Published : 09 Oct 2019 08:07 AM
Last Updated : 09 Oct 2019 08:07 AM

இந்திய-சீன நல்லுறவுக்கு வித்திடும் மாமல்லபுரச் சந்திப்பு

மு.இராமனாதன்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஜி ஜின் பிங்கும் அக்டோபர் 11 அன்று மாமல்லபுரத்தில் சந்திக்கவிருக்கிறார்கள். தமிழ்நாடு இந்தச் சந்திப்புக் களனாக அமைந்தது பொருத்தமானதுதான். கடாரம் கொண்ட ராஜேந்திர சோழன் சீனாவுடன் வணிகம் நடத்தியிருக்கிறான். சீனத் துறவியான போதி தர்மரின் பூர்வாசிரமக் கதைகளில் அவர் ஒரு பல்லவ இளவரசர் என்கிற கதைதான் பிரபலமானது. சீனமும் தமிழும் செம்மொழிகள். இரண்டும் பழமையானவை மட்டுமல்ல; இன்றளவும் பயன்பாட்டிலும் உள்ளவை. இந்தச் சந்திப்புக்கு மாமல்லபுரம் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு இப்படியான காரணங்கள் எதுவும் இல்லாமலும் இருக்கலாம். எவ்வாறாயினும், இந்தச் சந்திப்பு இரண்டு நாடுகளுக்கும் முக்கியமானது.

இந்தியாவும் சீனாவும் உலகின் மக்கள்தொகை மிகுந்த நாடுகள். உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஐந்தில் ஒரு பங்கை இரண்டு நாடுகளும் அளிக்கின்றன. அண்டை நாடுகளானபோதும் இந்திய - சீன உறவு பல மேடுபள்ளங்களைக் கடந்துதான் வந்திருக்கிறது. இரு தேசங்களுக்கு இடையிலான கலாச்சார உறவுகள் ஈராயிரமாண்டுப் பழமைமிக்கது. இந்தியாவிலிருந்து போன புத்த மதம் சீனக் கலாச்சாரத்துக்கு இசைவாக இருந்தது. ஆனாலும், குறிப்பிடத்தக்க அரசியல் உறவுகள் எழுபதாண்டுகளுக்கு முன்னால், 1949-ல் மா சே துங் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சியை நிறுவிய பிறகே தொடங்கியது எனலாம்.

பிரச்சினைகளும் உடன்பாடுகளும்

புதிய சீன அரசை அங்கீகரித்த கம்யூனிஸ்ட் அல்லாத நாடுகளில் இந்தியாதான் முதலாவதாக இருந்தது. ஆனால், ஆரம்பம் முதலே எல்லைப் பிரச்சினை இருந்தது. 1911-ல் பிரிட்டிஷ் - இந்தியா, சீனா, திபெத் மூன்று நாடுகளுக்கு இடையே அப்போதைய பிரிட்டிஷ் அதிகாரி மக்மோகன் என்பவரால் முன்மொழியப்பட்ட எல்லைக்கோடு, அவரது பெயராலேயே ‘மக்மோகன் கோடு’ என்று அழைக்கப்படுகிறது. 1947-ல் இந்தியா விடுதலை அடைந்தபோது இதையே எல்லைக்கோடாக வரித்துக்கொண்டது. ஆனால், சீனா இந்தக் கோட்டை அங்கீகரிக்க மறுத்தது. எல்லைப் பிரச்சினைகள் வளர்ந்தன. உரசல்கள் பெருகின. இதற்கிடையில், 1959-ல் திபெத்திலிருந்து வெளியேறிய தலாய் லாமாவுக்கு சீனாவின் எதிர்ப்பையும் மீறி அடைக்கலம் வழங்கியது இந்தியா. 1962-ல் எல்லைப் பிரச்சினையை முன்வைத்து சீனா போர் தொடுத்தது. மூன்று லட்சம் சதுர கிமீ பரப்பை உள்ளடக்கிய உலகின் ஆகப் பெரிய எல்லைப் பகுதிக்கான போர் 40 தினங்கள் நீண்டன. அதன் கசப்பு பல ஆண்டு காலம் நீடித்தது.

1978-ல் சீனாவைத் தொழில்மயமாக்க அதன் கதவுகளை விரியத் திறந்தார் டெங் ஜியோ பிங். 1979-ல் மொரார்ஜி தேசாயின் அமைச்சரவையில் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த வாஜ்பாய் மேற்கொண்ட சீனப் பயணம், புதிய உறவுகளுக்குத் தொடக்கம் குறித்தது.

