Published : 14 Oct 2019 09:08 AM
Last Updated : 14 Oct 2019 09:08 AM

கத்ரி கோபால்நாத்: கம்பீர ஜிலுஜிலுப்பு! 

லலிதா ராம்

மேற்கத்திய வாத்தியங்கள் தென்னாட்டு செவ்வியல் இசையில் பிரவேசித்து, காலப்போக்கில் கர்னாடக இசையின் ஓர் அங்கமாகவே மாறிவிடுவதைக் கடந்த சில நூற்றாண்டு வரலாற்றைப் பார்த்து உணர்ந்துகொள்ளலாம். வயலினில் தொடங்கி, கிளாரினெட், மாண்டலின் வரிசையில் சாக்ஸஃபோனுக்கும் அந்த இடம் கிடைக்கச் செய்தவர் கத்ரி கோபால்நாத்.

நாகஸ்வரப் பரம்பரையில் தோன்றிய கோபால்நாத், ஆரம்பத்தில் தன் தந்தையிடமே நாகஸ்வரம் பயின்றார். தனது பதினைந்தாவது வயதில் மைசூர் அரண்மனையில் பாண்டு வாத்தியங்களில் ஒன்றாக சாக்ஸஃபோன் இசைப்பதைக் கேட்டு அதன்பால் ஈர்க்கப்பட்டுள்ளார். முன்னோடிகள் இருக்கும் வாத்தியத்தை எடுத்துக்கொள்ளும்போது செல்ல வேண்டிய பாதை ஓரளவாவது தெளிவாக இருக்கும். தணியாத வேட்கையால் செலுத்தப்படும் வெகு சில கலைஞர்களே முன்னோடிகளாகும் கடினமான பாதையைத் தேர்ந்தெடுக்கின்றனர்.

அடிப்படையில், சாக்ஸஃபோன் என்பது இந்திய செவ்வியல் இசைக்கான கருவியன்று. மேற்கத்திய இசையில் ‘ஸ்டக்காட்டோ’ எனப்படும் தனித்தனியாய் ஒலிக்கும் ஸ்வரங்களை வாசிக்க முடியுமே அன்றி, இந்திய இசையின் உயிரான கமகங்களை வாசிப்பது மிகக் கடினம்.

இன்னிசை சவால்

ஒரு முழு நேர இசைக் கலைஞனின் முதல் கச்சேரி பெரும்பாலும் அவனது பதின்ம வயதில் நிகழ்ந்துவிடும். கத்ரி கோபால்நாத் முதன்முதலில் சாக்ஸஃபோனைக் கேட்டதற்கும், அவரது 28-வது வயதில் நடந்த அவரது முதல் கச்சேரிக்கும் இடையில் 12 ஆண்டுகள் உருண்டோடியுள்ளன.

இந்தக் காலத்தில் மூன்று முக்கிய மாற்றங்களை கோபால்நாத் சாக்ஸஃபோனில் செய்துள்ளார்.

1) வழமையான சாக்ஸஃபோனில் 3.5 ஸ்தாயிகள் வரை வாசிக்க முடியும். பெரும்பாலான கர்னாடக இசைக் கிருதிகளை இரண்டு ஸ்தாயியில் வாசித்துவிட முடியும். கற்பனைகளைப் பறைசாற்றும் ஆலாபனைகள், ஸ்வரங்கள் போன்றவற்றில்கூட பெரும்பாலான விஷயங்கள் இரண்டு ஸ்தாயிக்குள் அடங்கிவிடும். இதை உணர்ந்து கருவியில் சில விசைகளைக் களைந்து வாசிப்பதற்கு லகுவாக வாத்தியத்தை மாற்றியுள்ளார். 2) இரும்பினாலான இணைப்புகளை ரப்பர் இணைப்புகளாய் மாற்றி கமகங்கள் வாசிக்க ஏதுவாக்கியுள்ளார். 3) விசைகளை அழுத்தும்போது கருவியில் உள்ள துளைகள் திறக்கவும் மூடவும் பயன்படும் தோலினாலான பட்டைகளை மிருதுவான ஃபெல்ட் பேப்பரால் மாற்றியுள்ளார்.

