Published : 07 Oct 2019 07:10 AM
Last Updated : 07 Oct 2019 07:10 AM

பதவியிலிருந்து நீக்கப்படுவாரா ட்ரம்ப்?

தாமஸ் எல். ஃப்ரீட்மன்

பதவிநீக்கக் குற்றச்சாட்டு பற்றிப் பேசப்போகிறேன் இப்போது. அமெரிக்க மக்களிடையே ஒரு துடிப்பு காணப்படுகிறது. சிலர் இன்னும் அதிபர் ட்ரம்ப்பை ஆதரிக்கத்தான் செய்கிறார்கள். ஆனால், பெரும்பாலானோர் அவரால் மிகவும் களைப்படைந்துபோய் அவரை வெறுக்கிறார்கள். அதனால்தான், அவரது சமீபத்திய சீற்றம் அவருக்கே மிகவும் ஆபத்தானது.

பதவிநீக்கம் செய்யத் தகுந்த ஒரு குற்றத்தை அவர் செய்தார் என்று பல குடியரசுக் கட்சியினர் அறிவார்கள் என்று நாம் அறிவோம் என்று அவர் அறிவார். ஒரு விசிலூதித்தன்மையிலான புகாரை சி.ஐ.ஏ. அதிகாரி ஒருவர் செய்திருக்கிறார். ஜோ பிடெனுக்கு எதிரான, பொய்யான ஊழல் புகாரை விசாரித்தால் ராணுவ உதவி செய்வதாக உக்ரைன் அதிபரிடம் ட்ரம்ப் பேரம் பேசியிருப்பதை முன்னிட்டு அந்தப் புகாரை, அந்த அதிகாரி செய்திருக்கிறார்.

இது ட்ரம்ப்பைப் பதவிநீக்கம் செய்வதற்கு உத்தரவாதம் அளிப்பது மட்டுமல்ல, நாட்டை ஒரு உள்நாட்டுப் போருக்குள் ஆழ்த்திவிடாமல் இதைச் செய்ய முடியும் அல்லது ஜனநாயகக் கட்சியினர் நான்கு விஷயங்களில் உறுதியாக இருந்தால் ட்ரம்ப் மறுமுறை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படுவதையும் தடுக்க முடியும். முதலாவது, ட்ரம்ப்புக்கு எதிரான குற்றச்சாட்டை வைத்திருப்பவர் எந்தச் சார்புமற்ற ஒரு விசிலூதி, ஒரு புலனாய்வு அதிகாரி, அவருக்கு உள்ளிருக்கும் ஆட்களே உதவியிருக்கிறார்கள்.

நிச்சயம், அவரை ஹிலாரி கிளிண்டனின் ரசிகராக மாற்றி, அதைக் கொண்டு தன்னைப் பதவியிலிருந்து தூக்கியெறிவதற்கான ஜனநாயகக் கட்சியினரின் முயற்சியாகக் காட்டி, தன் தொண்டர் குழாமைச் சூடேற்றிவிடுவார் ட்ரம்ப். ஆனால், விஷயமானது தற்போது தோன்றுவதைப் போல, அதாவது அரசியல் சார்பற்ற சி.ஐ.ஏ. அதிகாரியும் அவர்களைப் போன்ற அரசு ஊழியர்களும் அரசமைப்பின் மேல் அதிபர் எடுத்துக்கொண்ட உறுதி மொழியை அவரே மீறும்போது தாங்கள் எடுத்துக் கொண்ட உறுதிமொழியை அவர்கள் மீறாமல் செயல்படுவார்களானால் - ட்ரம்ப்பும் குடியரசுக் கட்சியினரும் நிச்சயம் பிரச்சினைக்குள்ளாவார்கள்.

அரசியல் பேராசை

இந்த விவகாரத்தைப் பொறுத்தவரை விஷயம் துல்லியமாக இருக்கிறது. இதற்கு இடையே புகுந்து ஜனநாயகக் கட்சியினர் ஏதும் செய்துவிடக் கூடாது. அரசியல் பேராசை காரணமாக சட்டத்தை மீறி நடந்துகொண்ட அதிபர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு அரசியல் சார்பற்ற அரசு ஊழியர்கள் அரசுக்கு உள்ளிருந்தே செயல்படுகிறார்கள் என்பதுதான் விஷயம்.

