியமே காரணம். இந்த ஆதரவைத் தங்களுடைய வன்முறைப் பாதைக்கான நியாயமாக மடை மாற்றிக்கொண்டது சிவசேனை.

வன்முறைகளின் பாதை

தென்னிந்தியர்களின் கடைகள், உணவகங்களைச் சூறையாடுவது. தென்னிந்தியர்கள் அதிகமாக வேலை பார்க்கும் நிறுவனங்களைப் போய் மிரட்டுவது என்று தொடங்கிய செயல்பாடுகள், அன்றைய பம்பாயில் கடைநிலை வேலைகளைச் செய்துகொண்டிருந்த தமிழர்களைக் குறிவைத்துத் தாக்குவதில் போய் முடிந்தது. இந்த வன்முறைகளின் பாதை எவ்வளவு மோசமாக இருந்தது என்பதற்கு 1970-ல் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ண தேசாய் கொடூரமாகக் கொல்லப்பட்டதை ஓர் உதாரணமாகச் சொல்லலாம்.

சிவசேனையின் மூர்க்கமான நடவடிக்கைகளால் அது தடைசெய்யப்படும் என்ற அச்சம், சிவசேனைக்குள் 1970-ல் நிலவியது. அதனால், இயக்கத்தின் பெயரை ‘ஆஸாத் ஹிந்த் பார்ட்டி’ என்று மாற்றிவிடும் யோசனைகூட பால் தாக்கரேவுக்கு இருந்தது. தடைசெய்யப்படுவதிலிருந்து தப்பிப்பதற்காக இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றினார். 1975-ல் நெருக்கடிநிலை அறிவிக்கப்பட்டபோது அதற்கு ஆதரவு தெரிவித்தவர்களுள் பால் தாக்கரேவும் ஒருவர். “இயந்திரம் பழுதடைந்துவிடாமல் அதைக் காப்பாற்றுவதற்கு அதை நிறுத்துவது அவசியம். அதுபோன்றதுதான் நெருக்கடிநிலை” என்று எழுதினார் பால் தாக்கரே. 1982-ல் காங்கிரஸுடனான இந்த உறவு முறிந்தது.

மாறிய கோஷம்

ஆரம்பத்தில், ‘மகாராஷ்டிரா மகாராஷ்டிரர்களுக்கே’ என்ற கோஷத்துடன் பிராந்தியவாதத்தையும் கூடுதலாக தேசியவாதத்தையும் கையிலெடுத்திருந்த சிவசேனை இந்துத்துவத்தையும் சேர்த்துக்கொண்டது, இதையொட்டி நடந்ததுதான். தனது முழக்கத்தை தேசிய அளவுக்கு விஸ்தரித்தபோது அதை இப்படி மாற்றிக்கொண்டது சிவசேனை: ‘இந்தியா இந்துக்களுக்கே!’இந்துக்களுக்கென்று ஒரு வளமான கடந்த காலத்தை முன்வைத்து அரசியல் செய்ய ஆரம்பித்தார்கள். அவர்களுக்கு முகலாயர்களின் ஆதிக்கத்தைத் தடுத்து நிறுத்திய சிவாஜிதான் கதாநாயகர். ஏனென்றால், முஸ்லிம் வெறுப்பின் வழியாகவே இந்துக்களைத் திரட்ட முடியும் என்ற பாதையையே பால் தாக்கரேவும் தேர்ந்தெடுத்தார். “இந்துக்களுக்கென்று தற்கொலைப் படை தேவை” என்றெல்லாம் பேசும் அளவுக்குச் சென்றவர் அவர்.

இந்துத்துவத்தை நோக்கி சிவசேனை நகர ஆரம்பித்ததும் எண்பதுகளின் பிற்பகுதியில் வளர்ந்துகொண்டிருந்த இன்னொரு இந்துத்துவக் கட்சியான பாஜகவை நோக்கி அது இயல்பாகவே நகர்ந்தது. இரண்டு கட்சிகளும் 1990-ல் நடந்த மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி அமைத்தன. ஆட்சியமைக்கும் அளவு இல்லையென்றாலும் சிவசேனையும் பாஜகவும் 52, 42 இடங்களில் வென்று காங்கிரஸைக் கவலைகொள்ள வைத்தன. எனினும், அத்தேர்தலில் அதிக இடங்களில் வென்று காங்கிரஸ் ஆட்சி அமைத்தது.