முதலில் வாத்தியத்தைக் கைவரப் பெற்று, அதன் பின் அதன் எல்லைகளை உணர்ந்து, பிறகு அதன் போதாமைகளை நீக்கப் பரிசோதனைகள் செய்து, இறுதியில் கர்னாடக இசைக்கு ஏற்றதாய் மாற்ற வேண்டிய கடினமான பாதையைக் கடந்துள்ளார்.

துணிச்சலான பரிசோதனைகள்

கத்ரி கோபால்நாத்தின் இந்த முயற்சியின் வீச்சை உணர அதன் காலத்தில் வைத்துப் பொருத்திப் பார்க்க வேண்டும். அவர் சாக்ஸஃபோனில் பரிசோதனை முயற்சிகள் செய்துகொண்டிருந்த சமயத்தில் சென்னையில் கிதாரில் கர்னாடக இசைக் கச்சேரிகள் செய்ய முயன்றுவந்தார் இசைக் கலைஞர் சுகுமார் பிரசாத். இன்று கிடைக்கும் அவரது இசைப் பதிவுகள் அவரை உன்னதக் கலைஞராகவே காட்டுகின்றன. இருப்பினும், அன்றைய சூழலில் புதியதொரு மேற்கத்திய வாத்தியத்தை கர்னாடக சங்கீத மேடையில் ஏற்றக சபாக்களுக்கும், ரசிகர்களுக்கும்கூட மனத்தடை இருந்துள்ளது. வாத்தியத்தை வசப்படுத்திய பின்னும் மேடையேற்ற முழு நேரம் எதிர்நீச்சல் போட வேண்டியிருந்த சூழலில், எண்பதுகளின் கடைசியில் சுகுமார் பிரசாத் இசைத் துறையை விட்டு முற்றிலும் நீங்கிவிடுகிறார்.

இந்தச் சூழலில்தான் சாக்ஸஃபோனை ஒரு கர்னாடக இசைக் கருவியாக கோபால்நாத் முன்னிறுத்தியுள்ளார் என்பது பிரமிப்பாக இருக்கிறது. தன் முடிவின் மீது அசாத்திய நம்பிக்கையும், எடுத்ததை சாதித்தே ஆக வேண்டும் என்ற பிடிவாதமும் இன்றி வெளி மாநிலத்தவர் ஒருவர் கர்னாடக இசையுலகின் மையமான சென்னையில் காலூன்றுவது சாத்தியமே அல்ல. தனக்குப் பின்னால் வந்த/வரப்போகிற கீபோர்ட் முதலான மேற்கத்திய வாத்தியங்களில் செவ்வியல் இசை வாசிப்பவர்களுக்காகச் செழுமையான பாதையை அமைத்துக்கொடுத்தவர்களுள் முக்கியமான ஆளுமை என்றும் இசையுலகம் அவரை நினைவில் கொள்ளும்.

திரையுலகப் பிரவேசம்

கத்ரி கோபால்நாத்தின் வாழ்வில் திருப்புமுனை அவர் ‘டூயட்’ திரைப்படத்தில் வாசித்ததுதான் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால், அந்தப் படம் வந்த 1994-க்கு முன்னாலேயே அகில இந்திய வானொலியின் ஏ-டாப் கலைஞர் என்கிற அங்கீகாரம். மியூசிக் அகாடமி முதலான பிரதான சபைகளில் வாசிக்கும் வாய்ப்பு, அமெரிக்கா, இங்கிலாந்து முதலான நாடுகளுக்குச் சென்று வாசிக்கும் வாய்ப்பை அவர் பெற்றிருந்தார் என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது.

திரையிசையில் வாசித்தது இவரைத் திரும்பிப் பார்க்க வைத்திருக்கலாம். அந்தத் தொடக்கப்புள்ளியைத் தொடர்ந்து அவரைக் கேட்க வைத்தது அவர் வாசிப்பில் இருந்த ஜிலுஜிலுப்பு. இயற்கையாகவே கம்பீரமான தொனியில் ஒலிக்கும் வாத்தியத்தில் குழைவையும் வெளிப்படுத்திய விந்தை மக்களைக் கட்டிப்போட்டது. அவரது மந்திர ஸ்தாயிப் பிரயோகங்கள் ஆழமும் மென்மையும் சேர்ந்த அபூர்வக் கலவையாக்கி சொக்க வைத்தன. உச்சஸ்தாயியில் ஒற்றை ஸ்வரத்தில் காலக்கடிகாரத்தைக் கேலிசெய்தபடி அவர் நின்றபோது ரசிகர்களுக்குள் எழுந்த மனவெழுச்சி எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத அனுபவமாய் அமைந்தது. நான் நேரில் கேட்ட பல கச்சேரிகளில் எந்தக் கச்சேரியிலும் அவர் திரையில் வாசித்ததையோ அல்லது வேறு திரையிசைப் பாடல்களையோ வாசிக்கவில்லை என்பதையும் இங்கு குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.

