Published : 10 Oct 2019 08:32 AM
Last Updated : 10 Oct 2019 08:32 AM

பிளாஸ்டிக் எனும் அணுகுண்டு: பயோ பிளாஸ்டிக் உற்பத்தி அதிகரிக்குமா? 

பிளாஸ்டிக் பயன்பாட்டால் விளையும் விபரீதங்கள் குறித்து நமக்குத் தெரிந்திருந்தும் அதைத் தொடர்ந்து பயன்படுத்துவதற்குக் காரணம், அவை நமது அன்றாடங்களின் தவிர்க்க முடியாத அங்கமாகிவிட்டதால்தான். பிளாஸ்டிக் பயன்பாட்டுக்குப் பழகிவிட்ட நம்மால் அதிலிருந்து மீண்டுவர முடியவில்லை. அதன் குறைகளைப் பேசிக்கொண்டிருக்கும் அதேவேளையில், அதன் பயன்பாட்டையும் நாம் ஏதோ ஒருவகையில் அங்கீகரிப்பதுதான் அதன் பிடியில் சிக்கியிருப்பதற்குக் காரணம். மருத்துவத் துறைகளில் எப்படி பிளாஸ்டிக் தவிர்க்க முடியாத அங்கமாயிருக்கிறது, பிளாஸ்டிக் மின்சாரத்தைக் கடத்துமா, பிளாஸ்டிக் மறுசுழற்சி ஆபத்தானதா, பயோ பிளாஸ்டிக் என்றால் என்ன என்பது குறித்து லயோலா கல்லூரியின் வேதியியல் துறை முன்னாள் தலைவர் டி.பி.சங்கரன் பகிர்ந்துகொண்டார்.

பிளாஸ்டிக் என்றால் பாலிமர் என்று பொருள். கரிமச் சேர்மங்களால் ஆன பாலிமர்களுக்கு மின்சாரத்தைக் கடத்தும் பண்பு இல்லை. ஆனால், மின்கடத்தி பாலிமர்கள் என்றழைக்கப்படும் மின்சாரத்தைக் கடத்தும் பாலிமர்கள் தற்போது உருவாக்கப்படுகின்றன. பாலி அசிட்டிலீன், பாலிதைரோல் இதன் உதாரணங்கள்.

மின்கடத்தி பாலிமர்கள்

மிகவும் குறைவான மின்சாரத்தைக் கடத்தும் இவ்வகை பாலிமர்கள் பயோ கெமிக்கல்களில் பயன்படுத்தப்படுகின்றன. பொட்டாசியம் குறைபாட்டால் ஏற்படும் நரம்பியல் பிரச்சினைகளைச் சரிசெய்ய மின்கடத்தி பாலிமர்கள் உதவுகின்றன. மின்கடத்தி பாலிமர்கள் நம் செல்களோடு இயைந்து செயல்படுவதால் மருத்துவத் துறையில் இவை அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. இவ்வகை பாலிமர்களை உருவாக்குவதற்கான செலவும் குறைவு. எம்ஆர்ஐ உபகரணங்கள் தயாரிக்கப்படுவதும் இவ்வகை பிளாஸ்டிக்கால்தான்.

மின்கடத்தி பாலிமர்கள் பயோ சென்சார்களாகவும் செயல்படுகின்றன. இதன் முக்கியமான அடுத்தகட்டப் பயன்பாடு பயோ ஆக்டிவேட்டர்கள். இவை சாக்கடை, கழிப்பறைகள், கழிவுநீர்க் குழாய்களில் வெளியாகும் துர்நாற்றத்தைத் தடுக்கவும், துர்நாற்றத்துக்குக் காரணமான பாக்டீரியாக்களை உடனடியாக அழிக்கவும் செய்கின்றன.

பிளாஸ்டிக் மறுசுழற்சி

பிளாஸ்டிக்கின் பிரச்சினையைப் பட்டியலிடத் தொடங்கும்போது, அங்கே முதல் வரிசையில் நிற்பது அதன் மக்காத தன்மை. மக்கும் தன்மை அற்றவையாகவும், அப்புறப்படுத்த முடியாதவை யாகவும் உள்ள செயற்கை பிளாஸ்டிக்குகளை மக்கச் செய்ய தீவிரமான ஆய்வுகள் நடைபெற்றுவருவது ஒரு நல்ல செய்தி. அதற்காக, இயற்கையான பிளாஸ்டிக்கு களை செயற்கையானவற்றுடன் இணைத்து புதிய வகை ‘செமி சிந்தடிக்’ பிளாஸ்டிக்கை உருவாக்கும் ஆராய்ச்சிகள் நடந்துகொண்டிருக்கி ன்றன.

குறிப்பிட்ட வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் பிளாஸ்டிக்குகளை மறுசுழற்சிக்கு உட்படுத்தலாம். ஆனால், முறையாக மறுசுழற்சி செய்யாத நிலையில் வெளியாகும் வாயுக்கள் மிகவும் ஆபத்தானவை. பிளாஸ்டிக்கின் மக்காத தன்மையைக் கருத்தில் கொண்டு சிலர் பிளாஸ்டிக்கை எரிக்கும் விபரீதத்தில் ஈடுபடுகிறார்கள். பிளாஸ்டிக் மண்ணில் புதைவதைவிட இது மிகவும் மோசமானது. பிளாஸ்டிக் எரியும்போது வெளியாகும் எத்திலின், எத்திலின் ஆக்ஸைடு போன்ற வாயுக்கள் மிகவும் கேடு விளைவிப்பவை; உயிரைக் குடிக்கும் அளவுக்கு ஆபத்தானவை.

பயோ பிளாஸ்டிக்

மக்காத பிளாஸ்டிக்குக்கு மாற்றாக மக்கும் தன்மை கொண்ட பயோ பிளாஸ்டிக்குகள் உருவாக்கப்படுகின்றன. உலக வெப்பமயமாதல் அச்சுறுத்தல்களால் பயோ பிளாஸ்டிக் துறை மெல்ல வளர்ந்துவருகிறது. இவ்வகை பிளாஸ்டிக்குகள் ஓராண்டுக்குள் முழுமையாக மக்கிவிடும். இவற்றை உரங்களாகக்கூடப் பயன்படுத்த முடியும். மக்கும் தன்மை கொண்ட பிளாஸ்டிக்குகளிலும் பிளாஸ்டிக் மூலக்கூறுகள் முழுமையாக மக்குவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுப்பப்படுகிறது. மரபுரீதியாகவே பாக்டீரியாக்கள் மூலம் முழுமையாக மக்கும் பயோபோல் எனப்படும் பிஹெச்பி வகை பிளாஸ்டிக்கை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். ஆனால், அவற்றின் விலை காரணமாகச் சந்தையில் பரவலாகவில்லை. 2015 கணக்கெடுப்பின்படி பெட்ரோலியப் பொருட்களிலிருந்து தயாரிக்கப்படும் பிளாஸ்டிக் 15 கோடி டன். அதேநேரத்தில், பயோ பிளாஸ்டிக்குகள் 3 லட்சத்து 27 ஆயிரம் டன் மட்டுமே உற்பத்தியாகின்றன. பிளாஸ்டிக் பெரும் அச்சுறுத்தலாக உருக்கொண்டிருக்கும் சூழலில் பயோ பிளாஸ்டிக் உற்பத்தி அதிகரிப்பதற்கான ஆயத்தங்களை அரசு மேற்கொள்ள வேண்டும்.

(தொடர்வோம்...)

- க.சே.ரமணி பிரபா தேவி,

தொடர்புக்கு: ramaniprabhadevi.s@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x