சிவசேனையின் ஏறுமுகம்

1990-க்குப் பிறகு சிவசேனைக்கு ஏறுமுகம்தான். 1992-ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டதன் பின்விளைவாக 1993-ல் மும்பையில் பல இடங்களில் குண்டு வெடித்தது. இதையே சந்தர்ப்பமாக வைத்து, முஸ்லிம்களுக்கு எதிராகக் கலவரத்தைத் தூண்டும் விதமாக பால் தாக்கரே பேசினார். இதனால் ஏற்பட்ட கலவரங்களில், மும்பையே பற்றியெரிந்தது. இது எல்லாமே தொடர்ந்து வந்த 1995 சட்டமன்றத் தேர்தலில் சிவசேனைக்கும் பாஜகவுக்கும் சாதகமாகிப்போயின.

இந்து வாக்காளர்களை ஒன்றுதிரட்டியதால் அந்தத் தேர்தலில் இந்தக் கூட்டணி அதிக இடங்களை வென்றது. சிவசேனை 73 இடங்களையும், பாஜக 65 இடங்களையும் வென்று கூட்டணி ஆட்சி அமைத்தன. சிவசேனையின் தலைவராக இருந்தாலும் பால் தாக்கரே முதல்வராகவில்லை; அவர் ஆட்சியதிகாரத்துக்கு வெளியிலிருந்து செல்வாக்கு செலுத்துபவராகவே தொடர்ந்தார். அவருக்குப் பதிலாக மற்றொரு மூத்த தலைவரும் சிவசேனையின் தொடக்க காலத்திலிருந்து பால் தாக்கரே உடன் இருந்தவருமான மனோகர் ஜோஷி முதல்வரானார். மனோகர் ஜோஷி முதல்வராக இருந்தாலும் ஆட்சியின் லகான் பால் தாக்கரேவிடமே இருந்தது.

சிவசேனையின் தலைமைப் பொறுப்பைப் பொறுத்தவரை என்றுமே தேர்தல் நடந்தது கிடையாது. ஆரம்பத்திலிருந்தே அதன் தலைவர் பால் தாக்கரேதான். 2004-ல் தலைவர் பொறுப்பை அவர் தனது மகன் உத்தவ் தாக்கரேவுக்குத் தந்தார். இதற்கு உடன்படாத பால் தாக்கரேவின் தம்பி மகன் ராஜ் தாக்கரே சிவசேனையிலிருந்து விலகி,
2006-ல் மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா என்ற கட்சியைத் தொடங்கினார். இந்தக் கட்சியும் சிவசேனையும் தலைமைகளைப் பொறுத்துதான் மாறுபடுகின்றனவே தவிர, கொள்கைகளைப் பொறுத்தவரை இரண்டும் ஒன்றுதான்.

ஆரம்பத்தில் மதராஸிகளை மட்டுமே குறிவைத்துக்கொண்டிருந்த இவர்கள் பிறகு பிஹாரிகள், உத்தர பிரதேசத்தினரையும் குறிவைக்கலானார்கள். 2008-ல் பிஹாரிகளையும் உத்தர பிரதேசத் தொழிலாளர்கள் மீது மகாராஷ்டிரத்தில் தாக்குதல் நடத்தியது, நாடெங்கும் பெரும் அதிர்வலைகளை எழுப்பியது. நாடாளுமன்றத்தில் இதற்குக் கண்டனம் எழுப்பப்பட்டது. 1995-99 ஆண்டுகளில் ஆட்சியில் இருந்த சிவசேனை – பாஜக மீது தபோல் மின்திட்டம் உள்ளிட்ட ஊழல் புகார்கள் இருக்கின்றன. அதற்குப் பிறகு சிவசேனையால் ஆட்சிக்கு வரவே முடியவில்லை. 1999 தேர்தலில் சிவசேனை, பாஜக கூட்டணி காங்கிரஸிடம் தோல்வி அடைந்தன. இதை அடுத்து, சிவசேனையை ஆட்சிக் கட்டிலில் அமர வைக்காமல் தாடியை எடுக்கப்போவதில்லை என்று சபதம் ஏற்றார் பால் தாக்கரே. 2012-ல் அவர் இறக்கும்வரை தாடி எடுக்கவே இல்லை. அப்போதுவரை அவரது சபதம் நிறைவேறவே இல்லை.