பழம்பெரும் கட்சியான குடியரசுக் கட்சியின், அதிதீவிர அடிமை மனப்பான்மை கொண்டவர்களான லிண்ட்சே கிரகாம் போன்ற ஒருசிலரைத் தவிர, பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதுவரை வாயைத் திறக்கவேயில்லை. இந்தக் குற்றச்சாட்டு துல்லியமானது என்பதற்கும் அவர்களின் நாசியையும் இந்த விவகாரத்தின் நாற்றம் எட்டிவிட்டது என்பதற்கும் இதுவே அடையாளம்.

இரண்டாவதாக, அரசியல் சாராத, மிகுந்த நேர்மையாளரான அரசு ஊழியர் இன்னொருவர் ட்ரம்ப்புக்கும் அவரது வழக்கறிஞர் ரூடி கியுலியானிக்கும் எதிராகச் சாட்சி கூறுவார். அவர்தான் மாஷா யோவனோவிட்ச். உக்ரைனுக்கான முன்னாள் அமெரிக்கத் தூதர். அவருக்குப் பணிக்கப்பட்ட வேலைக்குச் சில மாதங்களுக்கு முன்பாகக் கடந்த மே மாதம் அவர் திடீரென்று தடுத்துவைக்கப்பட்டார். வெளியுறவுத் துறையில் உள்ள என் நண்பர்கள் யோவனோவிட்சைப் பற்றி மிக உயர்வாக என்னிடம் கூறியிருக்கிறார்கள். ஜோ பிடெனைக் கீழிறக்குவதற்காக உக்ரைன் அரசாங்கத்துடன் கைகோக்கும் கியுலியானியின் முயற்சிகளை எதிர்த்ததால் அவர் அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார் என்பது தெளிவு.

நம் தேர்தலில் வெளிநாட்டுத் தலையீட்டைத் தடுக்க முயன்ற அமெரிக்கத் தூதர் ஒருவரை, அதுவும் நல்ல பெயர் பெற்றிருப்பவரை அவதூறு செய்து கியுலியானியையும் ட்ரம்ப்பையும் ஆதரிப்பதற்கு எவ்வளவு ஆர்வம் கொண்டிருக்கின்றனர் குடியரசுக் கட்சியினர்! மூன்றாவதாக, இந்த வழக்கு மக்கள் புரிந்துகொள்வதற்கு மிகவும் எளிமையானது: உக்ரைன் பிரதமரை ட்ரம்ப் அழைத்தார்; ரஷ்ய ஊடுருவலுக்கு எதிராக அமெரிக்க ராணுவத்தின் உதவியை உக்ரைன் பிரதமர் எதிர்பார்த்தார், அவரிடம் ஒரு பேரத்தை ட்ரம்ப் பேசினார்; பிடெனுக்கு ஈடாகத் துப்பாக்கிகள், அதாவது ராணுவ உதவி.

இறுதியாக, ட்ரம்ப்பின் தொண்டர்கள் அவரை விட்டுக்கொடுக்க மாட்டார்கள் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. ஏனெனில், அவர்கள் இன்று முக்கியமான வாக்காளர்கள் இல்லை. மறுபடியும் தேர்ந்தெடுக்கப்படுவதற்குத் தனது விசுவாசிகளைத் தாண்டிய வட்டத்தின் வாக்குகள் ட்ரம்ப்புக்கு வேண்டும். மிதவாதக் குடியரசுக் கட்சியினர், கட்சி சாராதவர்கள், புறநகர்ப் பெண்கள் என்று
2016-ல் அவருடைய வெற்றிக்குக் காரணமான ஆனால், 2018-ல் அவரைக் கைவிட்டு ஜனநாயகக் கட்சியினர் நாடாளுமன்றத்தில் ஆதிக்கம் செலுத்தக் காரணமான அந்தத் தரப்பினரின் ஆதரவு வேண்டும். 2020-ல் அவர்கள் என்ன செய்வார்கள்?

