Published : 07 Oct 2019 07:02 AM
Last Updated : 07 Oct 2019 07:02 AM

மோசடிகளைத் தடுக்கட்டும் ‘ஜிஎஸ்டி - ஆதார்' இணைப்பு 

‘நாடு முழுவதற்கும் ஒரே ஜிஎஸ்டி' சட்டம் நிறைவேறிய 2016 முதல் உருவாக்கப்பட்ட ஜிஎஸ்டி கவுன்சில், வரி விகிதங்களை அவ்வப்போது மாற்றியமைத்தும் வரி நிர்வாகத்தைச் சீரமைத்தும் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. அரசாங்கம், நுகர்வோர், உற்பத்தியாளர்கள் அல்லது விநியோகஸ்தர்கள் என்று அனைத்துத் தரப்பினரின் நலன்களையும் இந்த அமைப்பு தொடர்ந்து கருத்தில்கொண்டு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. மாநிலங்கள் தனியாக வணிக வரியையும் மத்திய அரசு உற்பத்தி, சுங்கம், வருமானம், நிறுவனம் ஆகிய வரிகளையும் நிர்வகித்தபோதும் வரி ஏய்ப்பு என்பது தீராத நோயாக இருந்தது. இப்போதும் அது வெவ்வேறு வகையில் தலைகாட்டிக்கொண்டிருக்கிறது.

மத்திய, மாநில அரசுகளுக்குக் கிடைக்க வேண்டிய வரி வருவாயைச் சிலர் சட்டத்தில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தி, அரசுக்குச் செலுத்தாமல் ஏமாற்றுகின்றனர். ஏற்றுமதி செய்ததாகப் போலி ஆவணங்களைக் கொடுத்து, ஏற்றுமதி மானியத்தையும் பெறுகின்றனர். செப்டம்பர் மாதத்தின் முற்பகுதியில் வருவாய்ப் புலனாய்வுத் துறை இயக்ககமும் பொதுச் சரக்கு, சேவை வரிக்கான உளவுப் பிரிவும் நாட்டின் 336 இடங்களில் மேற்கொண்ட திடீர் சோதனைகளில் இந்த மோசடிகள் அம்பலமாயின.

ஏற்றுமதியாளர்கள் சிலரும் அவர்களுக்குச் சரக்குகளை அனுப்பும் பலரும் கூட்டு சேர்ந்து போலி ஆவணங்கள் மூலம் அரசுக்குப் பெரும் வருவாய் இழப்பை ஏற்படுத்தியுள்ளனர். இல்லாத நிறுவனங்கள் மூலம், அனுப்பாத சரக்குகளுக்கு இடுபொருள் வரியாகக் கணக்குக் காட்டி ரூ.470 கோடி மதிப்புக்கு மோசடி செய்துள்ளனர். ஏற்றுமதியாளர்கள், சரக்கு அனுப்பியோர் என்று அவர்கள் அளித்த முகவரிகள் அனைத்தும் போலியானவை. இதனால், ஏற்கெனவே திருப்பி அளித்த ரூ.450 கோடி வரி திருப்புத் தொகையைப் பெற்றவர்கள் யார் என்று விசாரித்துவருகின்றனர்.

2017 ஜூலையில் ஜிஎஸ்டி அமலுக்கு வந்த நாளிலிருந்து இதுவரை அங்கும் இங்குமாக ரூ.45,682 கோடிக்கு வரி வருவாய் மோசடிகள் நடந்துள்ளன. இனி, வியாபாரிகள் ‘ஜிஎஸ்டி' பதிவுசெய்துகொள்ளும்போது அவர்களுடைய ‘ஆதார்' எண்ணையும் இணைத்தே பதிவுசெய்ய வேண்டும் என்று பரிந்துரைக்க ஜிஎஸ்டி கவுன்சில் முடிவெடுத்துள்ளது; போலி முகவரி, போலி நிறுவனம் போன்ற மோசடிகளைக் களைய இது உதவும். வரி விதிப்பு, வரி வசூலிப்பு, மானியம் திருப்பியளிப்பு என்று அனைத்தும் டிஜிட்டல் மயமாகிவிட்டதால், இனி ஏற்றுமதியாளர்கள் உள்ளிட்டோரின் சொந்தத் தரவுகளையும் பதிவேற்றம் செய்வதன் மூலம், அரசிடம் பணம் கோரிப் பெறுவோர் உண்மையான பயனாளிகள்தானா என்று சரிபார்த்துவிட முடியும்.

புதிய வியாபாரிகள் தங்களுடைய ஜிஎஸ்டி பதிவின்போதே ஆதார் மற்றும் விரல் ரேகை உள்ளிட்டவற்றையும் அளிப்பது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. இதை அனைவருக்கும் விரிவுபடுத்தினால், திட்டமிட்டு மோசடி செய்யும் கும்பல்களின் செயல்கள் ஓய்ந்துவிடும். 2020 முதல் இதை அமலுக்குக் கொண்டுவர அரசும் திட்டமிட்டுள்ளது. ஜிஎஸ்டி-ஆதார் இணைப்பு மோசடிகளைத் தடுத்து வரி வருவாயைப் பெருக்கட்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x