1988-ல் ராஜீவ் காந்தி கையொப்பமிட்ட பல உடன்படிக்கைகள் தொழில்நுட்ப, கலாச்சாரப் பரிமாற்றங்களுக்கு வழிகோலியது. 1993-ல் நரசிம்ம ராவ் பெய்ஜிங்கில் ஒப்பிட்ட ‘எல்லை சமாதான உடன்படிக்கை’ முக்கியமானது. இரு தரப்பும் சில இடங்களில் கருத்துவேறுபாடு கொண்டிருந்தாலும், பெருமளவில் எல்லைகள் வரையறுக்கப்பட்டன.

2003-ல் பிரதமர் வாஜ்பாயியின் விஜயத்தின்போது நெருக்கம் கூடியது. கொள்கையளவில் இரண்டு சமரசங்கள் மேற்கொள்ளப்பட்டன. 1975-ல் அதுவரை முடியாட்சியாக இருந்த சிக்கிம், இந்தியாவில் ஒரு மாநிலமாக இணைந்தது; இதை அங்கீகரிக்க மறுத்துவந்த சீனா, தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டது. கைம்மாறாக, இந்தியாவும் திபெத் குறித்த தன் நிலைப்பாட்டைத் தளர்த்திக்கொண்டது. தலாய் லாமாவுக்கு அடைக்கலம் தரும் அதேவேளையில், திபெத்தை சீனாவின் பகுதியாக அங்கீகரிக்க முன்வந்தது. 2006-ல் பல ஆண்டுகள் மூடப்பட்டுக் கிடந்த, சிக்கிமையும் திபெத்தையும் இணைக்கும் நாதுல்லா கணவாய் திறக்கப்பட்டது.

தொடரும் சிக்கல்கள்

என்றாலும், இன்றளவும் தீர்வை எட்ட முடியாத பகுதிகள் பல உண்டு. முதலாவதாக, காஷ்மீரின் ஒரு பகுதியான அக்சை சின் சீனாவின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இந்தப் பகுதிக்கு இந்தியா உரிமை கோரிவருகிறது. இரண்டாவதாக, அருணாச்சல பிரதேசத்தின் தவாங் என்கிற பகுதியைச் சீனா கோரிவருகிறது. மாநிலத்தின் மற்ற பகுதிகளைப் போலவே இப்பகுதி மக்களும் 1950 முதல் தங்கள் பிரதிநிதியை இந்திய நாடாளுமன்றத்துக்கு அனுப்பிவருகிறார்கள். சீனாவின் இந்தக் கோரிக்கையை இந்தியா தீர்மானமாக மறுத்துவருகிறது.

மூன்றாவது பிணக்கு டோக்லாமில் ஏற்பட்டது. பூடானில் இருக்கிறது டோக்லாம். இது இந்தியா, சீனா, பூடான் ஆகிய மூன்று நாடுகளின் சந்தியில் இருக்கிறது. இந்தப் பகுதியில் 2017-ல் சாலைகளை விரிவாக்கத் தலைப்பட்டது சீனா. எதிர்த்தது இந்தியா. இரண்டு நாட்டுத் துருப்புகளும் எதிரெதிராக நின்றுகொண்டன. இந்த நிலை 73 நாட்களுக்கு நீடித்தது. மேலும், சீனா தொடர்ந்து பாகிஸ்தானை ஆதரித்துவருகிறது. சமீபத்தில், காஷ்மீர் பிரச்சினையை ஐநா சபையில் எழுப்பியது. இவையெதுவும் இந்திய அரசுக்கு உவப்பானவை அல்ல.

2013-ல் சீனா ‘பட்டுச் சாலை கட்டுத் திட்ட’த்தை முன்னெடுத்தது. சுமார் 36 உலக நாடுகளை சீனாவுடன் இணைக்கும் திட்டம் இது. சாலைகள், ரயில் தடங்கள், நீர்வழிப் பாதைகள், குழாய்கள், கேபிள்கள் என்று இந்த இணைப்பு பலவாறாக இருக்கும். இந்தத் திட்டத்துக்காகச் சீனா பல நாடுகளுக்கு நிதியுதவியும் கடனும் வழங்குகிறது. பல ஆசிய ஐரோப்பிய நாடுகள் திட்டத்தை ஆதரிக்கின்றன. இந்தியா எதிர்க்கிறது. பாகிஸ்தானையும் சீனாவையும் இணைக்கும் தடமானது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியின் வழியாக இருக்கும் என்பது ஒரு காரணம். திட்டம் முழுமையானால், இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீனாவின் ஆதிக்கம் அதிகரிக்கக்கூடும் என்பது இன்னொரு காரணம். இந்தியாவும் சீனாவும் வேறு தளங்களில் ஒத்துழைப்பதற்கு, இந்தியா இந்தத் திட்டத்தை எதிர்ப்பது ஒரு தடையாக இருக்காது என்று சீனா சொல்லிவருகிறது. இருந்தாலும், இந்தியாவின் எதிர்ப்பு சீனாவுக்குச் சர்வதேச அரங்கில் தர்மசங்கடத்தை ஏற்படுத்தவே செய்கிறது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

