Published : 11 Oct 2019 09:24 AM
Last Updated : 11 Oct 2019 09:24 AM

மாமல்லபுரச் சந்திப்பு : மீண்டும் தழைக்கட்டும் அரசியல் நட்புறவு!

ஆசியாவின் இருபெரும் நாடுகளான சீனாவும் இந்தியாவும் பல நூற்றாண்டுகள் பழைமைவாய்ந்த பாரம்பரியமான கலாச்சாரப் பெருமைகளைக் கொண்டிருந்தாலும் 20-ம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியிலிருந்துதான் பொருளாதார வளர்ச்சிப் பாதையில் அடியெடுத்துவைத்தன. விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டிருந்த இவ்விரு நாடுகளும் இன்று வளரும் பொருளாதார நாடுகளின் வரிசையில் முன்னணியில் இருக்கின்றன. அரசியல் நட்புறவோடு தொடங்கிய இவ்விரு நாடுகளின் புதிய அத்தியாயம், இடைப்பட்ட காலத்தில் சில மன வருத்தங்களையும் உள்ளடக்கியது என்றாலும், இன்று கைகோத்து பல்வேறு உடன்பாடுகளை எட்டிவருகின்றன. வளர்ந்துவரும் பொருளாதார நாடுகள் என்ற வகையில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நல்லுறவு அரசியல் நட்புறவாகவும் மலர வேண்டும்.

70 ஆண்டுகளுக்கு முன்பு மலர்ந்த சீன மக்கள் குடியரசு, பொருளாதார வளர்ச்சி நிலையில் இந்தியாவைக் காட்டிலும் கொஞ்சம் முன்னதாகவே நடைபோட்டுக்கொண்டிருக்கிறது. 2019-ல் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2.9 ட்ரில்லியன் டாலர்களாக இருக்கும் என்று கணிக்கப்படுகிறது. இந்த அளவை 12 ஆண்டுகளுக்கு முன்பே சீனா எட்டிவிட்டது. அதுபோல, இந்தியாவின் சராசரி தனிநபர் வருமானம் தொடங்கி சுகாதார வசதிகள் வரை சீனா முன்னோக்கியே நடைபோட்டுக்கொண்டிருக்கிறது.

2000-ல் இந்தியாவின் பொருளாதாரத்தைவிட சீனப் பொருளாதாரம் 2.5 மடங்கு பெரிதாக இருந்தது. தற்போது அது ஐந்து மடங்கு பெரிதாகியிருக்கிறது. அமெரிக்காவுடனான வாணிப உறவில் விரிசல்கள் எழுந்துள்ள நிலையில், வளர்ந்துவரும் தனது பொருளாதாரத்தை அதே வீதத்தில் சீனா பராமரிக்க வேண்டும் என்றால், இந்தியாவுடன் அதன் வாணிப உறவைப் பலப்படுத்த வேண்டியிருக்கிறது. அதேநேரத்தில், இரு நாடுகளுக்கு இடையிலான வாணிப உறவால் இந்தியாவும் பயன்பெற வேண்டும். சீனாவுடனான வெளிவர்த்தகப் பற்றாக்குறை குறைக்கப்பட வேண்டும்.

சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்வதற்கு முன், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சீனாவுக்குச் சென்று அவரைச் சந்தித்து, காஷ்மீர் விவகாரம் குறித்துக் கோரிக்கைகள் விடுத்திருக்கிறார். காஷ்மீர் விவகாரத்தை இந்தியாவும் பாகிஸ்தானும் பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்ற கருத்தை சீனா வெளியிட்டுள்ளது. காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டை சீனா ஆதரிக்காவிட்டாலும், இந்தியா-பாகிஸ்தான் இரு நாடுகளுக்குமே பொதுவான தரப்பாக இருக்க விரும்புகிறது எனத் தெரிகிறது. ஜம்மு-காஷ்மீர் இந்தியாவின் உள்ளடங்கிய பகுதி, இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்சினையில் மற்ற நாடுகள் தலையிடுவதை விரும்பவில்லை என்று இந்தியாவும் தனது நிலைப்பாட்டை மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்திவருகிறது. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான எல்லைப் பதற்றங்களும் முடிவுகட்டப்படும் சூழலில், இரு நாடுகளுக்கு இடையிலான உறவு வாணிபக் கூட்டுறவாக மட்டுமின்றி, அரசியல்ரீதியிலும் வலுவான உறவாக அமையும். சீன மக்கள் குடியரசு சர்வதேச அரங்கில் ஏற்றுக்கொள்ளப்பட்டதற்கு இந்தியாவின் முதல் பிரதமரான நேருவுக்குப் பெரும் பங்கு உண்டு. அந்த அரசியல் நட்புறவு மீண்டும் தழைக்கட்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x