Published : 09 Oct 2019 08:11 AM
Last Updated : 09 Oct 2019 08:11 AM

மருத்துவ நுழைவுத் தேர்வு: ஆள் மாறாட்ட மோசடி சுட்டும் ஓட்டைகள்

மருத்துவப் படிப்புக்கான ‘தேசிய மருத்துவ நுழைவுத் தேர்வு’ (நீட்) எவ்வளவோ கெடுபிடிகளுடன் நடத்தப்பட்டுவருவதான பாவனை வெளியே இருந்தாலும், நம்முடைய தேர்வு அமைப்புகள் எவ்வளவு ஊழல்கள் மிகுந்து காணப்படுகின்றன என்பதை அம்பலப்படுத்துவதாக அமைந்திருக்கிறது இந்தத் தேர்வில் நடந்திருக்கும் ஆள் மாறாட்ட மோசடி.

தேனி மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த ஒரு மாணவர் தொடர்பாக, கல்லூரி நிர்வாகத்துக்கு யாரோ அனுப்பிய மின்னஞ்சலை ஆராயப்போய் இந்த மோசடி வெளியே வந்திருக்கிறது. அந்த மாணவரோடு சேர்த்து மேலும் பல மருத்துவ மாணவர்களும் அவர்களுடைய பெற்றோர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். தேர்வு எழுதுவதற்கான விண்ணப்பத்தில், பணம் வாங்கிக்கொண்டு தேர்வு எழுதுபவரின் புகைப்படமும், கல்லூரி அனுமதிக்கான விண்ணப்பத்தில் இந்த மோசடியின் இன்னொரு முனையில் உள்ள மாணவரின் புகைப்படமும் ஒட்டப்பட்டு, யாருக்கும் எந்தச் சந்தேகமும் வராதபடிக்கு மோசடி நடந்திருக்கிறது. இது தற்செயலாக ஓரிருவர் செய்த மோசடியால் விளைந்ததாகத் தோன்றவில்லை. தேர்வு நடத்தும் பொறுப்பில் இருப்பவர்களுக்குத் தெரிந்து, அவர்களுடைய துணையுடன் நடந்த மோசடியாகவே தெரிகிறது. இடைத்தரகர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இது உறுதியாகிறது. இந்த மோசடி பல மாநிலங்களில் நடந்திருப்பதும் நாடு தழுவிய வலைப்பின்னலில் இது ஒரு பகுதி என்பதும் விசாரணையில் வெளிப்படும் தகவல்வழி தெரிந்துகொள்ள முடிகிறது.

தேசிய மருத்துவ நுழைவுத் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது தொடங்கி, மருத்துவக் கல்வியானது ஏழை எளிய மாணவர்களிடமிருந்து அந்நியப்பட்டுவருகிறது; மாநிலப் பாடத்திட்டம் வழி படித்துவரும் மாணவர்களை அது வெளித்தள்ளுகிறது என்ற குற்றச்சாட்டு பெரிய அளவில் எழுப்பப்பட்டுவந்தாலும், எவ்வளவோ சிரமங்களுக்கு இடையில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் அதை நம்பி தங்களைத் தயார்படுத்திவருகின்றனர். தேர்வு எழுதவரும் மாணவர்களிடம் மிகக் கடுமையான கெடுபிடிகளைக் காட்டும் தேர்வு அமைப்பானது உள்ளுக்குள் இவ்வளவு பெரிய ஊழலை வைத்துக்கொண்டிருப்பது உண்மையான மாணவர்களுக்கு இழைக்கும் நம்பிக்கைத் துரோகமே தவிர வேறில்லை. இத்தகைய அசிங்கம் இந்தியக் கல்வித் துறையின் பிரிக்க முடியாத ஒரு அங்கமாகவே தொடர்ந்துவருவதையும் நாம் இங்கே சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது. தேர்வுக்குப் பின் தேர்வுத்தாள்களைத் துரத்துவது என்பது இந்தியாவில் பல கோடிகள் புரளும் கள்ளத் தொழில்களில் ஒன்றாகவே இருக்கிறது.

நுழைவுத் தேர்வை நடத்தும் மத்திய குடும்பநல, சுகாதாரத் துறை அமைச்சகமும், தேசிய தேர்வுகள் முகமையும் இந்த ஆள் மாறாட்ட மோசடியைத் தடுக்க ‘விரல் ரேகைப் பதிவு’ உள்ளிட்ட ஏற்பாடுகளைச் செய்வதுடன் இந்த மோசடியில் ஈடுபட்ட அதிகாரிகள், கல்வியாளர்கள், தரகர்கள் என்று ஒருவரையும் விட்டுவைக்கக் கூடாது. இந்தத் தேர்வு அமைப்பில் எடுக்கப்படும் நடவடிக்கைகளும் ஓட்டையடைப்புகளும் ஏனைய தேர்வு அமைப்புகளுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x