எல்லைப் பிரச்சினையும் அதிகாரப் போட்டியும் தொடர்ந்தாலும் கடந்த 40 ஆண்டுகளில் இந்திய - சீன வர்த்தகம் பல மடங்கு வளர்ந்திருக்கிறது. கடந்த ஆண்டு இது ரூ.70,000 கோடியைத் தாண்டியது. இந்தியாவின் பெரிய வர்த்தகப் பங்காளி சீனாதான். எனில், மொத்த வர்த்தகத்தில் இந்தியாவின் ஏற்றுமதி 20%தான். வர்த்தகத்தில் சமநிலை பேண, சீனா கூடுதல் இந்தியப் பொருட்களை வாங்கிக்கொள்வது குறித்து இந்தச் சந்திப்பில் பேசப்படலாம்.

வரலாற்றுத் தேவை

பிணக்குகளை மீறி இந்தியாவும் சீனாவும் இணங்கிப்போவதென்பது வரலாற்றுத் தேவையாக உணரப்படுகிறது. அதற்காக, 2018 ஏப்ரலில் சீனாவின் பாரம்பரியச் சிறப்புமிக்க வுகான் நகரில் பிரதமர் மோடியும் அதிபர் ஜி ஜின் பிங்கும் சந்தித்தனர். இது முறைசாராச் சந்திப்பு எனப்பட்டது. இதில் தீர்மானமான அட்டவணைகளும் அதிகாரிகள் சூழ்ந்த கூட்டங்களும் உடன்படிக்கைகளும் இருக்காது. மாறாக, தலைவர்கள் நீண்டநேரம் அளவளாவுவதற்கான சூழலும் காலமும் இருக்கும். அவர்கள் நட்புரீதியாக நெருங்கிவருவது பல சிக்கல்களைத் தீர்க்க உதவும் என்பதால் இந்த ஏற்பாடு. வுகான் சந்திப்பு டோக்லாம் வெப்பத்தைக் குறைக்க உதவியது. அந்தச் சந்திப்பை அடியொற்றி இரண்டாவது சந்திப்பு மாமல்லபுரத்தில் நடக்கவிருக்கிறது.

‘பல்லவர் கோன் கண்ட மல்லைபோல/ பாரெங்கும் தேடினும் ஊரொன்றும் இல்லை/ கல்லிலே கலை வண்ணம் கண்டான்’ என்று கண்ணதாசன் எழுதி ஆண்டுகள் அறுபது கடந்துவிட்டன. கண்ணதாசன் கண்ட மாமல்லபுரத்தின் (மல்லை) குடைவரைக் கோயில்களையும், பஞ்சபாண்டவர் ரதங்களையும், அர்ச்சுனன் தபசு சிற்பத்தையும் காணப்போகும் பார்வையாளர்கள் உலகின் சக்தி மிகுந்த இரண்டு தலைவர்கள். தலைவர்களுக்கிடையில் எண்ணற்ற பிரச்சினைகள் இருப்பது உண்மைதான். இந்தப் பல நாள் பிரச்சினைகளுக்கு மாமல்லபுரக் கடற்கரையில் ஒரே நாளில் தீர்வு கண்டுவிட முடியாதுதான். ஆனால், சமரசத்துக்கான திசைவழிகளைத் தலைவர்களால் காண முடியும். அப்போது மாமல்லபுரம், கல்லின் கலை வண்ணத்துக்காக மட்டுமல்ல; இந்திய - சீன நல்லுறவின் வண்ணத்துக்காகவும் வரலாற்றில் இடம்பெறும்.

- மு.இராமனாதன்,

ஹாங்காங்கின் பதிவுபெற்ற பொறியாளர்.

தொடர்புக்கு: mu.ramanathan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x