தொடரும் முதல்வர் கனவு

பால் தாக்கரே உயிரோடு இருந்தபோதே தலைமைக்கு வந்த உத்தவ் தாக்கரே, அவருடைய தந்தை காலத்துக் கோட்பாடுகளையே பின்பற்றினாலும், பால் தாக்கரேவுக்குக் கிடைத்த அதிதீவிர கதாநாயகப் பிம்பம் உத்தவுக்குக் கிடைக்கவில்லை. உத்தவ் தாக்கரேவுக்கு ஆதித்ய தாக்கரே, தேஜஸ் தாக்கரே என்று இரண்டு மகன்கள். இன்று சிவசேனையின் முதல்வர் வேட்பாளராக ஆதித்ய தாக்கரே முன்னிறுத்தப்படுகிறார். ஒருபுறம் பாஜகவுடன் கூட்டணியைத் தொடர்ந்தாலும், மறுபுறம் தன்னுடைய முதல்வர் கனவைத் தொடர்கிறது சிவசேனை. ஆதித்ய தாக்கரேவின் ‘ஜன் ஆசிர்வாத் யாத்திரை’ முதல்வர் ஃபட்நவீஸ் நடத்திய ‘மகா ஜனதேஷ் யாத்திரை’க்குப் போட்டியாகவே பார்க்கப்படுகிறது.

சிவசேனை, பாஜக கூட்டணி கடந்த 30 ஆண்டுகளாக சிறுசிறு விரிசல்களுடன் நீடித்துவருகிறது. ஆரம்பத்தில் ‘சிவசேனை இல்லாத மும்பை’ என்ற கோஷத்தை முன்னெடுத்த பாஜக, 1980-களின் இறுதியில் காங்கிரஸை எதிர்ப்பதற்காக சிவசேனையுடன் கைகோத்தது. இந்தக் கூட்டணி 1995-ல் ஆட்சியும் அமைத்தது. தொடர்ந்து 1999, 2004, 2009 ஆண்டுகளில் தேர்தல் கூட்டணி அமைத்தாலும் இவர்களால் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை. 2014-ல் சிவசேனையும் பாஜகவும் தனித்தே தேர்தலை எதிர்கொண்டன. 122 இடங்களை வென்று அறுதிப் பெரும்பான்மை இல்லாமல் ஆட்சி அமைத்த பாஜகவுடன் தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி அமைத்து ஆதரவு தெரிவித்தது இரண்டாவதாக வந்த சிவசேனை.

கசப்புடனே நீடித்த இந்தக் கூட்டணியும் 2018-ல் தற்காலிகமாக முடிவுக்கு வந்தது. மறுபடியும் 2019 மக்களவைத் தேர்தலில் இரண்டு கட்சிகளும் கூட்டணி அமைத்து 48 இடங்களில் 41 இடங்களை வென்றன. இந்த வெற்றிக் கூட்டணி தொடரும் என்ற எதிர்பார்ப்பில் தற்போது மீண்டும் சட்டமன்றத் தேர்தலைச் சேர்ந்தே எதிர்கொள்கின்றன. இருப்பினும், உரசல்களும் நீடிக்கின்றன. அந்த உரசல்கள்தான் எதிரேயுள்ள காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணியின் பெரும் நம்பிக்கை.

- ஆசை,
தொடர்புக்கு: asaithambi.d@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x