தொங்கிக்கொண்டிருக்கும் கேள்வி

உக்ரைனில் ட்ரம்ப் நடந்துகொண்ட விதம் குறித்த பதவிநீக்க விவகாரத்தின் மேல் தொங்கிக்கொண்டிருக்கும் கேள்வியை ஒருசிலராவது யோசிப்பார்கள் என்று நம்புகிறேன்: மறுதேர்தல் என்ற இக்கட்டை வைத்துக்கொண்டே ட்ரம்ப் இப்படி நடந்துகொள்வாரென்றால், மறுபடியும் தேர்ந்தெடுக்கப்பட்டால் எப்படி நடந்துகொள்வார்? அமெரிக்கா ஒரு வாழைப்பழக் குடியரசாக ஆகிவிடும். இந்தக் காரணங்கள் அனைத்துக்காகவும்தான் ஜனநாயகவாதிகள் மிகவும் பண்பட்ட முறையில் நடந்துகொண்டு இந்த வழக்கைக் கொண்டுசெலுத்த வேண்டும்.

ஒரே ஒரு செய்தித் தொடர்பாளர் மட்டுமே பேச வேண்டும். மற்றவர்களெல்லாம் வாயை மூடிக்கொண்டிருக்க வேண்டும். தேர்ந்த வழக்கறிஞர்களைக் கொண்டு சாட்சிகளைக் கேள்வி கேட்க வேண்டும்; அரசியல் சாராத சாட்சிகளின் மீது கவனம் செலுத்த வேண்டும்; தங்களின் அதிபர் தேர்தல் வேட்பாளர்களை இந்தப் பதவிநீக்க விவகாரத்திலிருந்து தள்ளியிருக்கச் செய்துவிட்டு, அமெரிக்காவுக்கு மறுபடியும் புத்துயிரூட்டி அதை ஒருங்கிணைப்பதில் அவர்களை அக்கறை செலுத்தச் செய்ய வேண்டும்.

சங்கடமானது; சரியானது

அடுத்த அதிபர் தேர்தல் நெருங்கிவரும் வேளையில் ட்ரம்ப்பைப் பதவிநீக்கம் செய்வதென்பது ரொம்பவும் சங்கடமானது. ஆனால், சரியான விஷயத்தைச் செய்வதென்பது பெரும்பாலும் சங்கடமாகவும் ஏற்றுக்கொள்ள முடியாததாகவும்தான் இருக்கும். எப்போது இதைச் செய்தால் சங்கடமாக இருக்குமோ அப்போதே செய்யும்போதுதான் அதுவே சரியான செயல் என்பதன் அடையாளம். 2020-ல் தேர்தலே இல்லை என்பதுபோல நினைத்துக்கொண்டு அவையில் பதவிநீக்கத் தீர்மானத்தை ஜனநாயகக் கட்சியினர் கொண்டுவர வேண்டும். அதேபோல், பதவிநீக்க விவகாரம் ஏதும் இல்லை என்பதுபோல் 2020 தேர்தலை அவர்கள் எதிர்கொள்ள வேண்டும்.

அரசியல் சாராத விசிலூதிகளும், பிற அரசு ஊழியர்களும் ட்ரம்ப் விவகாரத்தை முன்னின்று கவனித்துக்கொள்வதற்கு ஜனநாயகக் கட்சியினர் வழிவிட வேண்டும். பணிவான அந்தத் தேசப் பற்றாளர்கள் இதைத் தொடங்கிவைத்தார்கள். அவர்களின் நம்பகத்தன்மை தாக்குப்பிடிக்கும் வரையில் இந்த விவகாரம் தாக்குப்பிடிக்கும். அவர்களின் நம்பகத்தன்மைதான் 2018-ல் ஜனநாயகக் கட்சியினரை அவைக்குக் கொண்டுவந்த ஊசலாடும் வாக்காளர்களிடம் - அதாவது, இப்படியும் இல்லாத அப்படியும் இல்லாத வாக்காளர்களிடம் - செல்வாக்கு செலுத்தும். அவர்களெல்லாம் அரசியல் கட்சி சார்பற்றவர்கள், மிதவாதக் குடியரசுக் கட்சியினர் மற்றும் புறநகர்ப் பெண்கள். அவர்கள்தான் ட்ரம்ப்பைத் தோற்கடிக்கப்போகிறவர்கள்.

நியூயார்க் டைம்ஸ்,
சுருக்கமாகத் தமிழில்: ஆசை

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x