எளிமையும் பணிவும்

2000-ல் தன் புகழின் உச்சியில் இருந்தபோது, ஒரு நிகழ்ச்சியில் கத்ரி தன் பயணத்தைத் திரும்பிப் பார்த்தபடி இப்படிக் கூறுகிறார், “என் முயற்சியாலும், குருவின் அருளாலும் இந்தக் கருவியில் சாதகம் செய்து, கர்னாடக இசைக்குத் தகுந்தவாறு மாற்றங்கள் செய்து வாசித்துவருகிறேன். இருப்பினும், சில சிரமங்கள் இருக்கத்தான் செய்கின்றன. உதாரணமாக, சாதாரண காந்தாரத்தை இன்னும் சரளமாக வாசிக்க முடிவதில்லை” என்கிறார். சிகரங்களைத் தொட்டபோதும் போக வேண்டிய தூரத்தைப் பற்றிய தெளிவும், அதை வெளிப்படுத்தக்கூடிய நேர்மையும் பகட்டும் படாடோபமும் நிறைந்த இந்தத் துறையில் அதிகம் காணக்கிடைக்காதவை.

அவரது விமர்சகர்கள், அவர் கச்சேரியில் தோடி, தன்யாஸி, சஹானா போன்ற ராகங்களை அதிகம் கையாளாததைக் குறிப்பிடுவர். அது வாத்தியத்தின் தற்கால எல்லைக்கு அப்பாற்பட்டதே அன்றி, கலைஞனின் குறையல்ல என்று சொல்லத் தோன்றுகிறது. ஆரம்பத்தில், நாகஸ்வர கச்சேரிகள்போல இன்னொரு சாக்ஸஃபோனைத் துணைக் கருவியாகக் கொண்டு தவிலுடன் கச்சேரிகள் செய்தாலும், காலப்போக்கில் வயலின், மிருதங்கம், மோர்சிங்குடன் அவர் கச்சேரிகளைத் தனக்கேயுரிய பாணியில் அமைத்துக்கொண்டார். குறிப்பாக, வயலின் விதுஷி கன்யாகுமரிக்கு சம பங்களித்தபடி அவர் வாத்தியத்தின் எல்லைக்கு உட்பட்ட மோகனம், ஆபேரி, கல்யாண வசந்தம் போன்ற ராகங்கள் காலம் கடந்தும் நிற்கக்கூடியவை.

கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான சாக்ஸஃபோன் கலைஞர்கள் உருவாகியிருப்பது கண்கூடு. குறிப்பாக, கர்நாடகத்தில் வீட்டு விழாக்களிலும், கோயில் திருவிழாக்களிலும் மங்கல வாத்தியமாக நாகஸ்வரத்துக்கு இணையாக சாக்ஸஃபோன் ஒலிப்பதைக் காணலாம். பரபரப்பான கச்சேரி வாழ்வுக்கு இடையிலும் தன் குருநாதர் டி.வி.கோபாலகிருஷ்ணனின் மகன் ஜி.ராமநாதன் போன்ற அற்புத சீடர்களை அவர் உருவாக்கத் தவறவில்லை. அவர் சாதனைகள் அத்தனையையும் ஒதுக்கினாலும்கூட, கர்னாடக சங்கீதம் என்றால் என்னவென்றே தெரியாத எத்தனையோ ரசிகர்களை, குறிப்பாக இளைஞர்களை இசையின்பால் ஈர்த்தவர் என்கிற ஒரு காரணத்துக்காகவே அவர் ஒரு நிரந்தரர்.

- லலிதா ராம், இசை ஆய்வாளர்,

‘இசையுலக இளவரசர் ஜி.என்.பி.’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.

தொடர்புக்கு: ramchi@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x